Published : 01 Aug 2016 02:47 PM
Last Updated : 01 Aug 2016 02:47 PM
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும் (குறள்: 535) |
உங்களுக்கு பலாப்பழம் பிடிக்குமா? நல்ல மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும் சுளை இனிக்குமா, அல்லது கொஞ்சம் வெளிர் மஞ்சளில் பெரியதாக இருக்கும் சுளை சுவைக்குமா? கடையில் நின்று குழம்பியதுண்டா?
எனது நண்பர் ஒருவர் இவ்வகையில் கில்லாடி. இதில் ஒன்று அதில் ஒன்று என்று கேட்டுச் சாப்பிட்டுப் பார்த்து விட்டுத்தான் வாங்குவார்!
வெண்டைக்காயின் முனையை ஒடித்துப் பார்த்து வாங்குவது போல பீர்க்கங்காய் வாழைத்தண்டு என ஒவ்வொன்றிற்கும் ஒரு பரிசோதனை வைத்திருப்பார்!
ஆனால் நம்மில் பலரும் சோம்பேறித்தனம் காரணமாகவோ பழக்கம் காரணமாகவோ இதற்கெல்லாம் நேரம் செலவிடுவதில்லை! வாங்கிய பொருள் சரியில்லை எனத் தெரிந்த பின் நொந்து போவோம். அல்லது சண்டைக்குப் போவோம்.
அண்ணே, இதையெல்லாம் விடுங்கள். வாழ்க்கையில் வீடு, நிலம் வாங்குவது, விற்பது போன்ற முக்கியமான முடிவுகளைக் கூடச் சிலர் நிதானமாக யோசிக்காமல் செய்து விடுகின்றார்களே!
உங்களுக்கு அரிய பதவி உயர்வு கிடைப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
ஆனால் வெகு தொலைவுக்கு இடமாற்றத்தில் செல்ல வேண்டும்.ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று எப்படி முடிவு செய்வீர்கள்?
எதையும் எதிர்பார்க்காதீர்கள் ; சந்தேகப்படுங்கள் (Don't expect;suspect) என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
யோசிப்பதற்கு அதிக நேரம் வேண்டுமா என்ன? காய்கறி மளிகைக் கடை என்றால் சில மணித்துளிகள். மற்ற முக்கியமான முடிவுகள் என்றால் சில மணி நேரமோ சில நாட்களோ!
தற்காலிகமான உணர்வுகளால் உந்தப்பட்டு நிரந்தரமாய் பாதிக்கக் கூடிய முடிவுகளை எடுக்கலாமா?
உணர்ச்சி வசப்படாமல் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுப்பது என்பது ஒரு கலை என்பார்கள் சிலர். இல்லை அது அறிவியல் சார்ந்தது, தர்க்க ரீதியானது என்பர் பலர்.
இதற்கு வல்லுநர்கள் சொல்லும் ஓர் எளிய வழி உண்டு.ஒரு வெள்ளைத் தாளை எடுங்கள்.
ஒரு குறிப்பிட்ட முடிவெடுத்தால் நடக்கக் கூடிய நல்லவை கெட்டவைகளைப் பட்டியலிடுங்கள். ஏற்படக் கூடிய பாதிப்புகளை எல்லாம் எழுதி ஆராய்ந்து பாருங்கள்.
2008ல் ஆந்திராவில் கொடிகட்டிப் பறந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் விவசாயிகளின் தற்கொலைகளையும் அரசின் புதிய சட்டத்தையும் ஏன் எதிர்பார்க்கவில்லை?
உலகெங்கும் 25,000 பணியாளர்களும்சுமார் 60,000 கோடி அமெரிக்க டாலர் சொத்துகளும் இருந்த லேமென் பிரதர்ஸ் திவாலானது ஏன்?
வணிகத்தில் வெற்றி் கிடைக்கும் பொழுதும், நல்லது நடக்கும் பொழுதும், தொடர்ந்து நல்லதே நடக்கும் என்கிற இருமாப்பு , அலட்சியம் வந்து விடுகிறதோ?
ரிஸ்க் மேனேஜ்மெண்ட் (Risk management) என்பது தற்பொழுது பிரபலம். அதாவது வரக்கூடிய, நிகழக்கூடிய அபாயங்களை முன்கூட்டியே சிந்தித்து அவற்றைத் தடுப்பது அல்லது எதிர் கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்துவது.
நாம் எந்த முடிவும் எடுக்கும் முன்பு இந்த அணுகுமுறையை மேற்கொள்வது நல்லது!
வரக்கூடிய துன்பங்களை முன்னதாக அறிந்து காக்காமல் அலட்சியப்படுத்துபவன் பிறகு வருந்துவான் என்கிறார் வள்ளுவர்.
- சோம.வீரப்பன் somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT