Published : 09 Jan 2017 10:49 AM
Last Updated : 09 Jan 2017 10:49 AM

பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வால்வோ கார்!

கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்கு உயிர் காக்கும் காற்றுப் பைகள் (ஏர் பேக்) கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வர உள்ளது. இதனால் சிறிய ரகக் கார்களிலும் இனி ஏர் பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

சரி, கார்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தாயிற்று. சாலைகளில் கடந்து செல்வோரின் பாதுகாப்பை யார் உறுதி செய்வது?

2.70 லட்சம் பேர் மரணம்

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் பாதசாரிகளின் எண்ணிக்கை 2.70 லட்சமாகும். இது சாலை விபத்துகளில் உயிரிழப்போரில் 22 சதவீதமாகும். சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழப்போர் எண்ணிக்கை 12.40 லட்சமாகும். பாதசாரிகளின் உயிரைப்பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் நீண்ட நாள் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

சாலையைக் கடக்கும்போது பின்னால் இருந்து முன்னோக்கி வரும் கார் மோதி உயிரிழப்போர் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு காரை வடிவமைத்துள்ளது ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ நிறுவனம். இந்நிறுவனத்தின் வால்வோ வி-40, வி40 கிராஸ் கண்ட்ரி மாடல் கார்கள் சமீபத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. காரின் முன் பகுதி பானட்டில் ஏர் பேக் விரிந்து, பாதாசாரியின் தலையில் அடிபடுவதிலிருந்து காக்கும். பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்தக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது வால்வோ.

தயாரிப்புத் தொழிற்சாலையில் ரோபோக்களை வைத்து சோதித்து பார்க்கப்பட்டது. ஒரு கார் மோதினால் எந்தெந்த திசைகளில் மனிதன் விழுவான் என்பதை அறிந்து அதற்கேற்ப ஏர் பேக் விரிந்துகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக…

பாதசாரிகளின் பாதுகாப்புக்கென முன்பகுதியில் ஒரு ஏர் பேக் உள்ளது. பேனட்டின் அடிப்பகுதியில் இது இருக்கும். முன் பகுதியில் பாதசாரிகளின் நடமாட்டத்தை உணர்த்தும் உணர் கருவிகள் (சென்சார்) உள்ளன. இவை உடனடியாக செயல்பட்டு ஏர் பேக் விரியச் செய்யும். இதனால் பாதசாரிகள் அடிபடுவது தடுக்கப்படும். கார் தயாரிப்பில் இத்தகைய நுட்பம் அறிமுகமாவது உலகிலேயே இது முதல் முறையாகும் என்று நிறுவனத்தின் பொதுமக்கள் தொடர்பு மற்றும் ஊடக பிரிவின் இயக்குநர் சுதீப் நாராயண் கூறினார்.

இந்த இரு கார்களும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டவை. இதில் எல்இடி தார் ஹம்மர் முகப்பு விளக்கு பகுதி இடம்பெற்றுள்ளன. இத்தகைய முகப்பு விளக்கு அமைப்பு இந்நிறுவனத்தின் பிரபல மாடலான எஸ் 90 செடான் மற்றும் எக்ஸ்சி90 எஸ்யுவி ஆகியவற்றில் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இப்போது இவ்விரு மாடல்களிலும் இந்த வசதி இடம்பெற்றுள்ளது.

இதில் முதல் முறையாக நீர்வீழ்ச்சி வடிவமைப்பிலான கிரில், இந்நிறுவனத்தின் எக்ஸ்சி90, எஸ்90 மாடல் கார்களில் உள்ளதைப் போன்ற லோகோ இதில் இடம்பெற்றுள்ளது. உள்புறம் மிக உயர்ந்த தோலினால் ஆன இருக்கை வசதிகளைக் கொண்டது. 3 வெவ்வேறு வண்ணங்களில் வாடிக்கையாளர் தேர்வு செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் இதன் சிறப்பம்சமாகும்.

பாதுகாப்பு அம்சங்கள்

இரண்டு கார்களுமே பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய பாதுகாப்பு சான்று பெற்றவை. காரில் பயணிப்போரை பாதுகாக்க முன்பகுதியில் இரண்டு ஏர் பேக், டிரைவரின் முழங்கால் பகுதியைப் பாதுகாக்கும் மற்றொரு ஏர் பேக் உள்ளிட்டவை உள்ளன.

பக்கவாட்டில் மோதல் நிகழ்ந்தாலும் பாதுகாக்கும் வசதி, ஏபிஎஸ் பிரேக் வசதி, அவசர காலத்தில் பிரேக் பிடிக்கும்போது முன இருக்கையில் பயணிப்போரின் கழுத்து, தண்டுவடப் பகுதி பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு அம்சமும் இதில் உள்ளன. இதில் டிபிஎப் எனப்படும் டீசல் துகல் வடிகட்டி உள்ளது. இது காரிலிருந்து வெளியேறும் மாசின் அளவை பெருமளவு குறைக்கும். அத்துடன் காரில் பயணிப்பவர்களுக்கு சுத்தமான காற்றை அளிக்க உதவுகிறது.

வால்வோ காருக்கான பிரத்யேக அம்சமான 2 லிட்டர் டர்போ சார்ஜுடு டீசல் என்ஜின் உள்ளது. 6 அதிவேக தானியங்கி கியர் சிஸ்டம் உள்ளது. இந்தக் கார்களின் விலை ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையாகும்.

கார்களில் பயணம் செய்வோர் பாதசாரிகளை ஒருபொருட்டாக மதிப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் தங்களது தயாரிப்பு மூலம் விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் பொறுப்புணர்வு தங்களுக்கும் உள்ளது என்பதை வால்வோ நிறுவனம் நிரூபித்துள்ளது. இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களின் விலை அதிகம் என்பது ஒருபுறமிருந்தாலும், பாதசாரிகளும் மனிதர்களே என்ற கண்ணோட்டத்தில் காரை தயாரித்து வெளியிட்டுள்ளது மட்டுமின்றி, பிற கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னோடியாக நல்வழி காட்டியுள்ளது வால்வோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x