Last Updated : 06 Jun, 2016 03:05 PM

 

Published : 06 Jun 2016 03:05 PM
Last Updated : 06 Jun 2016 03:05 PM

பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனக் கலப்பு இருந்ததால் மாகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. பிரெட்டில் புரோமைடு கலப்பு இருப்பதால் அதை சாப்பிட்டால் புற்று நோய் வரும் என்ற அச்சுறுத்தல் உள்ளது. இதனால் இனி புரோமைடு இல்லாத பிரெட்டுகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன பிரெட் தயாரிப்பு நிறுவனங்கள்.

ஆட்டோமொபைல் பக்கத்தில் இந்த உதாரணங்கள் எதற்கு? கொஞ்சமும் பொருந்தவில்லையே என்று நினைக்க லாம். ஆனால் நீங்கள் வாங்கும் காரில் பழுது இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது, அந்த பாகத்தை மாற்றித் தருவது ஒன்றுதான் வழி.

உணவுப் பொருளில் கேடு விளைவிக் கும் ரசாயனம் எப்படி பாதிப்பை ஏற் படுத்துமோ அதைப்போலத்தான் பழுதான பாகங்களால் கார்களின் செயல்பாடுகளும் உயிருக்கு அச்சுறுத்த லாக அமைந்துவிடும். ஆனால் சமீப காலமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் பழுதான பாகங்களுக்காக கார்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 5.10 கோடி கார்கள் பழுது காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. மொத்தம் தயாரானவை 15 கோடி. அதாவது மூன்றில் ஒரு பங்கு கார்கள் பழுது காரணமாக நிறுவனங்களால் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

பழுதான பாகங்கள் காரணமாக கார்கள் திரும்பப் பெறப்படுவது ஒரு நல்ல அறிகுறிதான் என்கின்றனர் இத்துறையைச் சேர்ந்தவர்கள்.

பழுதில்லாத கார்களைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்குத் தரலாமே? அதைவிட்டுவிட்டு கார்களைத் தயாரித்து சந்தைக்கு அனுப்பிவிட்டு பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் தயாரான கார்களில் ஒரு குறிப்பிட்ட பாகம் பழுதாகி உள்ளது என்றும் அதை நிறுவனமே எவ்வித கட்டணமும் இன்றி மாற்றித் தருவதாக அறிவிப்பது கார் வைத்திருப்போருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதா என்ற கேள்வியும் நியாயமானதே.

அதேசமயம் நிறுவனங்களும் தங் கள் தயாரிப்புகள் சிறந்ததாக இருக்க வேண்டும் என்றும், மக்களின் உயிருடன் சம்பந்தப்பட்ட விஷயம் என்று கருது வதால் தொடர்ந்து கண்காணிப்பதன் வெளிப்பாடே இதுபோன்ற பழுது நீக்கத்துக்காக கார்களை திரும்பப் பெறும் நடவடிக்கை. இது கார் தயாரிப்பு நிறுவனங்களின் பொறுப்பான செயல்பாடுகளையே காட்டுகிறது.

இது தவிர கண்காணிப்பு அமைப்பு களின் தீவிர கண்காணிப்பும் இதுபோன்ற திரும்பப் பெறல் நடவடிக்கைக்குக் காரணமாகிறது. பொருள்களின் செயல் பாடுகளை சோதித்தறியும் கருவிகளின் சிறப்பான செயல்பாடும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

டகாடா ஏர் பேக்

கார்களில் விபத்து ஏற்படும்போது உயிர் காக்கும் ஏர் பேக்-கில் பழுது இருப்பதாக கடந்த ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 1.20 கோடி கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஜப்பானின் டகாடா ஏர் பேக் சரிவர வேலை செய்யவில்லை என சோதனை யில் கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உயிரைக் காக்க வேண்டிய ஏர் பேக் விபத்து நேரும்போது விரிவடையாததால் 11 பேர் உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. ஏர் பேக்-கால் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

டகாடா ஏர் பேக்கில் பயன்படுத்தும் அமோனியம் நைட்ரேட், கார் விபத்துக் குள்ளாகும்போது ஏர் பேக் விரிவடைய உதவும். ஆனால் சில காலத்துக்குப் பிறகு அதாவது கார் பயன்பாட்டில் இருக்கும்போது அதிக வெப்பம் மற்றும் ஈரத்தன்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்விசை அதாவது விபத்துக் குள்ளாகும் அளவின் தன்மைக்கேற்ப விரிவடைய வேண்டிய ஏர் பேக் முன்னதாகவே விரிவடைந்து விட்டது. அத்துடன் வாயுவுடன் கூர்மையான உயிரை பலி வாங்கும் பாகங்களும் வெளி யானது சோதனையில் கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து டகாடா ஏர் பேக் உள்ள கார்கள் திரும்பப் பெறப்பட்டன.

இந்தியாவில்….

2012-ம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை இந்தியச் சந்தையில் இதுவரை பழுது காரணமாக திரும்பப் பெறப்பட்ட கார்களின் எண்ணிக்கை 18 லட்சமாகும். 2015-ம் ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த மே வரையான காலத்தில் மட்டும் 6.45 லட்சம் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் புகை மோசடி புகாரில் சிக்கித் தவிக்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதுவரை 1.88 லட்சம் கார்களை திரும்பப் பெற்றுள்ளது. வாகன புகை சோதனை பிரச்சினைக்காக மட்டும் 3,800 வென்டோ மாடல் கார்களை இந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

மாருதி சுஸுகி

இந்தியாவில் அதிக எண்ணிக்கையி லான கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவனம் 20,427 எஸ் கிராஸ் மாடல் கார்களை திரும்பப் பெற்றுள்ளது. இந்த கார்களில் பிரேக் பிடிப்பதில் பழுது ஏற்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

இது தவிர ஏர் பேக் செயல்பாட்டு திறனை மேம்படுத்தித் தருவதற்காக 75,419 பலெனோ கார்களை இந்நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. இந்தக் கார்களில் ஸ்விட்சர்லாந்து நிறுவனமான ஆட்டோலிவ் நிறுவனம் தயாரித்த ஏர் பேக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

பழுதான ஏர் ஃபில்டர் பொறுத்தப் பட்டிருந்த 1,961 டிசையர் கார்களும், திரும்பப் பெறப்பட்டுள்ளன. பலெனோ கார்களில் 17,231 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டவையாகும். இவை ஐரோப்பா மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஃபோர்டு

அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு 91,000 கார்களை திரும்பப் பெற்றுள்ளது. இந்நிறுவனத் தயாரிப்பான எகோ ஸ்போர்ட், ஃபிகோ மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் உள்ளிட்ட கார்கள் பல்வேறு பழுது காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

டிக்யூஎம், பிபிஎம் என்னவாயிற்று?

முழுவதும் தரமான பொருள் தயாரிப்பு நிறுவனம் (டிக்யூஎம்) மற்றும் பத்து லட்சம் உதிரி பாகத்தில் சிறு குறைபாடு இல்லாத வகையில் பொருள் தயாரிக்கும் (பிபிஎம்) சான்று பெற்ற நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் ஏராளம்.

அப்படியிருக்கையில் இதுபோன்ற பிரச்சினைகள் எப்படி நிகழ்கின்றன என்ற கேள்வி எழாமாலிருக்காது.

உற்பத்தி செலவு குறைப்பு காரணமா?

கார் தயாரிப்பு நிறுவனங்கள், உதிரி பாகங்கள் சப்ளை செய்யும் நிறுவனங் களை குறைந்த விலையில் பாகங் களை சப்ளை செய்யுமாறு கட்டாயப் படுத்துவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இத்தகைய சூழலில் இதுபோன்ற தவறுகள் நிகழத்தான் செய்யும்.

ஆயிரக்கணக்கான உதிரி பாகங் களைக் கொண்டு கார் தயாரிக்கும்போது இதுபோல சில தவறுகள் நிகழ்வது சகஜம். உதிரிபாக சப்ளையர்கள் சப்ளை செய்யும் பாகங்களை தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே இதைத் தவிர்க்க முடியும் என்கிறார் மாருதி சுஸுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி. பார்கவா.

குறிப்பாக சிறிய உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களின் தயாரிப்புகளில் இதுபோன்ற தவறுகள் நிகழ வாய்ப்பு அதிகம் உள்ளது என்கிறார். சிறிய உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தித் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாருதி சுஸுகி எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்போது ஆடம்பர பொருளாகக் கருதப்பட்ட கார்கள், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து வாகனமாக மாறி வருகிறது.

இத்தகைய சூழலில் கோளாறு இல்லாத வாகனங்களைத் தயாரித்து அளிக்க வேண்டிய பொறுப்பு நிறுவனங்களுக்கு உள்ளது.

அதிக அளவிலான திரும்பப் பெறல் நடவடிக்கை இருக்கும்போது நிறுவனத் தயாரிப்புகளின் மீதான நம்பகத்தன்மை மக்களிடையே குறைந்துவிடும். இதை நிறுவனங்கள் உணர வேண்டிய தருணமிது.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x