Last Updated : 26 Mar, 2018 11:09 AM

 

Published : 26 Mar 2018 11:09 AM
Last Updated : 26 Mar 2018 11:09 AM

சபாஷ் சாணக்கியா: கூழைக் கும்பிடு போடுகிறவரை...

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில், வைத்தி எனும் நாகேஷின் கதாபாத்திரம் மறக்க முடியாதது. தனக்குப் பணம் கிடைக்கும் என்றால் யாரையும் புகழ்வார், சும்மா புகழ்ந்து தள்ளுவார். பத்மினியின் தாயாரிடம், `இத்தனை பெரிய கழுத்தை வச்சுகிட்டு இரண்டே இரண்டு நகை போட்டிருக்கியே.எவ்வளவு இடம் வீணாகப் போகிறது? வாங்கி வாங்கிப் போட வேண்டாமா?’ என்பார்.

பணக்கார மைனர் பாலாஜியிடமும், மதன்பூர் மகாராஜா நம்பியாரிடமும், அழகுமிக்க மோகனா அவர்களுக்கே பொருத்தமானவர் என்பார். அவர்கள் இவர் பேச்சில் மயங்குவதும், இவர் வலையிலேயே விழுவதும், பின்னர் திருந்துவதும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும்.

ஆனால், ஐயா, புகழ்ச்சிக்கு மயங்காதவர் வெகு சிலரே.அது யாரையும் சொக்க வைப்பது, யாருக்கும் போதை கொடுக்கக் கூடியது. `உங்களுக்குத் தான் புகழ்ச்சியே பிடிக்காதே, எவ்வளவு அடக்கமானவர்கள் நீங்கள்? ' என்று சொல்லியே புகழ்வோரும் உண்டு!

இந்த முகஸ்துதிக்கும், உள்ளார்ந்த பாராட்டிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒருவருடைய உண்மையான நற்குணங்களை, நற்செயல்களை, வேறு உள்நோக்கம் இன்றிப் போற்றிப் பேசுவதுதானே பாராட்டு? நல்ல மதிப்பெண்கள் வாங்கிய சிறுவனை, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்த சிறுமியை, கடினமான பணியைச் செய்து முடித்த பணியாளரை, நல் யோசனை கூறிய மனைவியை பாராட்டுவது அவசியம்.

அது அவர்களை ஊக்குவிக்கும்.ஆனால் அந்த முகஸ்துதியோ ஒருவரைத் தகுதிக்கு மீறிப் புகழ்வது, அவரிடமிருந்து காரியம் சாதித்துக் கொள்வதற்காகச் செய்யப்படுவது! பலன்களை கொடுக்கக் கூடிய அதிகாரத்தில் உள்ளவர்களிடம் செய்யப்படுவது!அது மிகைப்படுத்தப்பட்டதென்பது சொல்பவருக்கும் தெரியும், கேட்பவருக்கும் தெரியும்.ஆனால் அதன் சுகம் அலாதியானதாயிற்றே! வேண்டாமென மறுக்கத் தோன்றாது!

வங்கியில் கிளை மேலாளராகவோ, அல்லது உயர் பதவிகளிலோ இருந்தவர்களுக்குத் தெரியும். காரியம் ஆக வேண்டுமென்றால் ஒரே ஐஸ் தான். முடிந்து விட்டாலோ, யாரும் சீண்ட மாட்டார்கள்.ஒரு முறை நண்பர் ஒருவருக்கு சென்னையிலிருந்து டெல்லிக்கு இடமாற்றம். விடைகொடுக்கச் சென்றிருந்தேன்.பல வாடிக்கையாளர்கள் அவரது உதவிகளுக்கு நன்றி கூறினார்கள். ஆனால் ஒப்புக்கு அவர் எங்கு போகிறார் என்று கேட்டார்களே தவிர, அவர் பதில் சொல்லி முடிக்கும் முன்பே, அவரது இடத்திற்கு வரவிருப்பவர் பற்றித்தான் அதிக நேரம் பலப்பல கேள்விகள் கேட்டார்கள்.

டெல்லியிலோ நேர் எதிர்மாறான அனுபவமாம். அவரை முதல் முறையாகப் பார்த்தவர்கள் கூட வெகுவாக உயர்த்திப் பேசினார்களாம். தென்னிந்தியர்களே பொதுவாக நல்லவர்கள் என்றும், அவரது ஆங்கிலம் போல அவர்களுக்குச் சரளமாகப் பேச வராது என்றெல்லாமும் ஒரே புகழாரமாம்! ஆனால், ஒவ்வொருவரின் பேச்சின் முடிவிலும் ஒரு கோரிக்கை இருந்ததாம்.தெரிந்தது தானே என்கின்றீர்களா?

மேஸன் கூலே எனும் அமெரிக்கப் பேச்சாளர் சொல்வதைக் கேளுங்கள். உங்களை அதிகமாகத் தூக்கி வைத்துப் பேசுபவர்களிடமும், அவமரியாதை செய்பவர்களிடமும், நீங்கள் கேட்க வேண்டியது ஒரே கேள்வி தான்! `என்னிடம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள்?’

தகுதிக்கு அதிகமாகப் புகழ்வதை ஒரு விதமான கையூட்டு என்றே சொல்லலாம்.பின்னே என்னங்க, பிரதிபலனை எதிர்பார்த்து,நேர்மைக்கு முரணாகக் கொடுக்கப்படுவதுதானே அது? கண்ணியமாக இருப்பவர்களை எப்படி மடக்குவது, என்ன விலை கொடுத்து வாங்குவது என யோசிப்பவர்கள் ஜாதி, மதம், இனம் எனப் பல்வேறு உத்திகளைக் கையாள முற்படுவதுண்டு.அந்த வகையைச் சேர்ந்ததுதான் இந்தப் புகழ்ச்சியும். நியாயமான மனிதரென்றால், அதையும் ஏற்கக் கூடாதல்லவா?

`புகழ்ச்சி வாசனைத் திரவியம் போன்றது, முகர்ந்து அனுபவிக்கலாமே தவிர, குடித்து விடக்கூடாது’ என்கிறார் நகைச்சுவையாளர் ஜோஷ் பில்லிங்ஸின் !

மனிதர்கள் யாவரும் அங்கீகாரத்திற்காக, பாராட்டிற்காக, எங்கும், எப்பொழுதும் ஏங்குகிறார்கள் என்பது ஓர் உளவியல் உண்மை!அதன் மறு பரிமாணம், அதீதப் பரிமாணம் தான் இந்த முகஸ்துதி.புதிய சேலை கட்டி வந்து நிற்கும் மனைவியிடம் உனக்கு இது நன்றாக இருக்கிறது என்று சொல்லாவிட்டால் என்ன ஆகும்? `நான் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?' எனக் காதலனிடம் காதலி கேட்பது தெரிந்த,எதிர்பார்த்த பதிலுக்காகத் தானே?

முகஸ்துதி செய்பவர்கள் இந்த எதிர்பார்ப்பைத்தான், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாம் இவர் சொல்கிறபடி அழகு தானோ, புத்திசாலி தானோ என தங்களுக்கு இல்லாததையெல்லாம் கூட இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்! விரிக்கப்பட்ட வலையில் விழுந்தும் விடுவார்கள்! புகழ்ச்சி, செய்பவரையும் கெடுக்கும், செய்யப்படுபவரையும் கெடுக்கும் என்பது உண்மையல்லவா?

தேவைக்கு அதிகமாகப் புகழ்ந்தால், மகிழ்ச்சி அடையலாமா? என்ன தேவைக்காக,அவர் இப்படித் தேவையில்லாமல் நம்மிடம், குழைகிறார் என சந்தேகம் அல்லவா படவேண்டும்? என்ன, முகஸ்துதி செய்பவர்களை என்றும் நம்பவே கூடாது எனச் சாணக்கியர் கூறுவது சரி தானே?

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x