Published : 12 Sep 2016 10:53 AM
Last Updated : 12 Sep 2016 10:53 AM
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை (குறள்: 541) |
சிறு வயதில் நீங்கள் அம்மா செல்லமா, அப்பா செல்லமா? நீங்கள் தவறு செய்தாலும் உங்கள் உடன்பிறப்பு தவறு செய்தாலும் ஒரே மாதிரி தண்டிப்பார்களா உங்கள் பெற்றோர்கள்?
யாரோ தெரியாதவர்கள் அநியாயமாய் நடந்து கொண்டால் பொறுத்துக்கொள்ளும் நம்மால், நம்மைப் பாதுகாக்க வேண்டியவர்கள், நம்மிடம் பாகுபாட்டுடன் நடந்து கொண்டால் பொறுக்க முடிவதில்லை!
அலுவலகத்திலும் அப்படித்தானே! ஒவ்வொரு பணியாளரும் தனது மேலதிகாரி தம்மிடம் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பது இயற்கை தானே?
தாய்க்குத் தனது பிள்ளைகளில் ஒன்றைப் பிடித்துப் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முதலில் பிறந்தவன், ஒரே பெண், கடைக்குட்டி, அதிக சமத்து, ரொம்ப அழகு அல்லது கருப்பு!
அலுவலகங்களிலும் இப்படித்தான்! பணி புரியும் பலரில், மேலதிகாரிக்கு ஓரிருவர் மட்டும் நெருக்கமாகி விடுவார்கள்!
அது திறமையினால் இல்லாமல், அடிக்கடி சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களினாலோ, அல்லது பணியாளர் செய்யும் புகழ்ச்சியினாலோ அமைந்தால் தவறு அல்லவா?
இதை விட மோசமான காரணங்களும் உண்டு. ஆமாங்க, நீங்கள் பார்த்திருப்பீர்களே! சாதி, மதம், இனம் காரணமாக சலுகைகளைத் தருவோரும், பெறுவோரும் உண்டே!
எளிய பணிகளைக் கொடுப்பதில் தொடங்கி, கேட்டவுடன் விடுமுறை, வெளிநாட்டில் பயிற்சி, பதவி உயர்வு என்பவற்றுடன் கூட நிற்காது இந்தப் பாசம்!
பல வருடங்களுக்கு முன்பு நான் வங்கியில் அதிகாரியாக இருந்த பொழுது, சைக்கிள் ரிக்ஷாக்களுக்குக் கடன் கொடுத்ததை விசாரிக்கும் பொறுப்பு ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. பழி சுமத்தப்பட்டவர்கள் இருவர்.
ஒருவர் விண்ணப்பத்தைப் பரிசீலித்து கடனை வங்கியின் நடைமுறைப்படி சிபாரிசு செய்த அதிகாரி. மற்றொருவர் அக்கடனுக்கு ஒப்புதல் அளித்த மேலாளர்.
ரிக்ஷாக்காரர்களில் சிலர் சரியாகக் கட்டாததால் கடன் வசூலாகவில்லை. உண்மையைச் சொல்லப்போனால் அவ்விருவருமே வேலைப் பளுவினால் அக்கடனை வசூலிப்பதில் போதிய கவனம் செலுத்தவில்லை.
ஆனால் விசாரணை அதிகாரி தனது அறிக்கையில் நடந்த தவறுகளுக்கெல்லாம் ஒருவர் மட்டுமே காரணம் என்று எழுதி தன்னுடைய மேலாளர் நண்பரை காப்பாற்றி விட்டார்!
இதனை அறிந்த மற்ற பணியாளர்கள் பெரும் வேதனை அடைந்தனர். நேர்மையாய்ப் பணி புரிவோர் உற்சாகமிழந்தனர். வங்கியின் வர்த்தகம் குறைந்தது!
சில மாதங்களில் மறு ஆய்வில் அந்த அதிகாரிக்குத் தண்டனை குறைக்கப்பட்டு மேலாளர் தண்டிக்கப்பட்ட பின்புதான் நிலைமை சீரானது!
மற்ற சந்தர்ப்பங்களை விடுங்கள். நடந்த தவறை விசாரித்துத் தீர்ப்பு அளிப்பவர் கடவுளைப் போல வேண்டுதல் வேண்டாமை இலாது இருக்க வேண்டுமில்லையா?
தவறு செய்தவர்களுக்கு அவரவர் தவறுகளுக்கு ஏற்றார்ப் போல் தண்டனை வழங்கப்பட்டால்தானே அதை ஏற்பார்கள், திருந்துவார்கள்?
குற்றம் புரிந்தவரைத் தனக்கு வேண்டியவர் என்று தயவு காட்டாமல் அவர் யாராக இருந்தாலும் முறைப்படி தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT