Published : 29 May 2017 11:09 AM
Last Updated : 29 May 2017 11:09 AM

நிரந்தர வருமான திட்டங்களில் எதை தேர்ந்தெடுப்பது?

நிரந்தர வருமானம் கொடுக்கும் திட்டங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் வரி அமைப்புகள், வரிச்சலுகைகள், வருமான வாய்ப்புகள் குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம்.

பாதுகாப்பு முக்கியமா?

செய்யப்பட்ட முதலீடும் பாதுகாப் பாக இருக்க வேண்டும், அதன் மூலம் நிரந்தரமாக வருமானமும் கிடைக்க வேண்டும் என்றால் தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டங்கள், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள், காப் பீட்டு நிறுவனங்கள் வழங்கும் ஆண்டு திட்டங்கள் ஆகியவை உள்ளன.

தபால் நிலைய மாதாந்திர வருமான திட்டத்தில், வங்கி பிக்சட் டெபாசிட்டை விட கூடுதலான வட்டி கிடைக்கிறது. ஜூன் 30-ம் தேதிக்குள் முதலீடு செய்யும் பட்சத்தில் 7.7 சதவீத வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்த தொகையை முன்கூட்டியே எடுக்க முடியும். ஆனால் ஓரிரு சதவீத அபராதம் செலுத்த வேண்டும்.

அதே சமயம் இந்த திட்டத்தில் தனிநபர் அதிகபட்சம் ரூ.4.50 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். கூட்டு கணக்கு வைத்திருந்தால் ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் மூலம் தனிநபருக்கு கிடைக்கும் அதிகபட்ச ஆண்டு வரு மானம் ரூ.34,650. இந்த வட்டித் தொகை உங்களது வருமானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, உங்களது வரி வரம்புக்கு ஏற்ப வரித்தொகை செலுத்த வேண்டும். 30% வரம்புக்குள் இருப்பவ ராக இருந்தால், நிகர வட்டி 5.40 சதவீதமாகவும், 20 சதவீத வரம்புக்குள் இருப்பவராக இருந்தால் நிகர வட்டி 6.10 சதவீதமாகவும் இருக்கும்.

நீங்கள் மூத்த குடிமக்களாக இருக்கும் பட்சத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை (தபால் நிலையம்) தேர்ந்தெடுக்கலாம். 55 வயதுக்கு மேல் இருப்பவர்கள் கூட இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஜூன் 30-க்கு முன்பாக முதலீடு செய்யும் பட்சத்தில் இந்த திட்டத்துக்கு 8.40% வட்டி கிடைக் கும். முதலீட்டு காலம் ஐந்தாண்டுகள் என்றாலும் ஓர் ஆண்டுக்குப் பிறகு 1.50 சதவீத அபராதத்துடன் முதலீட்டை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு 80 சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். ஆனால் வட்டி மூலம் கிடைக்கும் தொகைக்கு, சம்பந் தப்பட்டவரின் வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள ஆண்டு திட்டங்கள் மற்றுமொரு வாய்ப்பு. இந்த திட்டத்தில் மொத்த தொகையும் முதலீடு செய்யும் பட்சத்தில், ஆயூள் முழுக்க மாதாந்திர வருமானம் கிடைக்கும். ஆனால் கிடைக்கும் வருமானம் மிகவும் குறைவு. பணவீக்கத்துக்கு ஏற்ப கிடைக்கும் தொகை மாறாது. அதே சமயத்தில் உங்களது தொகையையும் எடுக்க முடியாது.

உதாரணத்துக்கு எல்ஐசி ஜீவன் அக்‌ஷய் 6 திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் 7 சதவீத வட்டி கிடைக்கும். 80 வயது வரை இந்த திட்டத்தில் இருந்து வருமானம் பெற முடியும்.

சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப முதலீட்டை மாற்றும் முதலீட்டாளர்களுக்கு தபால் நிலையங்களில் இருக்கும் சேமிப்பு திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

கொஞ்சம் ரிஸ்க் எடுப்பவர்களுக்கு?

வங்கிகளை விட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) டெபாசிட் களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. ஆனால் நிறுவனங்களின் தர மதிப்பீட்டை முதலீடு செய்ய வேண்டும். ஏஏ+ தர மதிப்பீட்டுக்கு கீழ் இருக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் டெபாசிட்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

அதிக தர மதிப்பீடு இருக்கும் என்பிஎப்சி-க்கள் ஐந்தாண்டு டெபாசிட் களுக்கு 7.25%முதல் 7.95% வரை வட்டி வழங்குகின்றன. இதில் முதலீட்டுக்கு என எந்த எல்லையும் கிடையாது. ஆனால் கிடைக்கும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டி இருக்கும்.

வரியை சிறப்பாக கையாளுவது முக்கிய திட்டமாக இருந்தால் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம். இதற்கான `மன்த்லி இன்கம் ஸ்கீம்கள்’ என்னும் பெயரில் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் முதலீடு செய்து, மூன்று வருடங்களுக்கு, முன்பாக மாதாந்திர வருமானம் பெறும்பட்சத்தில் குறுகிய கால ஆதாய வரி செலுத்த வேண்டி இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு கழித்து வருமானம் பெறும்பட்சத்தில் பணவீக்கத்தை (indexation)அடிப்படையாக வைத்து வரி செலுத்தினால் போதும்.

அதனால் கடன் சார்ந்த பண்ட்களில் முதலீடு செய்ய விரும்புவோர், தேவையை கணித்து மூன்று ஆண்டு களுக்கு முன்பு முதலீடு செய்யலாம்.

- aarati.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x