Published : 04 Mar 2019 11:38 AM
Last Updated : 04 Mar 2019 11:38 AM
உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் பத்தாம் இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. ஆனால், அவருடைய தம்பி அனில் அம்பானியின் நிலை என்ன தெரியுமா? 2008-ம் வருடம் போர்ப்ஸ் இதழின் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருந்தார் அனில்அம்பானி. பத்தே பத்து வருடங்கள் தான்.இன்று உலகப் பணக்காரர்கள் பட்டியலிலேயே அனில் அம்பானியின் பெயர் இல்லை.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 5,400 கோடி டாலர். அனில் அம்பானி அதில் வெறும் 2 சதவீதம். 150 கோடி டாலர் மட்டுமே. இன்னும்சொல்லப்போனால் எப்போது வேண்டுமானாலும் ஜெயிலுக்குப் போக வாய்ப்புள்ள நிலையில் இருக்கிறார்.
ஏகப்பட்ட கடன் சுமை ஒரு பக்கம், மறுபக்கம் திவாலாகும் நிறுவனத்தை தக்கவைக்க முடியாத நிலை மறுபக்கம் என இருக்க,“எரிக்சன் நிறுவனத்துக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்து, இல்லாவிட்டால் ஜெயிலுக்குப் போ” என்று உச்சநீதிமன்றம் கறாராகச் சொல்லிவிட்டது. எப்படி இந்த வீழ்ச்சிக்கு ஆளானார் அனில்? ஏன் அவரால் அண்ணன் முகேஷைப் போல் வெற்றியடைய முடியவில்லை?
பிசினஸ் உலகில் மிகப்பெரும் சாம்ராஜ்யத்தை எழுப்பி தன் பிள்ளைகளிடம் தாரைவார்த்துவிட்டு சென்றார் திருபாய் அம்பானி. எண்ணெய் வர்த்தகம் முதல் சில்லறை வர்த்தகம் வரை பெரும்பாலான துறைகளில் தனது தொழிலை விரிவுபடுத்தியிருந்தார் திருபாய் அம்பானி. 2002-ல் திருபாய் அம்பானி இறக்கும் வரையிலும் தந்தையின் நிறுவனத்தில் அம்பானி சகோதரர்கள் இருவருமே ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளாக இருந்தார்கள். அவருடைய மரணத்துக்குப் பிறகு, மகன்களின் சொத்து சண்டையில் ரிலையன்ஸ் இரண்டாக உடைந்தது.
2004 நவம்பரில் இருவருக்கும் மோதல் முற்ற, தாயார் கோகிலாபென் அம்பானி தீர்த்துவைத்து சொத்துகளைப் பிரித்தார். முகேஷ் அம்பானி பெட்ரோல் ரிஃபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் பிசினஸை எடுத்துக்கொண்டார். அனில் அம்பானி மின் உற்பத்தி, டெலிகாம், நிதி சேவை ஆகியவற்றை எடுத்துக்கொண்டார்.
இவரது நிறுவனங்கள் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் கீழ் (ஏடிஏஜி) வந்தன. அனில் எடுத்துக்கொண்ட துறைகள் எல்லாமே அப்போது வளரும் துறைகளாக இருந்தன. அவர் முகேஷை காட்டிலும் சிறப்பாக முன்னேறுவார் என்றே எல்லோரும் நினைத்தனர்.
ஏனெனில், இவர்கள் பிரிந்த போதுதான், இந்தியாவில் மொபைல் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. ஆனால், அவருடைய தோல்விக்கு காரணமாக அமைந்த சிக்கலே வேறு.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய டெலிகாம் கம்பெனியாக இருந்தது. ரிலையன்ஸ் பவர் 2008-ல் ஐபிஓ வரும்போது வெறும் 60 விநாடிகளில் பங்குகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றில் அப்படியொரு நிகழ்வு நடந்ததே இல்லை. அந்த அளவுக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்த அனில் அம்பானியின் தொழில் இன்று வீழ்ச்சியில் இருக்கிறது. இன்று அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமப் பங்குகளை வாங்க ஆளில்லை. பங்குகளின் விலை அதல பாதாளத்தில் இருக்கின்றன.
அனிலின் வீழ்ச்சிக்கு மூன்று காரணங்களைச் சொல்லலாம். ஒன்று அவருடைய குணம், இரண்டு டெலிகாம் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள், மூன்று கடன்கள். இவை மூன்றும்தான் அனில் அம்பானியின் இறுதி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கின்றன.
அனில் அம்பானி தேர்ந்தெடுத்த துறைகள் அனைத்துமே சேவையை மையமாகக் கொண்டவை. சேவைத் துறையில் போட்டி ரொம்பவே அதிகம். எப்போது வேண்டுமானாலும் ஒரு புதிய நிறுவனம் உருவாக வாய்ப்புள்ள சேவை துறையில், சர்வதேச நிறுவனங்கள் பல லட்சக்கணக்கான கோடி முதலீடுகளைச் செய்ய தயாராக உள்ளன. டாடா, ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல் என பல நிறுவனங்கள் களத்தில் இருந்தன. அதேபோல், நிதி சேவைகள் துறையிலும் ஏகப்பட்ட நிறுவனங்கள் முளைத்தன. மின் உற்பத்தி பற்றிசொல்லவே தேவையில்லை. சவால்கள் நிறைந்த துறை.
இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏதோ ஒருவகையில் பெரும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் சந்தித்தார் அனில். ஆனாலும், எண்ணெய் ரிஃபைனரி தொழிலில் பெரும் லாபம் ஈட்டிக்கொண்டிருந்த முகேஷ் அம்பானியைக் காட்டிலும் அதிக வருவாயை ஈட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் கண்மூடித்தனமாகக் கடன்களை வாங்கி முதலீடு செய்தார். அவருடைய பிடிவாதமும், கோபமும் அவரைத் தொடர்ந்து தவறான முடிவுகளை எடுக்க வைத்தன.
நிறுவனம் நஷ்டத்தையே சந்தித்துவந்த போதும், தொழிலைத் தக்கவைக்க தொடர்ந்து கடன் வாங்கினார். அதுமட்டுமல்லாமல், அரசியல்வாதிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டார். ஆனால், அவருக்கு அது எந்த வகையிலும் உதவவில்லை. ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரமும்கூட அனில் அம்பானிக்கு எதிராகவே அமைந்தது.
2009-ல் அப்போதிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முகேஷ் மீது பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். பொறாமையில் தொழிலை கெடுக்க திட்டமிடுகிறார் என்று பழி சொன்னார். இதனால் இருவருக்கும் மீண்டும் முட்டிக்கொண்டது. தாயார் இருவருக்கும் சமரசம் செய்துவைத்தார்.
2010-ல் அம்பானி சகோதரர்கள், ஒருவருடைய தொழிலில் இன்னொருவர் வரக்கூடாது என்று போட்டுக்கொண்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. டெலிகாம் துறையில் தனது வருகையை மிக பிரம்மாண்டமாக அறிவித்தார் முகேஷ் அம்பானி. இந்தியாவில் உள்ள 130 கோடி பேரில் 50 கோடி பேரிடம் இன்று இணையம் பயன்படுத்தும் போன்கள் உள்ளன என்றால், அதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ.
ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதை முற்றிலுமாக தரைமட்டமாக்கியதில் ஜியோவுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
இலவச ஆஃபர்களால் டெலிகாம் துறையையே தலைகீழாக மாற்றியது ஜியோ. அந்தப் புயலில் அனில் அம்பானியும் காணாமல் போனார். அனில் தனது டெலிகாம் தொழிலை விற்க நினைத்த போதெல்லாம், பிற தொழில்கள் போதுமான லாபம் ஈட்டத் தவறின. பிற தொழில்களிலும் பிரச்சினைகள் தலைதூக்கின. ரிலையன்ஸ் நேவல் அண்ட் இன்ஜினியரிங் கம்பெனிபங்குகள் சரிவைச் சந்தித்தன. ரிலையன்ஸ் பவரும் பெரும் சரிவைச் சந்தித்தது. 2008-ல் ஐபிஓ-வில் வரலாற்று சாதனைபடைத்த இந்த பங்கின் விலை தற்போது ரூ.10-க்கும் கீழே உள்ளது. ஏடிஏஜி ரிலையன்ஸ் குழுமப் பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
மார்ச் 2018 நிலவரப்படி ரிலையன்ஸ் குழுமத்தின் கடன் ரூ. 1 லட்சம் கோடி. வட்டி 10 ஆயிரம் கோடி. சொத்துகளை விற்பதை தவிர வேறு வழி அவருக்கு இல்லை. கடன்தாரர்களைச் சமாளிக்க ரிலையன்ஸ் குழுமம் தனது அலைக்கற்றை, டவர், ஃபைபர் ஆகிய சொத்துகளை ஜியோவிடம் விற்க 2017 டிசம்பரில் முடிவு செய்தது.
அண்ணனும் தம்பிக்குப் பரிதாபப்பட்டு உதவ முன்வந்தார். ஆனால், சில ஒழுங்குமுறை விதிகள் அதற்கு சாதகமாக அமையாததால் அந்த விற்பனை நடக்கவில்லை. முகேஷ் அம்பானி மூலம் கிடைப்பதாக இருந்த ரூ.23 ஆயிரம் கோடியும் கிடைக்காமல் போனது.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க, எரிக்சன் நிறுவனம் தனக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகையைக் கேட்டு நீதிமன்றம் ஏறியது. அது தற்போது விஸ்வரூபம் எடுத்து அனில் அம்பானியை ஜெயிலுக்கு அனுப்பும் நிலைக்கு வந்துவிட்டது. எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகையை எப்படியேனும் செலுத்திவிடுவதாகக் கூறியுள்ளார் அனில். வருமான வரித் துறையிடமிருந்து கிடைத்த ரீஃபண்ட் தொகை ரூ. 260 கோடியை வங்கிக் கணக்கிலிருந்து எரிக்சனுக்கு அனுப்ப கடன் தாரர்களிடம் ஒப்புதல் கோரியுள்ளது.
ரூ. 120 கோடி ஏற்கெனவே நீதிமன்றத்திடம் உள்ளது. மீதமுள்ள ரூ. 200 கோடியை எப்படியாவது புரட்டி விடுவதாகக் கூறியுள்ளது அனில் தரப்பு. ரிலையன்ஸ் நிப்பான் ரிலையன்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை வாங்குவதற்கான வேலைகள் நடக்கின்றன. எல்லாவற்றையும் இழந்துதான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய நிலை. இதைவிட்டால் வேறு வழியும் இல்லை.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், கடனில் மூழ்கிவிட்டால் ஒருவரின் நிதி நிலையும், அதேசமயம் மான மரியாதையும் எந்த அளவுக்கு மோசமாகும் என்பதற்கு அனில் அம்பானி ஒருமிகச் சிறந்த உதாரணம். அதேபோல் பெற்றோர் சேர்த்து வைக்கும் சொத்து மட்டுமே ஒருவனை எப்போதும் வெற்றியாளனாக உச்சாணிக் கொம்பில் உட்கார வைத்துவிடாது என்பதற்கும் அவர் உதாரணம்.
முகேஷ் அம்பானிக்கு அனில் அம்பானியைவிட கடன் அதிகம். ஆனால், அவருடைய வெற்றியெல்லாம், தொடர்ந்து ஜெயிக்கும் குதிரையிலேயே பயணிப்பதுதான். அவருடைய தொழில்கள் பெரும்பாலும் கமாடிட்டியை அடிப்படையாகக் கொண்டவை, அதாவது வளங்கள்.
ஜியோ மட்டும்தான் சேவைத் துறையைச் சார்ந்தது. அரசின் முழு ஆதரவு அவருக்கு இருப்பதால் தொழில்துறையில் தொடர்ந்து தனி சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் ஒரு சொல் உண்டு. ‘இங்கு ஒரு நிறுவனம் திவாலாகலாம், ஆனால் ஒருபோதும் அது அந்நிறுவனத்தின் அதிபரைப் பாதிக்காது’. அனில் அம்பானி சொத்துகளையெல்லாம் விற்று அவர் கடன்களை அடைத்துவிடுவார். பிரச்சினையிலிருந்தும் வெளிவந்துவிடுவார். ஆனால், இனியும் அவருக்கு தொழில்துறையில் என்ன இருக்கிறது, இனி என்ன செய்யப் போகிறார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
- saravanan.j@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT