Published : 15 Aug 2016 02:55 PM
Last Updated : 15 Aug 2016 02:55 PM
ஆட்டோமொபைல் துறையில் எப்போதும் செய்திக்குப் பஞ்சமேயிருக்காது. ஏதே னும் புதிய அறிமுகங்கள், புதிய தொழில் நுட்பங்கள் என எப்போதும் பரபரப்பாக இருப் பதும் இத்துறைதான். ஆனால் இத்துறையில் சிறந்த தலைவர்கள் இன்னும் உருவாக வில்லையோ என்ற எண்ணம் சமீபகாலமாக மேலோங்கியுள்ளது. இந்தியாவின் முன்னணி 10 கார் தயாரிப்பு நிறுவனங்கள் 24 முறை தலைவர்களை மாற்றியுள்ளன.
போட்டிகள் நிறைந்த ஆட்டோமொபைல் துறையில் தலைவர்களை அடிக்கடி மாற்றுவது எந்த அளவுக்குப் பயன் அளித்துள்ளது? அல்லது தலைமைப் பதவிக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை இத்தகைய மாற்றங்கள் எழுப்பியுள்ளன.
பொதுவாக எந்த ஒரு நிறுவனத்திலும் தலைமைப் பதவிக்கு ஒருவரை நியமித்தால் அவர் தனக்கு நம்பகமான சிலரை தன்னைச் சுற்றிய வட்டாரத்தில் நியமிப்பது வழக்கம். இதுவும் ஆட்டோமொபைல் துறையில் இத்தகைய மாற்றங்களின் மூலம் நிகழ்ந்துள்ளன.
தலைவரை நியமித்தவுடன் விற்பனைப் பிரிவு, சந்தைப் பிரிவு உள்ளிட்ட தலைமைப் பதவியிலிருப்பவர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் நிறுவனத்தின் ஸ்திரமான விற்பனை உத்தி பாதிக்கப்பட்டு, விற்பனை சரிந்ததையே கடந்த கால நிகழ்வுகள் உணர்த்தியுள்ளன.
2010-ம் ஆண்டிலிருந்து இதுவரை 5 தலைமைச் செயல் அதிகாரியை மாற்றம் செய்துள்ளது ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட். அதிக எண்ணிக்கையிலான மாற்றங்களைச் செய்த நிறுவனம் என்ற அளவில் முதலிடத்தில் உள்ளதும் இந்நிறுவனமே.
நிசான் இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் தலா 4 முறை தலைவர்கள் மாற்றியுள்ளன. ஃபோக்ஸ்வேகன், ஃபோர்டு, பியட், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் தலா 3 முறை தலைவர்களை மாற்றம் செய்துள்ளன.
தலைவர்களை மாற்றுவதற்கு முக்கியக் காரணமே விற்பனையை அதிகரிக்கச் செய் வார்களா என்ற எதிர்பார்ப்புதான் நிறுவனத்துக்குப் பிரதானமாக உள்ளது. ஆனால் ஜெனரல் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஃபியட், ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை பாதியாகக் குறைந்தது.
இதில் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஃபோர்டு மற்றும் நிசான் நிறுவனங்களின் விற்பனை 20% அளவுக்குச் சரிந்துள்ளது.
அதேசமயம் அதிக தலைமை மாற்றங்களைச் செய்த ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு நிறுவனம் தொடர்ந்து புதிய அறிமுகங்கள், இன்ஜினில் பெரும் மாற்றங்களைச் செய்ததும் முக்கியக் காரணமாகும். ஆனாலும் கடந்த 8 மாதங்களாக ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை சரிந்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் 2 ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரி இல்லாமலேயே இயங்கியது. சமீபத்தில்தான் அந்நிறுவனத்துக்கு தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாருதி, ஹூண்டாய் கார் உற்பத்தியில் முதலிரண்டு இடங்களில் உள்ள மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங் களில் மாற்றம் செய்யவில்லை. விற்பனையில் இவற்றின் அணுகுமுறையே அலாதியானது. இதனாலேயே கடந்த 5 ஆண்டுகளில் இவ்விரண்டு நிறுவனங்களின் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் கார் விற்பனை 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை. 25.50 லட்சமாக இருந்த வாகன விற்பனை 27.80 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையின் தலைமைப் பொறுப்பில் நியமிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது அளிக்கப்படவேண்டும் என்று இத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
முதல் ஆறு மாதங்கள் தொழில்துறையைப் பற்றி அறிந்துகொள்ளத் தேவைப்படும். இந்தியா போன்ற மிகப் பெரிய தேசத்தில் ஆட்டோமொபைல் துறையின் சந்தையை முழுவதுமாக தெரிந்துகொள்ள இந்த காலகட்டம் மிகவும் அவசியம். அடுத்து அவர் இந்த சந்தைக்கேற்ப விற்பனை உத்திகளை வகுத்து அதைச் செயல்படுத்த குறைந்தபட்சம் இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும். ஆனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த அளவுக்கு கால அவகாசம் தரவில்லை என்பதுதான் கடந்த காலங்களில் நடந்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 5 தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சராசரியாக ஓராண்டுக்கு ஒருவர் என்ற அளவில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நிசான், ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வேகன், ஃபோர்டு, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் ஒன்றரை ஆண்டுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் தலைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஆனால் மாருதி, ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன.
தலைமை மாற்றம் ஒருபுறம் இருந்தாலும், புதிய தலைவர்கள் மேற்கொள்ளும் உத்திகளில் அடிக்கடி மாற்றம், விற்பனை ஒருங்கிணைப்பை மேற்கொள்வதில் அடிக்கடி மாற்றம் மற்றும் மண்டல தலைமை அலுவலகங்களை மாற்றும் நிகழ்வுகளும் கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.
இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் துணை நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. எனவே தாய் நிறுவனத்துடன் சுமுக உறவை இங்குள்ள தலைமைச் செயல் அதிகாரி பராமரிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை இங்கு தலைவராக நியமிப்பதால் உள்நாட்டு சந்தையை பற்றி அறிந்து கொள்ளாதவராயிருக்கின்றனர். இந்த நிலையை சமீபத்தில் ரெனால்ட் மற்றும் நிசான் ஆகியன மாற்றியுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக உள்நாட்டில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பது இத்துறை நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.
ஒரு நிறுவனத்துக்குத் தலைவரை நியமிக் கும்போது அவர் தனது பாணி செயல்பாடுகளை நிறுவனத்தில் புகுத்துவார். இது முந்தைய தலைவரின் செயல்பாடுகள் மற்றும் சந்தை பற்றிய கண்ணோட்டத்துக்கு முற்றிலும் மாறாக இருக்கும். நிறுவனம் இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு முற்றிலும் மாறாக இருக்கும். இது நிறுவனத்தின் பங்குதாரர்களையே குழப்பத்துக்குள்ளாக்கிவிடும் என்று இத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆட்டோமொபைல் சந்தையைப் பொறுத்தமட்டில் இந்தியச் சந்தையானது மிகவும் சிக்கலானது. இத்தகைய சூழலில் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வருபவர், உரிய பலனை நிறுவனத்துக்கு அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. நிறுவனத்தின் வளர்ச்சியை எட்ட அவருக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் அடிக்கடி கொள்கை அளவில் மாற்றம் செய்யப்படுவதும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது.
இளம் தலைமுறையினருக்கு வழி விட வேண்டும் என்ற கருத்து அனைத்துத் துறைக்கும் பொருந்தும். இளம் தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு தலைவர்களுக்கு உள்ளது. அப்போதுதான் தலைமைக்கு எப்போதும் பஞ்மிருக்காது.
ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT