Last Updated : 04 Jan, 2016 12:36 PM

 

Published : 04 Jan 2016 12:36 PM
Last Updated : 04 Jan 2016 12:36 PM

ஜிஎஸ்டி-யை அமல்படுத்த அவசரப்படவேண்டாம்

நாடு முழுவதற்கும் பொதுவான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி கிட்டுமா என்று தெரியவில்லை.

அதே வேளையில் அப்படி வெற்றி கிட்டாவிட்டாலும் ஏதும் குடிமுழுகிப் போய்விடாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். உற்பத்தி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அதிகப்படுத்த சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக வெவ்வேறு வடிவங் களில் தீவிரமாகவும் மந்தமாகவும் தொடர்கின்றன.

இதே பொது சரக்கு, சேவை வரி முறையை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவர முயன்றபோது, பிஹாரில் நிதியமைச்சராக இருந்த சுசீல் குமார் மோடியை மாநில நிதியமைச்சர்கள் குழுவுக்குத் தலைவராகத் தந்து முக்கால்வாசி தூரம் உடனிருந்து பயணப்பட்டது பாரதிய ஜனதா. கடைசி கட்டத்தில் சில ஆட்சேபங்களை எழுப்பி அது நிறைவேறாமல் தடுத்தது. இப்போது காங்கிரஸ் அதைச் செய்து வருகிறது.

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகப்போகிறது. பொது சரக்கு, சேவை வரி என்று ஏதுமில்லாமல், நிலம் கையகப்படுத்த மசோதா இல்லாமல்தான் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்த மசோதா நிறைவேறாவிட்டால் பொருளாதாரமே ஸ்தம் பித்துவிடும் என்று கருதும் அளவுக்கு இதில் விசேஷம் ஏதுமில்லை. இப்போதுள்ள நிலையில்கூட இது பொது சரக்கு, சேவை வரியாக இல்லாமல் போக சில சமாதானங்களை ஏற்க பாஜக கூட்டணி அரசு தயாராக இருக்கிறது.

அதில் முக்கியமானது மதுபானங்கள், பெட்ரோலியப் பண்டங்கள் மீது வரி விதிப்பது தொடர்பானது. அத்துடன் மத்திய அரசு பொது சரக்கு, சேவை வரி விகிதங்களை அமல் படுத்துவதைப்போல மாநிலங்களும் தனியாக பொது சரக்கு, சேவை வரிகளை விதித்துக்கொள்ளலாம் என்ற சமரசமும் ஏற்கப்பட்டிருக்கிறது. இது அமலுக்கு வரும் முதல் 5 ஆண்டுகளுக்கு, வருவாய் இழப்புக்கு அதிகம் ஆளாகும் மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி வழங்கி ஈடுகட்டும் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

தொழில் உற்பத் தியில் முன்னணியில் இருக்கும் மாநிலங் கள் வற்புறுத்தியதால் 1% கூடுதல் வரி விதித்து அந்தத் தொகையை அந்த மாநில அரசு எடுத்துக்கொள்ளும் உத்தேச யோசனையும் ஏற்கப்பட்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதைக் கூடாது என்கிறது.

பொது சரக்கு, சேவை வரி அமலானால் நாடு முழுவதிலும் பொருள்கள் ஒரே விலையில் விற்கப்படும். சேவைகளுக்கும் ஒரேவிதமான கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொழில் தொடங்க நினைக்கும் தொழிலதிபர்கள் பின் தங்கிய மாநிலங்களிலும் தொடங்க வாய்ப்பு ஏற்படும். நாடு முழுக்க நுகர்வோர்கள் ஒரே மாதிரியாக பணம் செலுத்த நேருவதால் யாரும் வஞ்சிக்கப்பட வாய்ப்பு இருக் காது. மத்திய அரசே வரியை விதித்து அதை வசூலிப்பதற்கான முறையைத் தீர்மானிப்பதால் வரி வசூல் அதிகரிக்கும்.

சில மாநில அரசுகள், வியாபாரிகளுடன் ரகசிய உடன் படிக்கை செய்துகொண்டு விற்பனை வரியில் சலுகை அளிப்பது, வர்த்தக வரி விதிப்புக்கே உள்ளாகாமல் பார்த்துக்கொள்வது என்றெல்லாம் செயல்படுகின்றன; இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாயில் ஒரு பகுதியை ஆளும் கட்சியும் அதிகார வர்க்கமும் பங்கு போட்டுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது.

மதிப்பு கூட்டப்பட்ட வரி முறை தான் பொது சரக்கு, சேவை வரி விதிப்பிலும் கடைப்பிடிக்கப் போவதால் இடுபொருள் மீது ஒருமுறை வரி, முழுப் பொருள் மீது இன்னொரு முறை வரி என்ற கூடுதல் வரி செலுத்தும் முறைக்கு விடை தரப்படுகிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி, சுங்க வரி, நுழைவு வரி என்ற பலதரப்பட்ட வரிகளுக்குப் பதிலாக ஒரே வரியாக இது வசூலிக்கப்படுவதால் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் நிறையப் பதிவேட்டையும் பதிவுகளையும் பராமரிக்க வேண்டிய பணிச்சுமையும் குறையும்.

இந்த வரிகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது ஒவ்வொன்றிலுமே பிரச்சினைகள் இருந்தால் ஒவ்வொரு அமைப்பிடமும் முறையிட்டு, விசாரணைக்கு உள் ளாகி இறுதித் தீர்ப்புவரும்வரை காத்திருக்க வேண்டும். அந்த அலைச்சல்களும் இனி இராது. வரிவிதிப்பிலும் வசூலிப்பிலும் சிக்கல் இல்லை என்றால் அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் (வரி வருவாய்) நீதி மன்ற அல்லது நடுவர்மன்ற முறையீடுகளால் முடங்கிவிடாமல் பயன் பாட்டுக்கு வந்துவிடும்.

தொழில்வள நாடுகளில் இந்த முறைதான் கையாளப்பட்டு வருகிறது. வெவ்வேறு மாநில அரசுகளுக்கு இடையில் வரி விகிதங்களில் மாற்றம் இருந்தால் மாநில எல்லை தாண்டிச் செல்லும்போது வரித்துறையினரின் சோதனை, கூடுதல் வரிவிதிப்பு அல்லது சரக்கை ஏற்க மறுப்பு போன்றவற்றுக்கு உள்ளாக நேரும். இனி அந்தத் தடை இருக்காது. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குத் தடையின்றி சரக்குகள் சென்றுவரவும் சோதனைச் சாவடிகளில் மணிக்கணக்கில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் காத்துக் கிடக்காமலிருக்கவும் இது அவசியம்.

மாற்று வழிகள்

அதே சமயம் இதை திட்டமிட்டபடி 2016 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடியாவிட்டால் என்ன செய்வது? மாற்று வழிகளை மத்திய அரசு கையாள வேண்டும். இனி நடத்தவே முடியாத நிலையை எட்டிவிட்ட அரசுத்துறை நிறுவனங்களை பொது ஏலத்தில் தனியாருக்கு கூடுதல் வருவாய்க்கும் செலவு குறைப்புக்கும் வழிகாண வேண்டும். வி.எஸ்.என்.எல்., பால்கோ, இந்துஸ்தான் ஜிங்க், ஐ.பி.சி.எல். போன்றவை இப்படித் தான் விற்கப்பட்டன.

மானியங்களைச் சீரமைக்கும் வேலை அரைகுறையாகவே நிற்கிறது. சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பண்டங்களின் மானியத்தை மன்மோகன் சிங் அரசு குறைக்க ஆரம்பித்து அதை மோடி அரசு வெற்றிகரமாகத் தொடர்ந்தது. அதே பாணியில் உணவு தானியம், உரம் போன்றவற்றின் மானியங்களைக் குறைக்க வேண்டும்.

உணவு தானியங் களைப் பொருத்தவரை பொது விநியோக அமைப்புகளை நாடு முழுக்க வலுப்படுத்தி மலைவாழ் மக்கள், வனவாசிகள், பின் தங்கியோர், ஏழைகள், ஆதரவற்றோர் போன்றோருக்குக் கணிச மான அளவில் அரிசி, கோதுமை ஆகியவற்றை மாதந்தோறும் வழங்க வேண்டும். நிலத்துக்குக் கேடுவிளைவிக்கும் உரங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் அவற்றின் மீதான மானி யத்தை மட்டுப்படுத்தியும், ஊக்கு விப்பு தேவைப்படும் இதர உரங்களுக்கு வழங்கியும் உரப் பயன்பாட்டைச் சீரமைக்கலாம். உள்நாட்டிலேயே யூரியா உற்பத்தியை அதிகப்படுத்த அந்த ஆலைகளுக்குத் தேவைப் படும் எரிபொருளை முன்னு ரிமை அடிப்படையில் வழங் கலாம்.

உலர் கிடங்குகள், குளிர் பதன வசதி கொண்ட கிடங்குகள் போன்றவற்றை எல்லா மாவட்டங் களிலும் நிறுவி பழங்கள், மீன் உள்ளிட்ட கடல் உணவு, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், மலர்கள் போன்றவற்றைப் பாதுகாத்து அவை வீணாகாமல் காக்கலாம். அவற்றின் விலையையும் கட்டுப்படுத்தலாம். ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டம், கிராமப் போக்குவரத்துக்கு சாலைகளைப் போடும் திட்டம் போன்றவற்றால் வேலை வாய்ப்பையும் கிராமப்புற பொரு ளாதாரத்தையும் மேம்படுத் தலாம். பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை வலுப் படுத்தலாம்.

எச்சரிக்கை

கடைசியாக ஒரு வார்த்தை இதுவரை பொது சரக்கு, சேவை வரியை அமல்படுத்திய நாடுகளில் அதைக் கொண்டுவந்த கட்சிகள் பொதுத் தேர்தலில் தோல்வியையே சந்தித்துள்ளன; காரணம் அது அமலுக்கு வந்த ஓரிரு ஆண்டுகளுக்கு விலைவாசி உயர்ந்து கொண்டே வரும். 3 ஆண்டுகளுக்குப் பிறகே விலைவாசி கட்டுக்குள் வரும், மொத்த உற்பத்தி மதிப்பும் அதிகரிக்கும். காங்கிரஸ் கட்சி ஒருவேளை இதை 2016 அல்லது 2017-ல் அமல்படுத்த ஒத்துழைப்பு தந்து, அடுத்த மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியை வீழ்த்தக்கூட உள்ளூர திட்டமிட்டிருக்கலாம். பொது சரக்கு, சேவை வரி தொடர்பான உலக வரலாற்றை மோடி அல்லது அருண் ஜேட்லி படிப்பது நல்லது.

தொடர்புக்கு - rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x