Published : 10 Sep 2018 12:17 PM
Last Updated : 10 Sep 2018 12:17 PM
கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த நகை மற்றும் விலை உயர்ந்த பொருள்களைக் காப்பற்றுவது மிகவும் சவாலான விஷயம்தான். வங்கி லாக்கர்களில் வைப்பது பாதுகாப்பானது என்றிருந்த நிலைமையும் மாறிவிட்டது. வங்கி லாக்கர்களில் திருடுபோனால் அதற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு,வங்கி லாக்கர்களில் விலை உயர்ந்த பொருள்கள் வைப்பதை கேள்விக் குறியாக்கிவிட்டது.
சில வங்கிகளில் லாக்கர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும், வங்கி லாக்கர்கள் பாதுகாப்பானவை என்றஅபிப்ராயத்தை மாற்றிவிட்டன.
இத்தகைய சூழலில் வங்கி லாக்கர்களை பயன்படுத்துவதுதவிர வேறு சில பாதுகாப்பான வழிமுறைகளையும் ஆராய வேண்டிய கட்டாயத்துக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளோம்.
வீட்டு லாக்கர்கள்
வீட்டிலேயே லாக்கர்களை வாங்கி வைப்பது இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும். அது உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாதுகாப்பானதாகவும் இருக்கும். லாக்கரை வாங்குவது என்பது அதை வாடகைக்கு எடுப்பதை விட சிறந்தது.
லாக்கர் வாங்க செலவிடும் தொகை 5 அல்லது 6 ஆண்டுகளில் வங்கி லாக்கர் வாடகைக்கு செலவிடும் தொகையை ஈடுகட்டிவிடும். லாக்கருக்கான ஆண்டு வாடகை நீங்கள் பயன்படுத்தும் லாக்கரின் அளவு உள்ளிட்டவற்றைப் பொறுத்தது. நகர்ப்புறங்களில் சற்று அதிகமாகவும், கிராமப்பகுதிகளில் வாடகைக் குறைவாகவும் இருக்கும்.
பாரத ஸ்டேட் வங்கியில் சிறியஅளவிலான லாக்கருக்கான ஆண்டுவாடகை ரூ. 1,100. (கிராமப் பகுதிகளில் இது ரூ. 800). பெரிய லாக்கர் (எக்ஸ்ட்ரா லார்ஜ்) வாடகை ரூ. 8 ஆயிரம் (கிராமப்பகுதிகளில் ரூ. 7 ஆயிரம்) ஆக உள்ளது.
வங்கியில் லாக்கரை பெற, அங்கு கணக்கு தொடங்க வேண்டும். அந்த கணக்கில் 3 ஆண்டுகளுக்கான லாக்கர் கட்டணம் இருக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் லாக்கர் சேவைக்கு மூன்று ஆண்டுக்கான திரும்ப அளிக்கும் தொகையை வசூலிக்கின்றன. ஆனால் தனியார் நிறுவன லாக்கருக்கான வாடகை வங்கிகள் வசூலிக்கும் வாடகையை விட அதிகமாகும்.
ஒரு நடுத்தர அளவிலான எலெக்ட்ரானிக் லாக்கர் அதாவது சிறிய லாக்கரை விட மூன்று மடங்கு பெரிதானது. இதன்விலை ரூ. 8,700. இது வங்கி அல்லது தனியார் லாக்கர் வசூலிக்கும் வாடகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும்.
வங்கிகளில் இரண்டு பேர் மட்டுமே லாக்கரைக் கையாள அனுமதிப்பர். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அனுமதிப்பர். ஆண்டுக்கு 12 தடவைக்கு மேல் திறந்தால் வங்கிகள் ஒரு முறைக்கு ரூ. 100 பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கின்றன. உரிமையாளர் காலமானால் அவருக்குப் பிறகு அவரது வாரிசுதாரர் (நாமினி) லாக்கரை நிர்வகிக்க வங்கிகள் அனுமதிக்கும்.
இருந்தாலும் வீட்டில் விலை உயர்ந்த பொருள்களை பாதுகாப்பதில் சில சிரமங்கள் நேரிடும். வங்கிகள் அளிக்கும் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலர் கண்காணிப்பு வீட்டில் இருக்காது.
லாக்கர் தேர்வு
வீட்டிற்கு தேவையான லாக்கரை தேர்வு செய்வதில் சில முறைகள் உள்ளன.
எத்தகைய பூட்டை தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உள்ளது. பொதுவாக சாவி போட்டு திறக்கும் லாக்கர்கள் உள்ளன. விலை உயர்ந்த லாக்கர்கள் மின்னணு தொழில்நுட்பம் அதாவது எலெக்ட்ரானிக் கீ பேட், ஸ்வைப் கார்டு மற்றும் விரல் ரேகை பதிவு அடிப்படையில் செயல்படக் கூடியவையும் உள்ளன.
இத்தகைய மின்னணு லாக்கர்கள் வழக்கமான சாவி போட்டு திறக்கும் லாக்கரின் விலையைக் காட்டிலும் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு கோத்ரெஜ்ஜின் 23 லிட்டர் எலெக்ட்ரானிக் (இ-லேப்டாப்) மாடல் விலை ரூ. 11,522. வழக்கமான சாவி போட்டு திறப்பது (எம் – லேப்டாப்) விலை ரூ. 8 ஆயிரமாகும்.
இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம் லாக்கரின் எடையாகும். லாக்கரைப் பொறுத்தமட்டில் அது எடை அதிகமாக இருப்பது நல்லது. இதனால் அதை எளிதில் தூக்கிச் செல்ல முடியாது. மேலும் அதை உடைப்பதும் சிரமம். உதாரணத்துக்கு 30 கிலோ எடையுள்ள மின்னணு லாக்கர் விலை ரூ. 12,200. 18 கிலை எடையுள்ள லாக்கர் விலை ரூ. 13,530.
லாக்கரை எங்கே வைக்கப் போகிறீர்கள் என்பதையும் திட்டமிட வேண்டும். வீடு கட்டும்போதே லாக்கர் வைக்கும் இடத்தை திட்டமிட்டு, நேர் பார்வையில் படாமல் இருக்குமாறு அமைக்க வேண்டும். லாக்கரை சுவற்றில் பதித்து விடுவது பாதுகாப்பானது.
தீ விபத்து நடந்தாலும் பாதிக்காத வகையில் பாதுகாப்பான லாக்கரும் உள்ளன. இவற்றை வாங்கினால் நீங்கள் உங்களது ஆவணங்களை இதில் வைத்து பாதுகாக்க முடியும்.
வீட்டினுள் லாக்கரை வைக்கத் தீர்மானித்து விட்டால் சிசி டிவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
காப்பீடு
வங்கிகளின் லாக்கரில் உள்ள விலை உயர்ந்த பொருள்கள் களவு போனால் வங்கிகள் அதற்கு பொறுப்பேற்காத நிலையில் வீட்டிலுள்ள லாக்கரை நீங்கள் காப்பீடு செய்ய முடியும்.
நீண்ட காலம் பூட்டியிருந்த வீட்டிலுள்ள லாக்கரில் களவு நடந்தால் அதற்கு காப்பீடு கிடைக்காமல் போகலாம். அந்த வகையில் வங்கி லாக்கர்கள் பாதுகாப்பனவையாக இருக்கும். வீடுகளில் களவு நிகழ்வதை விட வங்கிகளில் களவு நிகழ்வது குறைவு என்பதே இதற்குக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT