Published : 22 Aug 2016 11:52 AM
Last Updated : 22 Aug 2016 11:52 AM

வரி வந்த பாதை

வரி ஒரு நாட்டின் மிக முக்கிய வருமான ஆதாரம். வரிகள் மூலமே அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்ற பாதையில் செல்வதற்கு வரிகள் மிக முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. எகிப்து பேரரசில் முதன் முதலில் வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு நாடுகளும் வரி விதிப்பை நடைமுறைப்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் பண்டைய காலத்திலிருந்து வரி விதிப்பு முறை இருந்துள்ளது. இந்தியாவில் வரிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை பற்றி சில தகவல்கள்….

வாட் வரி

பண்டைய காலந்தொட்டே இந்தியாவில் வரி முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. அர்த்தசாஸ்திரம் மற்றும் மனு ஸ்மிருதி நூல்களில் வரி விதிப்பு முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன.

மெளரியர் ஆட்சிக் காலத்தில் வேளாண்மை உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்துவது, காட்டுப் பொருட்களுக்கு வரி, உலோகங்களுக்கு வரி, உப்பு வரி என பல்வேறு வரிகள் விதிக்கப்பட்டன.

அதன் பிறகு சுல்தானியர்கள் ஆட்சிக் காலத்தில் கிராஜ் என்று நில வரி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அல்லாதோர்கள் மீது ஜெசியா என்ற வரி விதிக்கப்பட்டு வந்தது.

அக்பர் ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த ராஜா தோடர்மால் பல்வேறு வரி முறைகளை கொண்டு வந்தார். தற்போதுள்ள வருமான வரி அமைப்பு போல் ஒவ்வொருவரின் வருமானத்தை பொறுத்து வரியை விதிக்கக்கூடிய முறை கொண்டு வரப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சுரண்டல் நோக்கில் பல்வேறு வரி முறைகளை கொண்டு வரப்பட்டன. மகல்வாரி முறை, ரயத்துவாரி முறை, ஜமீன்தாரி முறை என பல்வேறு வரி முறைகளைக் கொண்டு வந்தனர்.

1922-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. வரி பிரிவை கண்காணிப்பதற்கென வரித்துறை அமைப்பு பிரத்யேகமாக அமைக்கப்பட்டது.

ஜிஎஸ்டி

மறைமுக வரியில் உற்பத்தி வரி, சேவை வரி, உற்பத்தி மற்றும் சுங்கத்துறையில் விதிக்கப்படும் கூடுதல் வரி, சிறப்பு கூடுதல் சுங்க வரி, செஸ், சர்சார்ஜ் உள்ளிட்டவை அடங்கும்.இந்த மறைமுக வரி அனைத்தையும் ஒரே வரியாக மாற்றி நாடு முழுவதும் ஒரே வரி முறையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டுவரப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கம் முதன்முதலில் நாட்டிலுள்ள மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் ஒரு முனை வரியை கொண்டு வர அசிம் தாஸ்குப்தா தலைமையில் குழு ஒன்று அமைத்தது. அதன் பிறகு 2006-ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஜிஎஸ்டி மசோதாவை 2010-ம் ஆண்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் அதிகாரமளிக்கப்பட்ட குழு ஒன்றை அமைத்தார்.

விற்பனை வரிக்கு பதிலாக மதிப்பு கூட்டு வரியை கொண்டு வர 1999-ம் ஆண்டு அசிம்தாஸ் குப்தா தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தியா போன்ற கூட்டாட்சி அமைப்புடைய நாட்டிற்கு வாட் வரியை கொண்டு வருவது மிகக் கடினம் என்ற கருத்து நிலவியது. ஆனால் 2005-ம் ஆண்டில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தார்.

2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய விற்பனை வரியிலிருந்து வழங்குவோம் என்று அறிவித்தது. அதையொட்டி மாநிலங்கள் ஆதரவு தந்த நிலையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திரத்துக்கு பிறகு வரி சீர்திருத்தங்கள்

1951-ம் ஆண்டு வர்தாசாரி தலைமையில் வருமான வரி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் இதே ஆண்டு தானாக முன் வந்து வருமான வரி தாக்கல் செய்யும் முறையும் அமைக்கப்பட்டது.

வரி முறையை எளிதாக்குவதற்காக 1969-ம் ஆண்டு பூதலிங்கம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

1991-ம் ஆண்டு புதிய பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு வரி அமைப்பில் முக்கிய சீர்திருத்தங்கள் செய்யவேண்டி இருந்தது. இதற்காக பொருளாதார அறிஞர் ராஜா செல்லையா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இவர் அளித்த பரிந்துரையில் பேரில்தான் இந்தியாவில் சேவை வரி கொண்டு வரப்பட்டது. ராஜா செல்லையா வரிச் சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x