Published : 10 Jun 2019 11:04 AM
Last Updated : 10 Jun 2019 11:04 AM
ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறதா. வெரி குட். பிள்ளையார் பிடிக்க தயாராகிவிட்டீர்கள். அது குரங்காய் மாறாமல் இருக்க ஸ்டார்ட் அப் தொடங்க போட வேண்டிய பிள்ளையார் சுழி பற்றி பேசுவோம்.
ஸ்டார்ட் அப் ஈசி என்றாயே, எதற்கு இந்த பில்ட் அப் என்று நீங்கள் கேட்கலாம். அந்த ஈசியில் தான் கொஞ்சம் கஷ்டம் இருக்கிறது. உள்ளுணர்வு கூறுவதை கேட்டு அப்படியே நடக்க முடியாத மேட்டர் ஸ்டார்ட் அப். ‘Startups are counterintuitive’ என்கிறார் வெற்றிகரமான பல தொழில்கள் துவங்கி பல ஸ்டார்ட் அப் கம்பெனிகளில் முதலீடு செய்யும் ‘பால் கிரஹாம்’.
உள்ளுணர்வு முக்கியம்தான், அது சொல்வதைக் கேட்பது உத்தமம்தான் என்றாலும் உள்ளுணர்வே சமயத்தில் சறுக்க வைக்கும். குறிப்பாக ஸ்டார்ட் அப்ஸ் தொடங்கும் போது என்கிறார் கிரஹாம். தொழில் என்று வரும்போது தமிழர் உள்ளுணர்வு கொஞ்சம் இழுபறியே. உடனே எழும் தமிழ் கோபத்தை தணியுங்கள். ஸ்டார்ட் அப் நம் கலாச்சாரத்தில் அதிகம் ஊறாத ஒரு விஷயம்.
போதும் என்ற மனமே பொன்செய் மருந்து என்று வாழ்க்கை கற்றுத் தந்ததை வியாபாரத்தில் பின்பற்றி அத்தி பூத்தாற் போல் துவங்கும் தொழிலையும் அதிகம் வளரவிடாமல் போதும் என்று சுறுக்கி வைக்க பழிகிவிட்டோம். அதனாலேயே ஸ்டார்ட் அப் என்று வரும் போது உள்ளுணர்வு உபாதைகள் நமக்கு வருவது உண்டு.
கிரிக்கெட் ஆட்டத்தில் பவுலிங் நன்றாக இருந்து அதை அடிக்க முடியாமல் தினறும் பேட்ஸ்மெனின் உள்ளுணர்வு அவரிடம் கண்ணை மூடி, பேட்டை சுழற்றி கரகம் ஆடு, சிக்ஸர் பறக்கும் என்கிறது. அவரும் அப்படி செய்து, பின்னர் அவுட் ஆவதை பார்த்திருப்பீர்கள். அந்நேரம் உள்ளுணர்வு கூறுவதை ஒதுக்கி பவுலிங்கிற்கு ஏற்றவாறு ஆடுவதுதான் சமயோஜிதம். உள்ளுணர்வை கேட்பது தவறில்லை. தொழில் செய்து பழக்கமில்லாத போது உள்ளுணர்வே உள்குத்து வேலை செய்யும் என்கிறார் கிரஹாம்.
ஸ்டார்ட் அப் துவங்க பிசினஸ் தெரிந்திருக்க வேண்டும் என்று உள்ளுணர்வு கூறும். தெரிந்தால் நல்லது தான். ஆனால் அவசியமில்லை. வெற்றிக்கு வழி தொழில் தெரிந்திருப்பதில் அல்ல, வாடிக்கையாளரை அறிந்திருப்பதில். அவர்கள் தேவையை புரிந்திருப்பதில். `ஃபேஸ்புக்’ கம்பெனியை துவங்கும் போது ‘மார்க் ஜூகர்பர்க்’ காலேஜ் பையன். மீசை கூட முளைக்கவில்லை என்று கேள்வி. பிசினஸ் தெரியாத வயது.
ஆனால் மாணவர்களை இணையத்தில் இணைத்தால் தாங்களும் சேர்ந்து தங்கள் இஷ்டமித்ர பந்துக்களையும் ஏனைய ஜந்துக்களையும் கூட சேர்த்து ஃபேஸ்புக்கில் அரட்டையடித்து, ஆடிப்பாடி அங்கேயே குடியிருப்பார்கள் என்று உணர்ந்தார். மாணவராய் அவர் ஆரம்பித்தது மடுவாய் மாறி மலையாய் வளர்ந்து உலகெங்கும் வியாபித்து சென்ற வருடம் அதன் விளம்பர வருவாய் மட்டுமே 55 பில்லியன் டாலர்கள். மக்கள் தேவையை முதலில் உணர்ந்தார் ஜூகர்பர்க். தொழில் துவங்கினார். படிப்படியாகத் தான் அதைப் பற்றி தெரிந்துகொண்டார்!
அதே போல் முதலீடு விஷயங்கள் பற்றி முழுவதும் தெரியாமல் தொழில் செய்யாதே என்று உள்ளுணர்வு கூறும். இதுவும் தெரிந்திருந்தால் நல்லது. தெரியாத பட்சத்தில் பெரிய பாதகமில்லை. கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டா பிறக்கிறோம். பார்த்துப் பழகி கற்கவில்லையா? அது போல் முதலீடு, ஃபைனான்ஸ் விஷயங்கள் பெரிய பிரமாதம் அல்ல. தொழில் துவங்கி கற்கலாம். தேவையென்றால் ஆலோசகரை அமர்த்தலாம். பாஸ்புக் பற்றிக்கூடத் தெரியாத வயதில் ஜூகர்பர்க் ஃபேஸ்புக் துவங்கி வெற்றி பெறவில்லையா!
உள்ளுணர்வு இன்னொன்றும் சொல்லும். ஸ்டார்ட் அப் துவங்க நல்ல ஸ்டார்ட் அப் ஐடியா தேடு என்று. ஐடியா தேவைதான். ஆனால் ஐடியாவை மெனக்கெட்டு தேடினால் அது கிடைக்காது. வீட்டில் கரண்ட் போகும் போது வத்திப்பெட்டி தேடினால் அது கையில் அகப்படாமல் அழிச்சாட்டியும் செய்யும் பாருங்கள், அது போல. ஆனால் தேவையில்லாத போது எங்கு திரும்பினாலும் வத்திப்பெட்டி கண்ணில் படும். ஸ்டார்ட் அப் ஐடியா எங்கே என்று தேடாதீர்கள்.
சுற்றியிருப்பவர்களை பாருங்கள். அவர்கள் பிரச்சினையை புரிந்துகொள்ளுங்கள். அனுதின வாழ்க்கையை அசைபோடுங்கள். ஆயிரம் பிரச்சினை தெரியும். அதற்குத் தீர்வு தேடுங்கள். அது சிம்பிளாய் இருந்தால் விசேஷம். ஏனெனில் அது தான் உங்கள் ஸ்டார்ட் அப் ஐடியா. ‘ஊருக்கு போக பஸ் டிக்கெட் கிடைக்கல’ என்று பலர் புலம்புவதை எத்தனை முறை கேட்டிருப்போம். அப்பிரச்சினையை ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மூலம் தீர்க்கப் பிறந்த ‘ரெட்பஸ்’ உங்களைச் சுற்றியே இருந்த ஒரு சாதாரண ஸ்டார்ட் அப் ஐடியா தானே!
பொதுவாகவே ஸ்டார்ட் அப் ஐடியா உலகை வெல்லும் வெற்றி ஐடியாவாக முதலில் தெரிவதில்லை. பெரிய ஐடியா என்று எண்ணி ஜூகர்பர்க் ஃபேஸ்புக் துவங்கவில்லை. தன் கல்லூரி நண்பர்களை இணைப்பதற்கு மட்டும் துவங்கினார். அது பின்பு வளர்ந்து விரிந்து விஸ்வரூபமெடுத்து உலகையே கட்டிப்போட்டு வெற்றி பெற்றிருக்கிறது!
வெற்றிகரமான ஸ்டார்ட் அப் ஐடியா உங்கள் கண்ணில் மட்டும் தான் படுவேன் என்று காத்திருக்குமா? உங்களுக்கு முன் எத்தனை பேர் அதை கவனித்து தொழில் துவங்கியிருப்பார்கள்? எனவே ஸ்டார்ட் அப் ஐடியா எங்கு கிடைக்கும் என்று பெட்ரோமாக்ஸை தூக்கிக்கொண்டு கிளம்பாதீர்கள். சுற்றியிருப்பவர் வாழ்க்கையை பாருங்கள். ஸ்டார்ட் அப் ஐடியா வத்திப்பெட்டி போல் சுயம்புவாய் எழுந்தருளும்!
- satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT