Last Updated : 26 Mar, 2018 11:10 AM

 

Published : 26 Mar 2018 11:10 AM
Last Updated : 26 Mar 2018 11:10 AM

ஒரு விவசாயியின் பரிதாப கதை..

பா

ர்க்கவே பரிதாபமாக இருக்கிறது. மொத்தமே இரண்டரை நிமிடம் ஓடுகிறது அந்த வீடியோ. விவசாயி ஒருவர் தனது காலிபிளவர் தோட்டத்தில் அத்தனை காலிபிளவர்களையும் மண்வெட்டியால் ஆவேசமாக வெட்டுகிறார். அவரைத் தடுக்க முயலும் பக்கத்து தோட்டத்து விவசாயியிடம் கோபமாகப் பேசியபடி, தோட்டத்தின் அத்தனை காலிபிளவர்களையும் வெட்டிச் சிதைக்கிறார்.

அடுத்து, பக்கத்திலேயே இருக்கும் தக்காளி தோட்டத்தில் செடிகளை கோபத்துடன் பிடுங்கி எறிகிறார். விரக்தியும் கோபமும் தெரிகிறது அந்த விவசாயியின் முகத்தில். கடைசியில் தலையில் கைவைத்தபடி தரையில் அமர்ந்து புலம்புகிறார்.

என்னதான் நடந்தது..? யார் இந்த விவசாயி..? மகாராஷ்ட்ரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் இருக்கிறது பெகேகான் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சிறு விவசாயிதான் பிரேம்சிங் லக்கிராம் சவான். பெயரில்தான் லக்கி இருக்கிறது. வாழ்க்கையில் இருப்பதாகத் தெரியவில்லை. ஏற்கெனவே பயிரிட்ட பருத்தியில் புழு பாதிப்பு ஏற்பட்டு பயிர் முழுவதும் அழிந்துவிட்டது. அதிலேயே ஏகப்பட்ட கடன். அடுத்ததாக தனது தோட்டத்தில் தக்காளியும் காலிபிளவரும் பயிரிட்டிருந்தார். தக்காளி நல்ல விளைச்சல் கண்டிருந்தது.

மொத்தம் 400 கிலோ தக்காளியை அறுவடை செய்தார் சவான். சாக்குப் பையில் தக்காளியை நிரப்பிக் கொண்டு, அருகில் இருக்கும் சந்தைக்குச் சென்றார். சாக்குப் பைகளுக்கும், சரக்குப் போக்குவரத்துக்கும் அவருக்கு ரூ.600 செலவானது. ஆனால், அத்தனை தக்காளிக்கும் அவருக்கு கிடைத்த விலை மொத்தமே ரூ.442தான். தக்காளி பயிருக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி என ரூ.25 ஆயிரத்துக்கு மேல் செலவிட்டிருந்தார் அவர். இந்த நிலையில்தான் சந்தைக்கு தக்காளியை கொண்டு சென்ற அவருக்கு வெறும் ரூ.442 கிடைத்தால் எப்படி இருக்கும்? நொந்துபோனார் சவான்.

விரக்தி, ஆத்திரத்துடன் தோட்டத்துக்கு வந்தார். தோட்டத்தில் எங்கு பார்த்தாலும் காலிபிளவர் பூத்துக் கிடந்தது. அப்போதே சந்தை விலை காலிபிளவருக்கு கிலோ ரூ.1 தான். இதை வளர்த்து சந்தைக்குக் கொண்டு போய், இந்த விலைக்கு விற்றால் நமக்கு என்ன கிடைத்து விடும் என்ற ஆத்திரத்தில் அருகே கிடந்த மண்வெட்டியை கையில் எடுத்தார். அத்தனை காலிபிளவர்களையும் ஆத்திரத்தில் அழித்துத் தீர்த்தார். அரசாங்கத்தை திட்டி தீர்த்துக் கொண்டே இந்த காரியத்தை செய்தார். இதை இன்னொரு விவசாயி தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோதான் இணையதளத்தில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.

ஏன் இப்படிச் செய்தார் சவான்? `அன்றைய தினம் கடும் மன உளைச்சலில் இருந்தேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விவசாயியாக இருப்பதற்கே அவமானமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் கடன் சுமை ஏறிக்கொண்டே போனால், எப்படிதான் வாழ்வது? அன்றாட செலவுக்கே பணம் இல்லை. மகனின் பள்ளிக் கட்டணத்தைக் கட்டக் கூட பணமில்லை. விவசாயியாக இருந்து என்ன பலன்?..' என பரிதாபமாகக் கேட்கிறார் சவான். இவரின் கிராமம் மராத்வாடா பகுதியில் இருக்கிறது. இப்பகுதியில்தான் விவசாயிகள் தற்கொலை அதிகம் நடப்பது வழக்கம்.

விவசாயி சவானுக்கு ரூ.90 ஆயிரம் கடன் இருக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பு வந்தபிறகும், இதை மாநில அரசு இன்னும் தள்ளுபடி செய்யவில்லை. விவசாய இடுபொருட்கள் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆனால், விளைபொருட்களின் விலை அதற்கேற்ப அதிகரிப்பதில்லை. பல நேரங்களில் போட்ட காசும் கிடைப்பதில்லை. இப்படி அடுத்தடுத்து விவசாயத்தை தொடரும் போது, கடன் சுமை ஏறிக்கொண்டே போவதை தவிர்க்க முடிவதில்லை.

சவானின் கோபத்துக்கு தக்காளி விலை சரிவுதான் காரணம். ஆனால் அதே தக்காளி கிலோ ரூ.100க்கு விற்கும் போதும் அதை விளைவித்த விவசாயிகளுக்கு அந்த அளவுக்கு லாபம் கிடைப்பதில்லை. இடையில் இருக்கும் ஏஜெண்டுகள்தான் லாபம் அடைகிறார்கள். பல நேரங்களில் விவசாயிகளிடம் இருந்து வாங்கும் விலையை விட 10 மடங்கு அதிக விலை வைத்து விற்கிறார்கள்.

இதுதான் இந்திய விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலை. சிறிய விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை ஆண்டுக்கு ஆண்டு கடனாளியாக மாறிக் கொண்டே இருக்கிறார்கள். போன வருடம் வாங்கிய எந்தப் பொருளின் விலையும் இந்த வருடம் கண்டிப்பாக அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் விவசாய விளை பொருட்களின் விலை மட்டும் கடந்த 2 ஆண்டுகளாகவே குறைந்து கொண்டே வருகிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் உற்பத்தி அதிகரித்தபோதும், அதனால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.

குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் விளை பொருட்களுக்கு அதிக விலை கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஜூனில் மத்திய பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 விவசாயிகள் பலியானதுதான் மிச்சம். தானே நகரில் இருந்து மும்பைக்கு விவசாயிகள் காலில் ரத்தத்துடன் நடைபயணம் மேற்கொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x