Published : 08 Apr 2019 12:36 PM
Last Updated : 08 Apr 2019 12:36 PM
அப்பாவி முதலீட்டாளர்கள் ஏமாற்று சேமிப்புத் திட்டங்களில் (பொன்ஸி) சேர்ந்து பணத்தை பறிகொடுப்பதைத் தடுக்க கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு முறையற்ற சேமிப்புகளைக் கட்டுப்படுத்தும் அவசர சட்டத்தைக் கொண்டு வந்தது.
தொடக்கத்தில் இந்த அவசர சட்டத்தைப் பார்த்தபோது இது முறைப்படுத்தப்படாத அனைத்து சேமிப்புத் திட்டங்களுக்கும் பொருந்தும் என தெரிந்தது. ஆனால் ஜூவல்லரி நிறுவனங்கள் நடத்தும் தங்க நகை சேமிப்பு திட்டம் இந்த விதிமுறையிலிருந்து தப்பியது தெரியவந்துள்ளது. தங்க நகை வர்த்தகர்கள் இதுபோன்று விதிமுறைகளிலிருந்து தப்பிப்பது புதிதல்ல. முதல் முறையும் அல்ல.
வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் டெபாசிட் திரட்டுவது தொடர்பாக புதிய நிறுவன சட்டம் 2014-ம் ஆண்டு வெளியானது. இதன்படி எந்த ஒரு பதிவு பெற்ற நிறுவனமும் (ஜூவல்லரி உள்பட) பொதுமக்களிடமிருந்து 365 நாள்களுக்கு மேல் நிதி திரட்டுவதாயிருந்தால் அவை திரும்ப அளிக்க வேண்டிய தொகைக்கு ஏற்ப டெபாசிட் காப்பீடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதே போல இந்நிறுவனங்கள் அளிப்பதாக உறுதியளிக்கும் வட்டி விகிதமானது வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் அளிக்கும் வட்டிக்கு அதிகமாக இருக்கக் கூடாது எனஅறிவுறுத்தப்பட்டது. உடனே நகைக் கடை உரிமையாளர்கள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தனர். முன்பு 12 மாதம், 24 மாதம், 36 மாதம் என வசூலித்த நகை சீட்டை 11 மாதங்களாகக் குறைத்தனர்.திவால் நடைமுறையில், முதல் முக்கியமான விஷயம் நிறுவன சொத்துகள் கைப்பற்றப்பட்டு விற்கப்படுவது.
சொத்துகள் விற்கப்பட்டு வரும் தொகையில் முதலில் ஊழியர்களுக்கான சம்பள பாக்கி அளிக்க வேண்டும். பிறகு நிறுவனத்துக்கு கடன் வழங்கியவர்களுக்கு தர வேண்டும். இவைகளுக்கு அளித்தது போக மீத மிருந்தால் எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் அளித்தவர்களுக்கு தர வேண்டும். இதுதான் விதிமுறை. அதன்படி பார்த்தால், எவ்வித நிபந்தனையும் இன்றி கடன் அளித்தவர்கள் பட்டியலில்தான் சீட்டு சேர்ந்த சாமான்ய முதலீட்டாளர்கள் வருகின்றனர்.
புதிய அவசர சட்டத்தில் டெபாசிட் என்பது பெறப்படும் முன் பணம் அல்லது கடன், அல்லது திரும்ப அளிப்பதாகக் கூறப்படும் உறுதி மொழியுடன் பெறப்படும் தொகை அல்லது குறிப்பிட்ட சேவைக்காக பெறப்படும் தொகை, அதில் ஆதாயம் அல்லது சலுகை இருப்பின் அவை அனைத்துமே டெபாசிட்டாக கருதப்படும் என விளக்கப்பட்டுள்ளது.
இவ்விதம் யார் நிதி திரட்டுகிறார் என்பது முக்கியமல்ல. இது தனி நபராக இருந்தாலும் சரி, உரிமையாளர் நிறுவனமாக இருந்தாலும் சரி, பங்குதாரர் நிறுவனமாக இருந்தாலும் சரி, நிறுவனம், கூட்டுறவு சொசைட்டி அல்லது அறக்கட்டளை இதில் எதுவாக இருந்தாலும் மேற்கூறிய டெபாசிட் திரட்டுவது சட்டப்படி குற்றம். அந்த வகையில் ஜூவல்லரி உரிமையாளர்கள் தங்க நகை சேமிப்புக்கு பொதுமக்களிடம் நிதி திரட்டுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இதில் சில விதி விலக்குகள் உள்ளன.
தனிநபர் கடனாக உறவினரிடமிருந்து பெறும் தொகை, பொருளை அளிப்பதற்காக முன் கூட்டி பெறப்படும் (அட் வான்ஸ்) தொகை ஆகியவை டெபாசிட் என்பதிலிருந்து விலக்கு பெறுகிறது. இதைப் பயன்படுத்தி ஜூவல்லரி நிறுவனங்கள் தங்களது தங்க நகை சேமிப்புத் திட்டத்தை வாடிக்கையாளர்களிடம் வெற்றிகரமாக செயல்படுத்துகின்றன. எதிர்காலத்தில் தங்கம் வாங்க வழிசெய்யும் சேமிப்பு திட்டமானது வர்த்தக முன்பணம் என்ற பெயரில்தான் செயல்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக அகில இந்திய ஜெம் அண்ட் ஜூவல்லரி கூட்டமைப்பின் தலைவர் அனந்த பத்மநாபன் கூறியது: அரசு கொண்டு வந்த அவசர சட்டம் தங்க நகை வர்த்தகர்கள் செயல்படுத்தும் தங்க நகை சேமிப்புத் திட்டத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பாக இல்லை. தங்க நகை உரிமையாளர்கள் திரட்டும் நிதியானது வர்த்தக முன் பணமாகும். இது சேமிப்பாக கருதப்படாது. இவ்விதம் திரட்டும் வர்த்தக முன் பணத்துக்கு தள்ளுபடி, பரிசு பொருள் வழங்கலாமா என மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
சிஎஸ் சிகா பன்சால் (நிறுவன செயலர்): நகை சீட்டு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் செலுத்தும் தொகை டெபாசிட்தான். இதை வர்த்தக முன் பணம் என்றால், வாடிக்கையாளர் என்ன பொருள் வாங்கப் போகிறார் என்பதை எப்போது தீர்மானிப்பார். தான் என்னவாங்கப் போகிறோம் என்பதை யாரும் முன் கூட்டி தீர்மானிப்பதில்லை. அந்த வகையில் இதுபோன்ற திட்டங்களும் தடை செய்யப்பட வேண்டியவைதான்.
வங்கியில் அல்லது பதிவு செய்யப்பட்ட வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் (என்பிஎப்சி) அல்லது முன்னணி நிறுவனங்கள் நிர்வகிக்கும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் முதலீடு கிடைக்காமல் போனால், நீங்கள் ரிசர்வ் வங்கி, நிறுவன விவகார அமைச்சகம் (எம்சிஏ), செபி போன்ற அமைப்புகளில் முறையிட்டு உங்களது குறையை கூறலாம்.
உங்கள் சேமிப்புக்கு நிவாரணம் கிடைக்கும். ஆனால் தங்க நகை சேமிப்புத் திட்டத்தில் பணம் கிடைக்காவிடில் அதற்கு முறையிட எந்த உயரிய அமைப்புகளும் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். போட்ட பணம் போனால் அதற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். வெறுமனே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்.
-rajalakshmi.nirmal@thehindu.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT