Published : 20 Jun 2016 10:29 AM
Last Updated : 20 Jun 2016 10:29 AM
கடை விரித்தோம் கொள்வாரில்லை’’ என்ற பழமொழியை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ``வீடு கட்டினோம், வாங்குவார் இல்லை,’’ என இனி மாற்றிச் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றன.
இந்திய பொருளாதார வளர்ச்சியில் கட்டமைப்புத் துறை மிக முக்கிய பங்களிப்பை அளிக்கிறது. அதிலும் வீடு கட்டுவது, பலருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு, இந்தியக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான சூழலை அளிப்பது வீடுகள்தான்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் நிலவி வரும் தேக்க நிலை, இத்தொழிலை கடுமையாகப் பாதித்துள்ளது.
தலைநகர் டெல்லியிலும், நிதித் தலைநகராகத் திகழும் மும்பையிலும் 4 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ளன. ஆனால் அவற்றை வாங்கத்தான் ஆள்கள் இல்லை. காலி வீடுகள் பறவைகளின் சரணாலயமாகி வருகின்றன.
அனைவருக்கும் சொந்த வீடு உருவாக்கித் தருவோம் என்ற கோஷத்தை பல அரசியல் கட்சிகள் முன் வைத்தாலும், நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
போறாத காலம்
ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டுள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்துமே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதற்கு முக்கியக் காரணமே இவை கட்டிய வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதுதான்.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த டிஎல்எஃப் நிறுவனத்துக்கு ரூ. 22,202 கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கெனவே திட்டமிட்ட பணிகளை மேற்கொள்ள மாதத்துக்கு ரூ. 200 கோடி தேவைப்படுகிறது. மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த நிறுவனத்திடம் போதிய பணப் புழக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது.
அதிகரித்து வரும் கடன் சுமையைக் குறைக்க இந்த ஆண்டு டிஎல்எப் சைபர் சிட்டி டெவலப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 12 ஆயிரம் கோடி திரட்ட முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது.
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிடெக் நிறுவனம் ரூ. 7,165 கோடி கடன் சுமையோடு, அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தெரியாமல் குழம்பியுள்ளது. கடந்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் சந்தித்த நஷ்டம் மட்டுமே ரூ. 902 கோடியாகும். கடன் சுமையைக் குறைக்க நிறுவனம் வசம் உள்ள நிலத்தை விற்க முடிவு செய்த போதிலும் நிலங்களை வாங்க எவரும் முன்வரவில்லை.
மும்பையைச் சேர்ந்த லோதா டெவலப்பர்ஸ் நிறுவனம் ரூ.13 ஆயிரம் கோடி கடன் சுமையில் உள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாவிட்டாலும் இந்நிறுவனம் கடன் பத்திர வெளியீடு மூலம் நிதி திரட்டியது. ஆனால் நிறுவனத்துக்கு அதிகரித்து வரும் கடன் சுமையால் இந்நிறுவன கடன் பத்திரத்துக்கு வழங்கப்பட்ட தரச் சான்று குறைந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்பிராஸ்டிரக்சர் (ஹெச்டிஐஎல்) நிறுவனம் ரூ.2,730 கோடி கடன் சுமையில் சிக்கியுள்ளது. கடன் சுமையைக் குறைக்க கூடுதல் தளங்களை பிற நிறுவனங்களுக்கு விற்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த செஞ்சுரி ரியல் எஸ்டேட் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கடனுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலையில் உள்ளது. கடன் சுமையைக் குறைக்க நிலத்தையும், அலுவலக பகுதியையும் விற்றுவிட நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதேபோல பெங்களூரைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான பிரஸ்டீஜ் புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.5,500 கோடி கடன் சுமையில் உள்ளது.
கோத்ரெஜ் பிராப்பர்டீஸ் நிறுவனத்துக்கு ரூ. 2,563 கோடியும், இந்தியா புல்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2,818 கோடியும், பர்ஸ்வந்த் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,400 கோடி கடன் சுமை உள்ளது.
இந்த நிறுவனங்கள் அனைத்துமே பல லட்சம் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்பு மற்றும் அலுவலக இட வசதியை ஏற்படுத்தி வருகின்றன.
ரூ. 4 லட்சம் கோடி
நாடு முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் முடங்கியுள்ள வீடுகளின் மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாகும். இவை அனைத்தும் 7 நகரங்களில் முடங்கியுள்ள தொகையாகும், அடுத்த நான்கு ஆண்டுகளில் இது ரூ.7.5 லட்சம் கோடியாக உயரும் என்று இத்துறையினர் அஞ்சுகின்றனர். 50 ஆயிரம் சொகுசு பங்களாக்களும் இதில் அடங்கும். இதில் முடங்கியுள்ள தொகை மட்டும் ரூ.1 லட்சம் கோடியாகும்.
மும்பையில் விற்பனையாகாமல் உள்ள வீடுகளில் மூன்றில் இரண்டு பங்கு வீடுகளின் விலை ரூ. 1 கோடிக்கு மேலாகும். பெங்களூரு, புணே நகரங்களில் தலா ஒரு லட்சம் வீடுகளும், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் தலா 50 ஆயிரம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் உள்ளன.
ஏன் இந்த நிலை?
தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியடைந்த போது அதனுடன் இணைந்து வேகமாக வளர்ந்தது ரியல் எஸ்டேட் துறை. காரணம், இத்துறையினர் அதிக சம்பளம் பெற்றதால், அதை முதலீடு செய்ய தேர்வு செய்தது ரியல் எஸ்டேட்டில்தான்.
குறிப்பாக ஒரு வீடாவது வாங்க வேண்டும் என்ற ஐடி இளைஞர்களின் தீரா வேட்கைக்கு தீனி போடும் வகையில் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடை பரப்பின. தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆள்குறைப்பு, வேலையிழப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் ஏற்பட்ட தேக்க நிலை ஐடி இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. இதனால் வீடு வாங்கும் கனவை பலர் கைவிட்டனர்.
தேக்க நிலை ஏன்?
சர்வதேச சந்தையில் உருக்கு விலை குறைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெருமளவுக்கு சிமென்ட் விலை உயரவில்லை. இருந்தாலும் வீட்டின் விலை மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. 2006-ம் ஆண்டில் ரூ.10 லட்சத்துக்கு வாங்க முடிந்த வீடு இப்போது ரூ.40 லட்சம் விலைக்கு விற்கப்படுகிறது.
மிகைப் படுத்தப்பட்ட விலை உயர்வும் ரியல் எஸ்டேட் துறை சரிவுக்கு முக்கியக் காரணமாகும். மேலும் கட்டுமானத் துறையில் ஈடுபட்ட நிறுவனங்கள் அனைத்துமே உயர் தட்டு மக்களை மனதில் கொண்டே வீடுகளைக் கட்டியுள்ளன. நடுத்தர மற்றும் கீழ்நிலை மக்களின் வாங்கும் சக்தியை அறிந்து வீடுகளை கட்டாததும் இதற்கு முக்கியக் காரணமாகும்.
பல நடுத்தர குடும்பங்களின் பெரும் கனவே வீடு வாங்குவதாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி இவ்வளவு வீடுகள் காலியாக விற்கப்படாமல் இருக்க முடியும்? கட்டுமான நிறுவனங்கள் சந்தையின் தேவையை உணராததே இதற்கு காரணமாகும். யாருக்கு வீடு தேவை, எது போன்ற வீடுகள் தேவை என்பதை உணராமல் வில்லாக்களையும், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டினால் எப்படி விற்க முடியும்.
சென்னை போன்ற நகரங்களில் ஒரு படுக்கை அறை உள்ள வீடுகளை கட்டுவதை பல நிறுவனங்கள் விட்டுவிட்டன. ஒரு சில வாடிக்கையாளர்களை மட்டுமே சந்தித்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தன் விளைவு காரணமாகவே பல வீடுகள் காலியாக உள்ளன
இன்றைக்கும் குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தரப்படும் என்றால் அதற்கு அலை மோதும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
மக்களின் தேவையை உணராமல் கட்டிவிட்டோம், வாங்குவாரில்லை என்று புலம்புவதில் பிரயோஜனமில்லை.
ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT