Last Updated : 29 Apr, 2019 12:01 PM

 

Published : 29 Apr 2019 12:01 PM
Last Updated : 29 Apr 2019 12:01 PM

ஜெட் ஏர்வேஸ் சிறகொடிந்த பறவை!

விமான சேவையில் கடந்த ஆண்டு வெள்ளிவிழாவைக் கொண்டாடி முடித்த ஜெட் ஏர்வேஸ் இன்னும் சில தினங்களில் 26-ம் ஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது. அந்த நாளை நிறுவனமும் பணியாளர்களும் மகிழ்ச்சியாக இனிப்புடன் கொண்டாட வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாக உள்ளது.

இன்று ஜெட் ஏர்வேஸ் செய்திகளில் அடிபடாத நாட்களே இல்லை. பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி. சம்பள பாக்கி கேட்டு வீதியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பங்குகளை யாராவது வாங்கிக்கொள்ளுங்களேன் என்று கெஞ்சும் நிலைக்கு ஆளாகியுள்ளது ஜெட் ஏர்வேஸ்.

இந்தியாவில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் திவாலாகியுள்ளன. ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் எனத் தொடரும் தோல்விகள் இந்திய விமான சேவைத் துறையின் எதிர்காலத்தையே சந்தேகத்துக்குள்ளாக்கி இருக்கிறது.

இன்றைய பொருளாதார சூழலில் இந்தியாவில் எந்தத் துறையுமே சிறப்பான நிலையில் இல்லை. எல்லா துறைகளுமே நெருக்கடியில்தான் இருக்கின்றன. வாராக் கடன்களால் வங்கித் துறை சிக்கலில் இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஎல் அண்ட் எஃப்எஸ் திவால் ஆகி வங்கி சாரா நிதி நிறுவனங்களின் துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

ஐடி துறையும் முன்பு போல் இல்லை. உற்பத்தி துறை முற்றிலுமாக படுத்துவிடும் போலிருக்கிறது. விவசாயத்தைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படிப்பட்ட சூழலில் ஒரு நிறுவனம் பிரச்சினைக்குள்ளாவதும், திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்படுவதும் இயல்பு.

ஆனால், ஏர்லைன்ஸ் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக இருந்து வந்த ஒரு நிறுவனம் வெறும் ரூ.8,500 கோடி கடனுக்காகவும், சில நூறு கோடி சம்பள பாக்கிக்காகவும் மட்டுமே மடிந்துபோகிறது என்பது சந்தேகப்பட வேண்டிய ஒன்றாகவே படுகிறது.

கடனை ஒரு காரணமாகக் காட்டுவதையும் ஏற்க முடியவில்லை. காரணம், இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் உள்ள பல நிறுவனங்களுக்கு ரூ. 50 ஆயிரம் கோடிக்கும் மேல் கடன் உள்ளது. மேலும், விமான சேவைத் துறையில் சில சிக்கல்கள் இருந்தாலும், துறையின் வளர்ச்சியும் மிக நன்றாகவே உள்ளது கண்கூடு.

ஏன் இந்த தோல்வி?

2009-ல் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சேர்த்து 6.8 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2018-ல் டெல்லியில் உள்ள விமான நிலையங்களில் பயணித்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே இந்த எண்ணிக்கையைவிட அதிகமாகப் பதிவாகியுள்ளது. டிஜிசிஏ வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி 2018-ல் டெல்லியில் உள்நாட்டு விமான சேவையில்  ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் 10 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்திய விமான சேவைத்துறை ஒவ்வொரு ஆண்டிலும் காணும் வளர்ச்சி வீதம் 20%. இது மற்ற நாடுகளோடு ஒப்பிடு கையில் அதிகமாகவே உள்ளது. அப்படி இருக்கையில் எப்படி ஜெட் ஏர்வேஸ் போன்ற நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனம் திவாலாகும் நிலைக்கு ஆளாக முடியும் என்ற சந்தேகம் எழுகிறது.

புரியாத புதிர்

விமான சேவை துறையைப் பொருத்தவரை பெரும்பாலும் எல்லா நிறுவனங்களுமே சமீப காலமாக நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. எரிபொருள் கட்டண உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை பொதுவான காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், நிறுவனங்களுக் கிடையிலான போட்டியும் லாபம் ஈட்டாததற்கு முக்கிய காரணம் ஆகும். டிக்கெட் விலையை நிர்ணயிப்பதிலிருந்து வாடிக்கையாளர்களைக் கவரச் செய்யும் செலவுகள் வரை அனைத்துமே போட்டி நிறுவனங்களை முந்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் செயல்படுத்தப்படுகின்றன. எல்லா நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தேடி ஓடுகின்றனவே தவிர லாபத்தை நோக்கி ஓடவில்லை.

சந்தையைப் பிடிக்கும் போட்டியில் பெட்டியை நிரப்ப மறந்துவிடுகின்றன. வால்யூமுக்கும் வேல்யூவுக்கும் இடையிலான சமநிலையை விமான நிறுவனங்கள் கோட்டை விட்டு விடுகின்றன என்கிறார்கள் துறை சார்ந்த வல்லுநர்கள். ஆனால், இவை அனைத்து நிறுவனங்களின் பொதுவான பிரச்சினை. ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தைப் பொருத்தவரை, போட்டி மனப்பான்மை, செலவினங்கள் அதிகரிப்பு எல்லாம் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது.

அது என்ன என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.ஆரம்பத்திலிருந்தே நரேஷ் கோயல் தன் வசம் இருந்த பங்கை குறைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டார். பிறகு ஒரு வழியாக சம்மதித்தார். எதியாட் நிறுவனமும் பங்கு சதவீதத்தை அதிகரித்துக்கொள்ள முன்வந்தது. ஆனால், அதுவும் இறுதியில் நடக்கவில்லை. நரேஷ் கோயலுக்கு அடுத்து அதிக பங்குகளைத் தன் வசம் வைத்திருந்த எதியாட் நிறுவனத்தினாலும் எந்தவொரு முடிவும் எடுக்க முடியவில்லை.

இந்நிலையில், ரூ.8,500 கோடி கடனுக்கே நாட்டின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனத்தின் நிர்வாகத்தில் வங்கிக் குழு கைவைத்தது. ஜெட் ஏர்வேஸ் வாராக்கடன் என்ற நிலையை இன்னும் எட்டவில்லை. அதற்குள்ளாகவே வங்கிகள் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளன. திவால் நடவடிக்கையின் போதுதான் வங்கிகளுக்கான அதிகாரம் இருக்கும். அதுவரையிலும் நிறுவனத்தின் நிர்வாகமும் இயக்குநர் குழுவும் எடுக்கும் முடிவுதான். அப்படியிருக்க திவால் நடவடிக்கைக்கு முன்பே வங்கிக் குழு தலையிட்டு அதிரடியாக முடிவுகளை எடுத்திருக்கிறது.

வங்கிக் குழுவின் நோக்கம் என்ன?

நிறுவனத்தைத் தொடர்ந்து செயல்படுத்த நிதி இல்லை என்ற நிலையில், அதற்கான தொகையை வங்கித் தரப்பு தரும் எனக்கூறி நிர்வாகத்தைக் கைப்பற்றியது. ஜெட் ஏர்வேஸை தொடர்ந்து செயல்படுத்தவே இந்த நடவடிக்கை எனக் கூறியது. பின்னர் நரேஷ் கோயல், அவரது மனைவி மற்றும் சில இயக்குநர்களை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தது. வங்கிகள் ரூ.1,500 கோடி வழங்குவதாகத் தெரிவித்த பிறகே நரேஷ் கோயல் பதவி விலகினார். ஆனால், வங்கிகள் அந்தப் பணத்தைத் தரவில்லை.இதனால், இயங்கிக் கொண்டிருந்த விமானங்களை ஒவ்வொன்றாக தரையிறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

போகப்போக ஜெட் ஏர்வேஸ் நிலைமை மோசமானது. 119 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், இன்று ஒரு விமானம் கூட இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதுவரை நிறுவன நிர்வாகத்தைக் கைப்பற்றிய வங்கிக் குழு நிறுவனத்தைச் சீரமைக்க எந்த மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறது என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது. வங்கிக் குழுவின் நோக்கம்தான் என்ன என்ற கேள்வி இங்கே எழுகிறது.

வங்கிக் குழு ஜெட் ஏர்வேஸ் பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறுகிறது. ஆனால், ஜெட் ஏர்வேஸ் மீண்டு வரும் என்பதற்கான பாசிட்டிவான அறிகுறி இதுவரையிலும் இல்லை. ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவுக்கு சில காலம் அவகாசம் கொடுத்திருந்தால் அவர்களே ஏதோ ஒரு தீர்வை எட்டியிருப்பார்கள். வங்கிக் குழுவின் அதிரடியான முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணமும் தெரியவில்லை. எதியாட் பங்குகளை வாங்கத் தயாராக இருந்தும், பங்கு விற்பனையை ஏல முறைக்குக் கொண்டு வந்துள்ளது.

 இவையெல்லாம் நிறுவனம் தொடர்ந்து நடக்க வேண்டுமென்ற அக்கறையில் எடுத்தது போல் தெரியவில்லை. பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கூட நிறுவன ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளார்கள். அதற்கும் இதுவரை எந்த எதிர்வினையும் இல்லை. நிதி நெருக்கடியில் உள்ள ஜெட் ஏர்வேஸை அப்படியே விட்டுவிடலாம் என்ன ஆகிறதோ ஆகட்டும் என்றே பல தரப்பும் திட்டமிடுவதாகத் தெரிகிறது.

இதுவரையிலும் நரேஷ் கோயல் உட்பட யாரும் வெளிப்படையாக எந்த ஒரு அறிக்கையையோ தகவல்களையோ வெளியிடவில்லை. அமைதியாகவே இருக்கின்றனர். இதற்கிடையில் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பிற விமான சேவை நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸின் சந்தையைப் பிடிக்க முனைப்பு காட்டுகின்றன.

ஆனால், ஜெட் ஏர்வேஸ் இதுவரை இயக்கி வந்த விமான சேவை வழித்தடங்களைப் பிற நிறுவனங்கள் எடுத்து சேவை வழங்கும் அளவுக்கு நிறுவனங்களில் விமானங்களும், விமான ஓட்டிகளும் இருக்கிறார்களா என்பது சந்தேகம். மொத்தத்தில் விமான சேவைத் துறையின் தற்போதைய நெருக்கடி என்பது பெரும்பாலானோரை பாதிப்பதாக உள்ளது.

ஒரு பக்கம் ஊழியர்கள் சம்பள பாக்கிக்காக போராடுகிறார்கள். மறுபக்கம் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஜெட் ஏர்வேஸின் தற்போதைய வழித்தடங்கள் அனைத்தையும் பிற நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களுக்கு வழங்குவதாகவும், ஜெட் ஏர்வேஸ் மீண்டு வந்ததும் அவை ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தீர்வு எப்போது?

விமானசேவைத் துறையில் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்தாலே நஷ்டம்தான் மிச்சம். இந்நிலையில் சேவைகள் நிறுத்தப்பட்டு, ஜெட் ஏர்வேஸின் வழித்தடங்கள் பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பின், எப்படி அது மீண்டு வரும் என்று நம்ப முடியும். அப்படியே மீண்டு வந்தாலும் தரையிறக்கப்பட்ட விமானங்கள் மீண்டும் செயல்பாட்டுக்குத் தகுதியானது என்ற அங்கீகாரத்தைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதேபோல், வங்கிகள் ஜெட் ஏர்வேஸின் விமானங்களையும் சொத்துகளையும் குத்தகைக்கும், விற்பனைக்கும் விடுவதற்கு அவை அதற்கான தகுதியுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் வங்கிக் குழுவும், அரசும்  ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் விரைவில் தீர்வு காண வேண்டியது அவசியம். ஏனெனில், இது ஜெட் ஏர்வேஸ் என்ற ஒரே ஒரு நிறுவனத்தோடு நிற்கும் பிரச்சினை அல்ல.

-saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x