Published : 24 Sep 2018 11:17 AM
Last Updated : 24 Sep 2018 11:17 AM
நான் வங்கியில் மேலாளராகப் பணியாற்றிய பொழுது ஓர் விநோதனமான அனுபவம். ஒருநாள் காலை 30 வயது இளைஞர் ஒருவர் என்னைப் பார்க்க வந்திருந்தார். ஏற்றுமதி செய்யக் கடன் கேட்டார். பொறியியல் படித்திருந்தார். வங்கியின் அருகில் தான் வீடு.
ஏற்றுமதியாளராக அரசாங்கத்தில் பதிவு செய்து விட்டீர்களா என கேட்டதற்கு, அது என்ன, இணையத்தில் கூடச் செய்யலாமாமே என்றார். உங்கள் தரப்பு மூலதனம் வைத்துள்ளீர்களா என்றதற்கு `அப்படியா, ஏற்பாடு செய்து விட்டால் போகிறது' என்றார். என்ன ஏற்றுமதி செய்வீர்கள் எனக் கேட்டேன். ‘கைவினைப் பொருட்கள், உடைகள், கிரானைட் என எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றார்!’ எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்வீர்கள் எனக் கேட்டதற்கு உலகத்தில் எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் அனுப்புவேன் என்றார்!
பொருட்களை நீங்களே தயாரிப்பீர்களா அல்லது வாங்கி விற்பீர்களா என்ற எனது கேள்விக்கு அவர் என்னையே, ‘எதற்கு அதிகக் கடன் விரைவாகக் கொடுப்பீர்கள்?' எனப் பதில் கேள்விகேட்டு விட்டார்! மேலும், ‘ஏற்றுமதியாளர்களுக்குக் கடன் கொடுப்போம் என விளம்பரப் படுத்துகிறீர்கள். கடன் வாங்க வந்தால் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றீர்களே?' எனசலித்துக் கொண்டவர், `எனக்குக் கடனை கொடுத்துத் தான் பாருங்களேன்' எனப் பொருமினார்!
அவருடைய பேச்சிலிருந்து அவரது தூரத்து உறவினர் ஒருவர் ஏற்றுமதி வர்த்தகத்தில் சமீப காலமாக நிறையச் சம்பாதிப்பதும், அவருக்கும் அதைப் போல பெரிய ஏற்றுமதியாளராக ஆக ஆர்வம் இருப்பதும் புரிந்தது. வங்கியில் கடன் வாங்குவதில் அதைவிட அதிக ஆர்வம் இருந்ததும் தெரிந்தது. ஆனால், அவர் ஏற்றுமதி செய்வது பற்றி ஏன், எப்படி, எங்கு என எதையுமே யோசித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை. அதில் உள்ள போட்டிகள், சவால்களை அவர் நினைத்துப் பார்க்கவேயில்லை.
முன்பின் பார்த்திராத ஒருவரை நம்பிப் பொருளை வெகுதூரத்தில் உள்ள, நமது சட்டங்கள் செல்லுபடியாகாத வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டியதிருக்கும் என்பதையும், அவரது பொருளின் விலை அமெரிக்க டாலரில் இருக்கும், எனவே, அந்த டாலரின் விலை மாறினால் அவரது லாபமும் மாறி விடும் என்பதையும் அவர் உணர்ந்திருக்கவில்லை.
ஏற்றுமதிக்கான எந்த நல்ல பயிற்சியும் எடுக்கவில்லை. பல விஷயங்களில் அவருக்கு மேலோட்டமான அறிவு இருந்ததே தவிர, இது, இதனால், இப்படி எனும் தெளிவு இல்லை. இதைத் தான் நம்ம வள்ளுவர் ‘தெளிவு இலதனைத் தொடங்கார்...'என்கிறார். அதாவது தமக்குத் தெளிவாக விளங்காத காரியத்தை பிறர் சொல்வதை மட்டும் வைத்துக் கொண்டு ஆரம்பித்து விடக் கூடாது என்கிறார்.
வங்கியில் பலமுறை இப்படித் தானுங்க. புதிதாய் தொழில் தொடங்கு பவர், அதற்கு வங்கியிடம் கடன் கேட்கும் போது தான் என்ன செய்யப் போகிறோம் எனும் திட்டத்துடன் அணுகுவதில்லை!
அதற்கு எவ்வளவு இடம், இயந்திரங்கள், மூலப் பொருட்கள், பணியாட்கள், நீர், மின்சாரம் போன்றவை வேண்டுமென தீர்க்கமாகச் சிந்தித்து அதற்கான விபரமான திட்ட அறிக்கை தயாரித்துக் கொண்டு வந்தால்தானே வங்கியால் கடன் விண்ணப்பத்தை முறையாகப் பரிசீலிக்க இயலும்? ‘செய்யப் போவதில் தெளிவு இருந்தால்தான் அதில் கவனக்குவிப்பு சாத்தியமாகும்' என அமெரிக்கப் பயிற்சியாளர் தாமஸ் லியனார்ட் சொல்வது உண்மை தானே?
ஐயா, இந்த மாதிரி தெளிவற்ற குழப்ப நிலை நம்மிடையே அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது! இந்த ஆலோசனைக் கூட்டங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பேசுபவர்களுக்கு என்ன சொல்கிறோம் என்பதில் குழப்பமோ சந்தேகமோ கூடாதில்லையா? அத்துடன் கூட்டம் முடிந்த பின் என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதும் தெளிவாக இருக்க வேண்டுமல்லவா?
‘ஓர் ஆலோசனைக் கூட்டத்தின் வெற்றியை, அது எவ்வளவு குறுகிய காலத்திற்கு நடந்தது, அல்லது குறித்த நேரத்தில் முடிந்ததா என்பவற்றை வைத்து முடிவு செய்யக் கூடாது. கூட்டம் முடிந்த பின், பங்கு கொண்டவர்களிடையே இன்னது செய்ய வேண்டுமென்ற தெளிவும், அதைச் செய்து முடிப்போம் எனும் உறுதியும் ஏற்பட்டு இருப்பதே உண்மையான வெற்றி' என்கிறார் பாட்ரிக் லென்சியானி எனும் அமெரிக்க மேலாண்மை அறிஞர்!
எதைச் செய்தாலும் ஏன் செய்கிறோம், எப்படிச் செய்யப் போகிறோம் என, முன் யோசனையுடன் செய்வது தானே நல்லது? நீங்கள் அலுவலக வேலையாக டெல்லி செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். பயணச்சீட்டு வாங்கும் பொழுதே எங்கு தங்குவது எப்போது திரும்புவது என்பதைப் பற்றியெல்லாம் உத்தேசமான திட்டமாவது இருக்கணும் இல்லையா? இல்லாவிட்டால் புது இடத்தில் போய் அங்கும் இங்கும் அலைந்து நேரம் விரயமாகும். அங்கு நாம் செல்லும் முன்பே, நமது மனது சென்று வர வேண்டும்!
`சந்தேகத்துடன் தொடங்கும் காரியம் சங்கடத்திலேயே முடியும்' என்பது சாணக்கியர் கூற்று. எல்லோருக்கும் எக்காலத்திற்கும் பொருந்துமல்லவா?
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT