Last Updated : 11 Jul, 2016 10:58 AM

 

Published : 11 Jul 2016 10:58 AM
Last Updated : 11 Jul 2016 10:58 AM

மீண்டு(ம்) வருகிறது பிபிஎல்

ஒரு காலத்தில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் ஆக்கிரமித்திருந்த ஒரு பிராண்ட் பிபிஎல். பிரிட்டிஷ் பிசிக்கல் லேபரட்டரீஸ் என்பதன் சுருக்கம்தான் பிபிஎல்.

2002-ம் ஆண்டில் பிபிஎல் நிறுவன டெலிவிஷன் விற்பனை 20 லட்சம் எனும்போதே இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

டெலிவிஷன், ரேடியோ, டேப் ரிகார்டர், ரெப்ரிஜிரேட்டர் என வீட்டு உபயோக மின்னணு உற்பத்தியில் இந்நிறுவனத் தயாரிப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

வாக்குவம் கிளீனர் மட்டுமின்றி சமையல் எரிவாயு அடுப்புகளும் பிபிஎல் பிராண்டு பெயரில் வெளிவந்து இல்லத்தரசிகளின் இதயத்தில் இடம்பிடித்து சமையலறையையும் அலங்கரித்தது.

சில பல அலுவலகங்களில் பிபிஎல் ஜெராக்ஸ் இயந்திரங்களும் பல நகல்களை எடுத்துத் தள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தன.

வாக்குவம் கிளீனரை வீடு வீடாகச்சென்று பிரபலப்படுத்தும் முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியதும் இந்த நிறுவனம்தான்.

அகலத் திரை டிவி, முப்பரிமாண டிவி, கம்ப் யூட்டர் டிவி என பல தொழில்நுட்ப அறிமுகத்தோடு டிவிக்களை இந்தியச் சந்தையில் கொண்டு வந்ததும் பிபிஎல்தான். இதேபோல விசிஆர் எனப்படும் வீடியோ ரெகார்டு பிளேயர் இந்தியச் சந்தையில் வந்ததும் பிபிஎல் பெயரில்தான். அதேபோல கைக்கடக்கமான போர்டபிள் சிடி பிளேயரும் இந்நிறுவனத்துக்கு மகுடம் சேர்த்தது.

``ஹோம் தியேட்டர்’’ எனப்படும் வீடுகளில் திரைப்பட அரங்கில் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை அளித்ததிலும் பிபிஎல் தயாரிப்புகள்தான் முன்னோடியாகும்.

அதேபோல ஃபிராஸ்ட் பிரீ எனப்படும் ஐஸ் உறையாத ரெப்ரிஜிரேட்டர்கள், குளோரோ புளோரோ கார்பன் (சிஎப்சி) எனப்படும் வளிமண்டலத்தை பாதிக்கும் வாயுவை வெளியிடாத ரெப்ரிஜிரேட்டரை முதலில் அறிமுகப்படுத்தியதும் இந்நிறுவனம்தான். வாஷிங் மெஷின் தயாரிப்பையும் இந்நிறுவனம் விட்டுவைக்கவில்லை.

தென்னிந்தியாவில் வலுவான டீலர்கள் ஒருங்கிணைப்பு, வட இந்தியாவில் பெரிய டீலர்கள் மூலம் பிபிஎல் தயாரிப்புகள் எங்கும் கிடைக்கும் வகையில் செய்தது.

2004-ம் ஆண்டு வரை வீட்டு உபயோக மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னணியில் இருந்த பிபிஎல் என்ற நிறுவனம் இப்போது இருந்ததற்கான தடயமே தெரியவில்லை.

பிபிஎல் உருவானது எப்படி?

பிபிஎல் நிறுவனர் டிபிஜி நம்பியார் 1960களில் அமெரிக்காவிலிருந்து லண்டனுக்குக் குடி பெயர்ந்தவர். பூர்வீகம் கேரளம். டெல்லியில் உள்ள ஒபராய் ஹோட்டலில் முதன் முதலில் ஏசி வசதியை ஏற்படுத்தித் தந்த வெஸ்டிங்ஹவுஸ் எனும் நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் சொந்தமாகத் தொழில் தொடங்கவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.

1963-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பிரிட்டிஷ் பிசிக்கல் லேபரட்டரீஸ் (கருவிகள்) தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து பிரிசிசன் அளவீட்டு கருவி தயாரிப்பதற்காக கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆலையைத் தொடங்கினார். பிபிஎல் என்ற பெயரில் தொடங்கப்பட்ட முதலாவது ஆலை இன்னமும் செயல்படுகிறது.

ஆசிய போட்டி தந்த அபரிமித வாய்ப்பு

1982-ம் ஆண்டு ஆசிய போட்டிகள் இந்தியாவில் நடைபெற்ற போது டிவி-க்களின் வரத்து அதிகரித்தது. அப்போது டிவி தயாரிப்பை தொடங்கிய நிறுவனம் இந்தியச் சந்தையில் கோலோச்சத் தொடங்கியது. தொடக்கத்தில் கருப்பு வெள்ளை டிவிக்களே இடம்பெற்றிருந்த காலத்தில் கலர் டிவிக்களை தயாரித்து பலரது இல்லங்களை அலங்கரித்தது.

1990களில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு பல பொருள் தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டது. 28 உற்பத்தி ஆலைகள் இதில் 20 பெங்களூரைச் சுற்றி அமைந்திருந்தது. வெளிநாடுகளுக்கும் இந்நிறுவனம் டிவிக்களை ஏற்றுமதி செய்தது. இவையனைத்துக்கும் ஜப்பானின் சான்யோ நிறுவனத்துடனான ஒப்பந்தமும் முக்கியக் காரணமாகும்.

இதனிடையே ஜப்பானில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் சான்யோ நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பிபிஎல் நிறுவனத்துக்கு சான்யோ நிறுவனத்தால் தொழில்நுட்ப உதவிகளை அளிக்க முடியவில்லை. இரு நிறுவனங்களிடையிலான கூட்டு முறிந்துபோனது. இந்த காலகட்டத்தில் பிபிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட நிதி நிர்வாக பாதிப்பும் நிறுவன பின்னடைவுக்குக் காரணமானது.

இந்த சமயத்தில் கொரிய நிறுவனங்களான எல்ஜி மற்றும் சாம்சங்கின் படையெடுப்பை இந்நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை.

வீட்டு உபயோகப் பொருள் உற்பத்தியை இந்நிறு வனம் முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இருந்தாலும் மருத்துவத் துறைக்கான மின்னணு கருவிகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

1990-களில் இந்நிறுவனத்தின் விற்பனை வருமானம் ரூ. 4,300 கோடியாகும். 2015-ம் ஆண்டு நிறுவனம் சந்தித்த நஷ்டம் ரூ. 8.44 கோடி.

ஜெனித் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பொருள் தயாரிப்பில் ஈடுபடலாம் என்ற பிபிஎல் முயற்சியும் வெற்றிபெறவில்லை.

நம்பிக்கைக் கீற்று

இதனிடையே பிபிஎல் நிறுவனத் தயாரிப்புகளை மீண்டும் தயாரிக்க உதவ பிளிப்கார்ட் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால் பிபிஎல் தயாரிப்புகள் மீண்டும் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் அடைந்துள்ளது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தற்போது சந்தையில் இல்லாத பிபிஎல் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் மிகவும் விசேஷமானது.

மின்னணு பொருள்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய பிளிப்கார்ட் முயன்றது. இதனால் விற்பனையாளர்கள் மூலமான விற்பனை சரிந்தது. இதையடுத்து எல்ஜி மற்றும் வோல்டாஸ் நிறுவனங்கள், ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கினால் அத்தகைய மின்னணு பொருள்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிக்கப்பட மாட்டாது என்று அறிவித்தன. இதனால் பிளிப்கார்டின் மின்னணு விற்பனை கடுமையாக பாதித்தது.

இதை சரி செய்ய பிளிப்கார்ட் கண்டுபிடித்த மாற்று வழிதான் பிபிஎல் நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதாகும்.

ஒருகாலத்தில் சந்தையில் மிகவும் பிரபலமான தயாரிப்பாக விளங்கிய பிபிஎல் நிறுவனத் தயாரிப்புகளை மீண்டும் சந்தைக்குக் கொண்டு வரும் முயற்சியில் பிளிப்கார்ட் இப்போது இறங்கியுள்ளது.

பிபிஎல் நிறுவனத்துக்கு மிகவும் வலுவான விற்பனையாளர் ஒருங்கிணைப்பு நாடு முழுவதும் உள்ளது. இதனால் விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிப்பதில் சிரமம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டே பிளிப்கார்ட் இந்த முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் பிபிஎல் தயாரிப்புகள் சுமார் 1.80 கோடி அளவுக்கு பல வீடுகளில் புழக்கத்தில் உள்ளதும் பிளிப்கார்டின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ரூ. 30 கோடி ஆரம்ப கட்டமுதலீட்டில் நிறுவனத்தை புதுப்பிக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக எல்இடி டிவிக்களைத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த டிவிக்கள் வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டு அவற்றை பிளிப்கார்ட் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்டில் பிளிப்கார்ட் நிறுவனம் பிபிஎல் தயாரிப்புகள் தங்களது ஆன்லைன் மூலம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்தது. அறிவித்த சில மணி நேரங்களிலேயே இணையதளம் முடங்கும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

மீண்டும் களத்தில் இறங்கிய பிபிஎல் டிவிக்கள் பிளிப்கார்ட் மூலம் இதுவரை மாதத்துக்கு 10 ஆயிரம் விற்பனையாகியுள்ளன.

சென்னை, பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களிலிருந்து அதிகம் பேர் பிபிஎல் டெலிவிஷன்களை வாங்கியுள்ளனர்.

விற்பனைக்குப் பிந்தைய சேவை அளிப்பதற்காக 250 சேவை மையங்கள் `ஜீவ்ஸ்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு முன்பாக ரெப்ரிஜிரேட்டர் மற்றும் வாஷிங் மெஷினை அறிமுகப்படுத்த பிபிஎல் திட்டமிட்டுள்ளது.

ஆனால் வீட்டு உபயோகப் பொருள் விற்பனை வருமானத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ. 1,000 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார் பிளிப்கார்டின் அமித் பன்சால்.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிறுவனங்கள் ஒருபுறம் இருந்தாலும், ஏறக்குறைய மூடப்பட்டுவிட்ட ஒரு தொழில் நிறுவனத்துக்கு வாழ்வளித்துள்ளதும் ஆன்லைன் நிறுவனம்தான்.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x