Published : 15 Aug 2016 02:54 PM
Last Updated : 15 Aug 2016 02:54 PM

மஹிந்திராவின் டிரைவர் இல்லாத டிராக்டர்!

கூகுள் நிறுவனம் டிரைவர் இல்லாத காரைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறது. பிற கார் தயாரிப்பு நிறுவனங்களும் இத்தகைய கார் தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளன.

டிராக்டர் என்றாலே மஹிந்திரா என்ற அளவுக்கு மிகவும் பரவலாக அறியப்பட்டிருக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் டிரைவர் தேவைப்படாத டிராக்டர் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தடையில்லா போக்குவரத்தை உரு வாக்கும் முயற்சியாக தங்கள் நிறுவனம் டிரைவர் தேவைப்படாத டிராக்டரை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் 70-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசுகையில் பங்குதாரர்களிடையே நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார். அதில் டிரைவர் இல்லா டிராக்டர் உருவாக்கமும் ஒன்றாகும்.

வேளாண் உற்பத்தி அதிகரிப்பில் இத்தகைய டிரைவர் தேவைப்படாத டிராக்டர்களின் பங்கு மிக அதிக அளவில் இருக்கும் என அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

உலகம் முழுவதும் வழக்கமான வாகன போக்குவரத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மஹிந்திரா நிறுவனமும் புதிய மாற்றங்களுடன் கூடிய வாகனத்தை உருவாக்கும் என இப்போதுகூற முடியாது. ஆனாலும் தடையில்லா வாகன போக்குவரத்தை உருவாக்குவதில் நிறுவனம் அயராது முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் மக்கள் தொகை யின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. உலகெங்கிலும் இதுதான் தேவையாக இருந்தாலும் அதை எவருமே வலியுறுத்தவில்லை.

அதேபோல வாகன விபத்துகள் ஏற் படாத சூழலை உருவாக்க வேண்டியதும் அவசியமாக உள்ளது.

பேட்டரி கார் தயாரிப்பில் முன்னோடி யாகத் திகழும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனர் எலன் மஸ்க், வர்த்தக வாக னங்களையும் டிரைவர் தேவையின்றி உருவாக்க முயன்று வருகிறார். அதேபோன்ற சிந்தனையில் மஹிந்திரா நிறுவனமும் டிராக்டர் உருவாக்கத்தில் ஈடுபட்டிருப்பது மிகவும் ஒத்திசைவான கருத்தாகும். டிரைவர் இல்லா டிராக்டரை உருவாக்குவதில் மஹிந்திரா முன்னோடியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் போக்குவரத்து என் பது இரண்டு அம்சங்களை மையமாகத் தான் கொண்டிருக்கும். புதுப்பிக்கத்தக்க மாற்று எரிசக்தியில் செயல்படுபவை மற்றும் டிரைவர் தேவைப்படாதவை என்பதாகத்தானிருக்கும்.

இவ்விரு இலக்குகளை உள்ளடக்கிய வாகனங்களை மஹிந்திரா தயாரிப்பது நிச்சயம் என்று பங்குதார்ரகளிடம் ஆனந்த் மஹிந்திரா உறுதியளித்தார்.

டிராக்டர் என்றாலே மஹிந்திராவின் பெயர் நினைவுக்கு வரும். இனி டிரைவர் இல்லாத டிராக்டர் என்றால் சர்வதேச அளவில் மஹிந்திராவின் பெயர் நிச்சயம் நினைவுக்கு வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x