Published : 06 Feb 2017 11:44 AM
Last Updated : 06 Feb 2017 11:44 AM
கை நிறைய சம்பளம் கிடைத்தாலும் சொந்த தொழில் செய்ய வேண்டும் என ஆசைப்படுபவர்கள்தான் எல்லோரும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டது ஓலா டாக்சி நிறுவனம். புதிதாக தனிநபர்கள் டாக்சி தொழிலில் இறங்கி வெற்றிபெறுவதைவிட, டாக்சி தொழிலுக்கான நிறுவனத்தில் வாகனத்தை இணைத்து ஓட்டுவது வசதியானது. 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓலா டாக்சி நிறுவனத்தில் தற்போது 4 லட்சத்துக்கு மேல் வாகனங்கள் உள்ளன என்றால் இந்த அடிப்படையில்தான். தொழில் முனைவோர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் தொழில்முனைவாகவே ஓலா உருவானது. மிக குறுகிய காலத்தில் டாக்சி துறையில் 60 சதவீத சந்தையை கைப்பற்றியது.
உங்கள் காரை நீங்கள் சரியாக ஓட்டினால் மாதம் 1 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும், ஓட்டுநர்களே ஓலா நிறுவனத்தின் பங்குதாரர்கள் என உற்சாகமாகவே அறிவித்து இறங்கியது. ஜப்பானின் சாப்ட் பேங்க், டிஎஸ்டி குளோபல், டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் ஓலாவில் முதலீடு செய்தன. கூடவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுடன் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் தொழில்முனைவோர்களுக்கு கார் வாங்க `ஓலா பிரகதி’ என கடனுதவி உள்ளிட்ட வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தது.
பெங்களூருவில் இயங்கி வந்த `டாக்சி பார் ஷ்யூர்’ நிறுவனத்தைக் கூட கையகப்படுத்தியது. சந்தையில் தேவையை ஒட்டி நிறுவனத்தின் வளர்ச் சியும் வேகமாக இருந்தது. ஆனால் நிறுவனத்தின் சமீப கால போக்குகள் ஸ்டார்ட் அப் நிறுவனங் களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக உள்ளன என்கின்றனர் சந்தை நோக்கர்கள். ஓலா வசம் இருக்கும் நிதி குறைந்துகொண்டே இருக்கிறது. தவிர நிதி திரட்டும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. தனது பங்குதாரர்கள் என பெருமைப்படுத்திய ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களையும் இழந்து வருகிறது. இது தொடர்பான விவரங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன.
ஓலா நிறுவனத்தை நம்பி தனது காரை இணைத்தவர் பெங்களூரைச் சேர்ந்த சஞ்சய் ஹரிலால் யாதவ். அதற்கு முன் அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலை ஒரு பண்ட் நிறுவனத்தின் அதிகாரி. தனது வேலையிலிருந்து விலகி ஓலா நிறுவன ஓட்டுநராகும் அளவுக்கு வருமானத்தை கொடுத்தது என்கிறார்.
சதா சர்வ நேரமும் அலுவலகத்துக்கான வேலை யில் மூழ்கிக் கொண்டிருப்பதைவிட கார் ஒட்டுநராக இருப்பது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக் கலாம், கூடவே வருமானத்துக்கும் குறைவில்லை என்கிறபோது ஓலாவில் கார் இணைத்ததை அவர் பெருமையாகவும் கருதினார். இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரைதான். ஆனால் தற்போதோ சஞ்சய் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
ஷதாப் மும்பையைச் சேர்ந்த டிரைவர். அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கிறார். வீட்டுக் கடன், வாகனத் தவணை, மாதாந்திர செலவு கள் எல்லாமே வாகனத்தை நம்பிதான். வாக னத்தை ஓலாவில் இணைத்துள்ளார். ஆரம்பத்தில் குறைவில்லாமல் இருந்த வருமானம், தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது. காரணம் ஓலாவிலிருந்து போதிய வருமானமில்லை.
சஞ்சய், ஷதாப் மட்டுமல்ல ஓலாவில் கார் இணைந்துள்ள பல ஆயிரம் டிரைவர்களும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சென்னையில் ஓலா நிறுவன டிரைவர்கள் அந்த நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு அவ்வப் போது போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
சஞ்சயின் வேலை, ஷதாபின் வீடு என பல வற்றுக்கும் இப்போது எதிர்மறையான நிலைமையை தோற்றுவித்துள்ளது ஓலாவில் பங்குதாரரான முயற்சி. ஓலாவின் வேலை வாய்ப்புகளை நம்பி கார்களை வாங்கிய பல தொழில் முனைவோர்கள் அதற்கான தவணையை செலுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஏன் என்ன நடக்கிறது ஓலாவில் என இணைந்துள்ள பல ஓட்டுநர்களிடமும் விசாரித்தோம். முன்பு போல வாகனங்களுக்கு அதிக வருமானம் இல்லை என்பதை ஒப்புக் கொள்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2 லட்சம் கார்கள்தான் நிறுவனத்தின் இருந்தன. இப்போது 4.5 லட்சம் கார்களை இணைத்துள்ளனர். தவிர ஓலா பிரைம், ஓலா மினி, ஓலா கார் ஷேர், ஓலா ரென்டல் என பல வகைகளில் பிரித்து விட்டனர். தொடர்ச்சியாக வாகனங்களையும் இணைத்து வருவதால் அனைத்து வாகனங்களுக்கும் சேவை கொடுக்க வேண்டும் என்கிற நெருக்கடியில் ஓலா உள்ளது.
முன்பு தினசரி சவாரிகள் தவிர, ஒரு வாகனம் 10 முதல் 12 புக்கிங்களுக்கு சேவை செய்தால் ரூ.100 முதல் 500 வரை ஊக்கத்தொகை கிடைக்கும். வாராந்திர ஊக்கத்தொகைகளும் உண்டு. இப்போது சேவை குறைந்துள்ள பிறகு ஓட்டுநர்கள் ஊக்கத்தொகை பெறும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. தவிர பிரைம் டைமில் கொடுக்கும் புக்கிங்குகளை உரிய நேரத்துக்குள் எடுக்க வேண்டும். புக்கிங்கை ஓட்டுநர் தவறவிட்டால் அபராதம் கட்ட வேண்டும். வாகனத்தை இணைத்துள்ளதற்கான கமிஷன் தவிர ஓட்டுநர்கள் ஒரு புக்கிங்கை கேன்சல் செய்தால் அதற்கான அபராதமாக ரூ.500 கட்டணத்தை ஓட்டுநரிடமிருந்து பிடித்தம் செய்கிறது. இதுவும் ஒட்டுநர்களை வெகுவாக பாதித்துள்ளது.
இதனால் ஓலாவில் வாகனத்தை இணைத்துள்ள ஓட்டுநர்கள், தங்களது சங்கங்கள் மூலம் ஊக்கத்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக ஓலா செயலியை ஸ்விட்ச்ஆப் செய்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இது ஊக்கத் தொகைக்காக மட்டுமல்ல, அபராத கட்டணத்தை நீக்க வேண்டும் என்பதற்காகவும் என்று குறிப்பிடுகின்றனர். சென்னையில் பல ஓட்டுநர்கள் ஓலா நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக எந்த குறிப்பிட்ட கருத்து களுக்கும் ஓலா இதுவரையில் மறுப்பு தெரிவிக்க வில்லை. ஆனால் எங்களது நிறுவனத்தில் பதிவு பெற்றுள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் ஒத்துழைக் கவே விரும்புகிறோம். எங்களது பங்குதாரர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தங்களது குறை களை அவர்களுக்கான சேவை எண்ணில் பதிவு செய்யலாம் அல்லது நேரில் வரலாம். அவர்களது குறைகள் உடனடியாக தீர்க்கப்படும் என குறிப் பிட்டுள்ளது. ஓட்டுநர்கள் உரிமையாளர்களின் சிக் கல்களைத் தீர்க்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொழில்முனைவோர்களுக்கு ஓலா எப்போதும் தகுந்த இடத்தை அளிக்கும் என குறிப்பிடுகிறது.
ஓலா இதனை உடனடியாக சரிசெய்யத்தான் வேண்டும். இணையத்தில் ஓலா என்று தேடினாலே அந்த நிறுவனத்தில் வாகனத்தை இணைப்பது எப்படி என்கிற விவரங்கள்தான் வருகின்றன. ஏனென்றால் அது தோற்றுவித்த நம்பகத்தன்மை அப்படி இருக்கிறது.
ஆனால் இன்னொரு பக்கம் ஓலாவின் இந்த நெருக்கடிகளுக்கு காரணம் ஓலா நிதி திரட்டுவது குறைந்துள்ளதுதான் என்று வல்லுநர்கள் குறிப் பிட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் ஓலா மிகப் பெரிய விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கியதும் அதன் வேகத்தை குறைத்துள்ளது. தவிர உபெர் நிறுவனம் இந்தியாவில் டாக்சி சந்தையை கைப்பற்ற போட்டியில் இறங்கியுள்ளதும் ஓலாவை பாதித் துள்ளது. உலக அளவில் அதிக முதலீடுகளை திரட்டிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஓலாவும் ஒன்று. 1,500 கோடி டாலர் முதலீடுகளை திரட்டி யுள்ளது. 1,200 கோடி டாலர் நிதி திரட்டும் முயற்சி களில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நிறுவனத்துக் குள் நீடிக்கும் சிக்கலை தீர்க்கவில்லை என்றால் ஓலா சந்தையை இழக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- நீரை மகேந்திரன்
maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT