Published : 10 Sep 2018 11:59 AM
Last Updated : 10 Sep 2018 11:59 AM
இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி ஒட்டுமொத்த தொழில்துறையையே தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் உற்பத்தி தொழில்கள் கோலோச்சிக்கொண்டிருந்தன. ஆனால் இப்போது தொழில்நுட்ப நிறுவனங்களும், சேவை நிறுவனங்களும் தான் தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக்கின்றன. காரணம், ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களும், இணையம் பயன்படுத்துவோரும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதனால், இந்தியாவின் இ-காமர்ஸ் துறையின் வளர்ச்சி விகிதம் உலகின் பிற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக (51 சதவீதமாக) இருக்கிறது. இந்தியாவில் 2017ல் 38.5 பில்லியன் டாலராக இருந்த இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு 2026ல் 200 பில்லியன் டாலராக உயரும் என்கிறது ஒரு கணிப்பு.
குடும்பமாகப் போய் கடைகளில் பொருள்களை வாங்கியதெல்லாம் பழைய கதையாகிக்கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோரும் ஒருமுறையேனும் பிளிப்கார்ட், அமேசான் பக்கம் போகாமல் இருப்பதில்லை. அந்தளவுக்கு ஸ்மார்ட்போன் பயன்பாடு நம்முடைய நுகர்வுக் கலாசாரத்தை மாற்றியிருக்கிறது. இந்த ஆன்லைன் வர்த்தகச் சந்தையை முழுவதுமாகக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் தற்போது சந்தையில் உள்ள இ-காமர்ஸ் நிறுவனங்களின் நோக்கம். ஆனால் அது அவ்வளவு எளிதும் இல்லை.
அதற்கு அதிநவீன தொழில்நுட்பமும், மனித வளமும் மிகவும் அவசியம். அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் இவை இரண்டிலுமே முன்னணியில் இருக்கிறது. ஆட்டோமேஷன் செய்யப்பட்ட கிடங்குகள், அவற்றை மேற்பார்வையிட போதுமான மனித வளம், விரைவான டெலிவரி, டெலிவரிக்குப் பிந்தைய சேவைகள், அவ்வப்போது அதிரடி ஆஃபர்கள் எனத் தன்னுடைய வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தன்னுடனேயே கட்டிப்போட்டு வைத்துக்கொள்கிறது.
இதனால்தான், உலகிலேயே ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்புடைய நிறுவனமாக ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து அமேசான் அந்த இடத்தை அடைந்திருக்கிறது. இந்த விஷயத்தில் ஆப்பிளை விட அமேசான் ஒரு படி மேல். ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்புக்கு 200 பில்லியன் டாலர் மிச்சமிருக்கும்போது இலக்கை அடைய ஆப்பிள் 15 மாதங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அமேசான் இந்த 200 பில்லியன் டாலரை வெறும் மூன்றே மாதங்களில் அடைந்து சாதனை படைத்துள்ளது. 2018-ல் மட்டுமே 440 பில்லியன் டாலர் வளர்ச்சியை அடைந்துள்ளது அமேசான். இதற்கு அமேசான் தன்னை அதிநவீன தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றிக்கொண்டிருப்பதுதான் காரணம்.
அமெரிக்க நிறுவனமான அமேசானைப் போலவே தானும் மாறினால்தான் இந்தச் சந்தையில் நீடித்து இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறது, அமேசானுக்கு நிகராகப்போட்டி போடும் பிளிப்கார்ட். உலக அளவில் அமேசான் பெரிய நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் பிளிப்கார்ட்டுடன்தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. அந்தளவுக்கு பிளிப்கார்ட் இந்தியர்களைக் கவர்ந்து வைத்துள்ளது. ஆனால்,இதுமட்டும் போதாது, கடலைப் போல விரிந்துகிடக்கும் இந்திய ஆன்லைன் சந்தையைக் கைப்பற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கில் பிளிப்கார்ட் தயாராகி வருகிறது.
அதன் ஒரு கட்டமாகத்தான், பிளிப்கார்ட் சமீபத்தில் வால்மார்ட்டுடன் இணைந்தது. தன்னுடைய 77 சதவீத பங்குகளை வால்மார்ட் நிறுவனத்துக்கு 16 பில்லியன் டாலருக்கு விற்றிருந்தாலும், நிறுவன நிர்வாகம் முழுக்க இன்னமும் பிளிப்கார்ட் நிறுவனத்திடம்தான் இருக்கிறது. இது பிளிப்கார்ட் நிறுவனத்துக்குப் பாசிட்டிவான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. வால்மார்ட்டுடன் இணைந்து தற்போது மளிகை பொருள்களை ‘சூப்பர்மார்ட்’ என்ற பெயரில் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, மிந்த்ரா, போன்பே ஆகிய நிறுவனங்களைக் கையகப்படுத்தி தனது தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பிளிப்கார்ட் தன்னுடைய சந்தை மதிப்பை உயர்த்திக்கொண்டது.
தற்போது அடுத்தகட்டத்தை நோக்கி நகரும் வகையில் அமேசானைப் போலவே முழுமையான ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தில் இறங்குகிறது. அமேசான் 2012-லேயே இதற்கான வேலைகளில் இறங்கிவிட்டது. அமேசான் நிறுவனத்துக்கு கிவா சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம்தான் இந்த செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களைக் கொடுத்தது. பிளிப்கார்ட் ‘கிரே ஆரஞ்ச்’ என்ற ரோபாட்டிக் கம்பெனியுடன் இதற்காக கைகோர்த்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே பிளிப்கார்ட் இந்த நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய கிடங்குகளை இன்னும் விரைவாகச் செயல்படும்படியாக மாற்றியமைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறது. இதற்காக பிளிப்கார்ட், கிரே ஆரஞ்ச் நிறுவனத்தில் பல மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
கிவா சிஸ்டம்ஸ் நிறுவனம் அமேசானுக்குக் கொடுத்ததைக் காட்டிலும் வித்தியாசமான அணுகுமுறையில் தனது ஆட்டோமேஷன் கருவிகளை வடிவமைக்க கிரே ஆரஞ்ச் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கிவா சிஸ்டம்ஸ் அமேசான் நிறுவனத்துக்கு பிக்அப் மற்றும் ஸ்டோரேஜ் ஆகியவற்றில் மட்டுமே ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளது. ஆனால், கிரே ஆரஞ்ச் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்குகளை 100 சதவீத ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க முடிவுசெய்துள்ளது. அதாவது தர ஆய்வு, பிக் அப், ஸ்டோரேஜ், வகைப்படுத்துதல் என அனைத்திலும் ஆட்டோமேஷனைப் புகுத்துகிறது. இதன் மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் கிடங்குகள் மிக விரைவாகப் பொருள்களை டெலிவரிக்கு அனுப்ப முடியும் என்றும் அந்நிறுவனம் கூறுகிறது.
பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் ஆன்லைன், மொபைல் மற்றும் ரீட்டெய்ல் என எல்லா இடங்களிலும் பிளிப்கார்ட்டின் சேவையை எதிர்பார்ப்பதாகச் சொல்லும் கிரே ஆரஞ்ச், அத்தகைய சேவைகளுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும் என்றும், பொருள்களை 2 மணி நேரத்தில் வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்ய முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய தொடக்கம் ஒரு மலையின் நுனியளவுதான் என்றும், இன்னும் சில ஆண்டுகளில் நாங்கள் பிளிப்கார்ட் கிடங்குகளில் களமிறக்கப் போகும் ரோபாட்களின் எண்ணிக்கை அனைவரையும் மலைக்கவைக்கும் வகையில் இருக்கும் என்றும் அந்நிறுவனம் ஆச்சரியப்படுத்துகிறது.
எப்படி கிரே ஆரஞ்ச் நிறுவனத்தின் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் இ-காமர்ஸ் துறையில் வேலை செய்கிறது என்பதையும் பார்க்கலாம். இங்கு ‘கிரே மாஸ்டர்’ என்ற அனைத்து செயல்பாடுகளையும் தீர்மானிக்கும், கட்டுப்படுத்தும் மாஸ்டர் சிஸ்டம் ஒன்று இருக்கும். இந்த கிரே மாஸ்டர் தான் உத்தரவுகளை வழங்கும். கிரே மாஸ்டர் தரும் கமாண்டுகளை பட்ளர் சிஸ்டம் செயல்படுத்தும். நகரும் தன்மை கொண்ட இந்த பட்ளர் சிஸ்டம் தான் டெலிவரி செய்ய வேண்டிய பொருள் உள்ள அலமாரிகளை ஆப்ரேட்டர்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த கிரே மாஸ்டர் சிஸ்டம், இண்டஸ்ட்ரி இன்ஜின், எக்ஸிக்யூஷன் இன்ஜின், கோர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதில் வாடிக்கையாளர் ப்ளேஸ் செய்யும் ஆர்டர் இண்டஸ்ட்ரி இன்ஜின் வழியாக கிரே மாஸ்டர் சிஸ்டத்தை வந்தடையும், பின்னர் அந்த ஆர்டர் கோர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு அனுப்பப்பட்டு தகவல்கள் உறுதிசெய்யப்படும். பின்னர் கிரே மாஸ்டர் சிஸ்டம் எக்ஸிகியூஷன் இன்ஜினுக்குத் தகவல் அனுப்பும். எக்ஸிகியூஷன் இன்ஜின் பொருளைக் கிடங்கிலிருந்து எடுத்து டெலிவரி ஆப்பரேஷனுக்குக் கொடுக்கும். இந்த தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த முன்னதாக அனைத்துப் பொருள்களிலும், அலமாரிகளிலும் பிரத்யேக க்யுஆர் கோட் பிரிண்ட் செய்யப்படும்.
இந்த க்யூ ஆர் கோட் உதவியால்தான் பொருள்களை வகை பிரிப்பது, பொருள்களை அடையாளம் கண்டு எடுத்து டெலிவரிக்கு அனுப்பவது என அனைத்தும் செயல்படுத்தப்படும். ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸில் இருக்கிற அதிகபட்ச பலனே அது மனிதனைப் போல சோர்வடையாது, கடிகாரம் கூடவே இதுவே நிற்காமல் ஓடும். அதற்குத்தர வேண்டிய எனர்ஜியையும் சரியான கமாண்டுகளையும் கொடுத்தால்போதும், கொஞ்சமும் பிசகாமல் வேலையைக் கச்சிதமாக முடித்துவிடும்.
இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் இருந்தாலும், முதலில் யார் முதல் அடியை எடுத்து வைக்கிறார்களோ,அவர்கள் வசமே வெற்றி தன்னை ஒப்படைத்துவிடுகிறது. இதனடிப்படையில் பிளிப்கார்ட்டின் இந்த ஆட்டோ மேஷன் முன்னெடுப்பு இந்தியஇ-காமர்ஸ் துறையின்வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT