Last Updated : 18 Mar, 2018 07:04 AM

 

Published : 18 Mar 2018 07:04 AM
Last Updated : 18 Mar 2018 07:04 AM

கல்வியை அனுபவமாக மாற்றுகிறோம்

ந்த வாரமும் கல்வித் துறையை சேர்ந்த ஒரு நிறுவனம் குறித்துதான் பார்க்கப்போகிறோம். சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தை பார்ப்பது பல பள்ளி குழந்தைகளின் ஆசையாக இருக்கும். ஆனால் அந்த ஆசை சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. பல மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு பல்வேறு காரணங்களால் கிடைப்பதில்லை. இதனால் நடமாடும் கோளரங்கம் என்னும் யோசனையை செயல்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு புதிய அனுபவத்தை கொடுத்து வருகிறார் வினோத் . `ஸ்பேஸ்டிரெக்’ என்னும் நிறுவனத்தை நடத்தி வருடம் இவருடன் சமீபத்தில் நடந்த உரையாடலில் இருந்து...

கலைக்கல்லூரியில் படித்தேன். படிக்கும் போது வெளிப்பணி ஒப்படைப்பு தொழில் (பிபிஓ) மிகப் பெரிய துறையாக இருந்தது. ஆனால் அந்த படிப்பை ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் தொடர முடியவில்லை. அதனைத் தொடர்ந்து எம்பிஏ படிக்க நினைத்து ஐஐபிஎம் சென்றேன். ஆனால் அங்கேயும் ஒரு எனக்கு பிடிப்பு வரவில்லை. ஆனால் அங்கு ஏற்கெனவே பணம் கட்டியிருந்ததால் ஐரோப்பாவில் இருக்கும் நிறுவனம் ஒன்றுக்கு பயிற்சிக்குச் சென்றேன். அங்கிருந்த சமயத்தில் ஏர்பஸ் நிறுவனத்தில் பயிற்சிக்கு சேரும் வாய்ப்பு கிடைத்து பிரான்ஸ் சென்றேன். இப்போது யோசித்து பார்த்தால் நான் பிரான்ஸில் இருந்த நாட்கள்தான் எனக்கு கல்வித்துறையில் ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்னும் எண்ணத்தை உருவாக்கியது. அங்குதான் பயன்பாட்டின் அடிப்படையில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

அதன் பிறகு சில நாடுகளுக்கு வேலைக்குச் சேர்ந்தேன். ஒரு கட்டத்தில் இந்தியா வந்து தொழில் தொடங்கலாம் என முடிவு செய்தேன். குழந்தைகள் கல்வி தொடர்பாக நிறுவனத்தை நானும் என்னுடைய நண்பரும் இணைந்து தொடங்கினோம். ரோபோடிக்ஸ் பற்றி சொல்லிக்கொடுத்தோம். சர்வதேச அளவில் ரோபோடிக்ஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு பயிற்சிகளை அளித்தோம். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் நிறுவனத்தை வளர்க்க முடியவில்லை. அதனால் பிரான்ஸைசி கொடுத்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக பிரான்ஸைசியும் வெற்றிபெறவில்லை. அதனால் அந்த பிஸினஸை நண்பனிடம் கொடுத்துவிட்டேன். ரோபோடிக்ஸ் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்ற சமயத்தில் அங்கு இதுபோன்ற நடமாடும் கோளரங்கத்தைப் பார்த்தேன். இந்தியாவில் இதுபோல இல்லை என்பதால் இங்கு இதனை நண்பருடன் இணைந்து தொடங்கினேன்.

கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவில் நடமாடும் கோளரங்கம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இல்லை. இதனால் என்ன நன்மை என்றால் அனுபவம் சார்ந்த கல்வியை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அனுபவம் சார்ந்து கல்வியை வழங்கும் போது குழந்தைகளுக்கு நினைவில் பதியும். நாங்கள் பல வகையான வீடியோக்கள் (360டிகிரி) வைத்திருக்கிறோம். இவை பெரும்பாலும். வானம், புவி சார்ந்த அறிவியல், இயற்பியல் உள்ளிட்ட பல வகையான வீடியோக்கள் உள்ளன. ஐரோப்பிய வானியல் ஆய்வு மையம், நாசா உள்ளிட்ட இடங்களில் இருந்து மூலக்கருத்துகளை வாங்கி இருக்கிறோம்.

குழந்தைகளுக்கு அனுபவம் தாண்டிய இதில் என்ன பயன் இருக்கிறது என்பதுதான் என்னை சந்திக்கும் பலரது கேள்வியாக இருக்கிறது. பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்களுக்கும் வானம்தான் பெரிய ஊக்க சக்தியாக இருந்திருக்கிறது. வானவியல் குறித்து 360 டிகிரி வீடியோவை பார்க்கும் போது அனைத்தும் புரியும் என்று சொல்ல முடியாது. ஆனால் பல கேள்விகளை மாணவர்களுக்கு உருவாக்கும். இது குறித்து விவாதம் நடக்கும், மேலும் அது குறித்த தகவல்களை படிக்கத் தொடங்குவார்கள். இந்த தாக்கத்தை எங்களால் உருவாக்க முடியும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி 1.0 என்னும் நிலையில் இருந்தது. அதாவது அங்கு ஆசிரியர் மட்டுமே புத்திசாலி. அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அவர் சொல்வதுதான் நமக்கு தகவல். அந்த நிலையில்தான் தகவல் தொழில்நுட்பம் இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு கல்வி 2.0 என்னும் நிலைக்கு மாறியது. கல்வி 2.0-ல் வகுப்பு அறையில் ஆசிரியர் புத்திசாலி கிடையாது. சமயங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்களை விட அதிக தகவல் தெரிந்திருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு படிக்க பிடிப்பதில்லை. ஆசிரியர்களுக்கு சொல்லிகொடுக்க தெரியவில்லை என்னும் நிலை இருக்கிறது. அடுத்து கல்வி 3.0 என்னும் நிலைக்கு மாறும். இங்கு ஆசிரியர் ஒரு வழிகாட்டியாக இருப்பார். விசை பற்றி ஆசிரியர் சொல்லித்தர தேவையில்லை. இந்த வீடியோவை பாருங்கள். அதை பயன்படுத்துங்கள். சந்தேகம் இருந்தால் கேள்வி கேளுங்கள் என ஆசிரியர் எங்கு தேவையோ அங்கு மட்டுமே செயல்படுவார்.

தற்போது அனைத்து விஷயங்களும் அனுபவம் மூலம் மட்டுமே உணரப்படுகிறது. ஆனால் கல்வியில் மட்டுமே அனுபவமாக இல்லாமல் தியரியாக மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. கல்வியில் அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதை நோக்கி செயல்படுகிறோம். தற்போது கோளரங்கத்தில் கிடைக்கும் அனுபவத்தை வகுப்பறையில் உருவாக்க வேண்டும். இதற்கு ஏற்ப வகுப்பறையை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கி செயல்பட்டு வருகிறோம் என்று வினோத் கூறினார்.

karthikeyan.v@thahindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x