Last Updated : 11 Mar, 2019 11:31 AM

 

Published : 11 Mar 2019 11:31 AM
Last Updated : 11 Mar 2019 11:31 AM

சபாஷ் சாணக்கியா: வெற்றி பெற யாரைக் கட்டுப்படுத்தணும் ?

புதிதாக விடப்பட்டுள்ள தேஜஸ் ரயில் குறித்த செய்தியைப் பார்த்தீர்களா? மதுரையில் மதியம் 3.30-க்கு ஏறினால் இரவு 9.30-க்கு சென்னை எழும்பூர் வந்து விடலாம்! 6 மணி நேரத்தில் சுமார் 500 கிமீ!

வெளிநாடுகளில் மணிக்கு 300, 400 கிமீ என்றெல்லாம் கூட ரயில்கள் உண்டாம். விமானங்கள் மணிக்கு 800 கிமீ என்றால் ராக்கெட்டுகள் 58,000 கிமீ! பள்ளியில் படித்து இருப்பீர்கள். மனிதனுக்குத் தெரிந்த வரை ஒளியின் வேகம் தான் மிக அதிகம். அதாவது மணிக்கு108 கோடி கிமீ!

ஆனால், இதையெல்லாம் விஞ்சும் வேகம் பற்றி நமது இலக்கியங்கள் பேசுகின்றன. உங்களுக்கும் தெரிந்தது தான் அது. ஆமாம், மனோ வேகம்! மனம் நினைத்தால் கோடிக்கணக்கான தூரத்தை கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கடந்து விடுமே!

இந்த மனம் ஒரு குரங்கு என்பார்கள். ஒரு நிலையில் இருக்காது. நாம் ஒன்று நினைத்தால் அது ஒன்று நினைக்கும். நம்ம கட்டுப்பாட்டில் இருக்க மறுக்கும்! ஞாயிறு காலையில் ஒரு செலவு கணக்கைப் பார்த்து முடிக்கலாம் என நீங்கள் உட்காருவீர்கள். ஆனால், மனமோ ஓய்வாகப் படுத்துவிடலாமா, திரைப்படம் பார்க்கப் போகலாமா, நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாமா என்றெல்லாம் அலை பாயும்!

சரி, வேறு எந்த நினைப்பும் இல்லா மல் இந்தக் கட்டுரையைப் படித்து முடிப் போம் என நீங்கள் இப்பொழுது நினைத் துப் பாருங்களேன்... முயற்சி செய்யுங் களேன்... என்ன, சிரமமாக இருக்கிறதா?

அண்ணே, எண்ண ஓட்டங்கள் என்பவை பிரச்சினைகளின் தொடக்கம் தான். மனதைப் பேராசை எனும் பேய் பிடித்துக்கொண்டு விட்டால் என்னாவது?

‘என்னைப் பொறுத்தவரை, எதிரிகளை வெற்றி கொள்பவர்களை விட, தங்கள் ஆசைகளை அடக்கி வெற்றி கொள்பவர்களே தைரியசாலிகள். ஏனெ னில் தன்னைத் தானே வெல்வது தான் மிகவும் கடினமான வெற்றி' என்கிறார் கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில்!

ஐசிஐசிஐ வங்கி என்றால் சந்தா கோச் சார், சந்தா கோச்சார் என்றால் ஐசிஐசிஐ என்று அவர் கொடிகட்டிப் பறந்தது ஞாபகம் இருக்கிறதா? ஆனால் இன்று?

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மீதான புகார்களை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா, தனது பதவிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கோச்சார் நடந்து கொள்ளவில்லை என்று தமது அறிக்கையில் சொல்லிவிட்டார்!

வீடியோகான் தொழில் குழுமத்துடன் தீபக் கோச்சாருக்கு இருந்த உறவை வங்கியின் மூத்த நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் சந்தா கோச்சார் தெரிவிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாம்!

வீடியோகான் குழுமத்துக்கு ரூ.300 கோடி கடன் கொடுத்த அடுத்த நாளே தீபக் கோச்சாரின் ‘NuPower Renewables' நிறுவனத்துக்கு ரூ.64 கோடி கொடுக்கப்பட்டதாம்!

ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் குழுமத்துக்கு விதிகளை மீறியும் கடன்களை வழங்கியிருக்கிறதாம். இந்த வகையில், வங்கிக்கு. பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம்!

கடனைப் பெறுபவர் தங்களுடைய குடும்ப நண்பர் என்பதால், கடன் மனு பரிசீலனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறி சந்தா கோச்சார் தள்ளி இருக்கத் தவறி விட்டாராம்! தற்பொழுது, சந்தா, அவருடைய கணவர் தீபக் கோச் சார், அவருடைய நண்பரும் வீடியோ கான் தொழில் குழுமத் தலைவருமான வேணுகோபால் தூத் ஆகியோரை மத்தியப் புலனாய்வுத் துறையும் அமலாக் கத்துறையும் விசாரித்து வருகின்றனவாம்!

கடந்த அக்டோபரில், சந்தா கோச்சார் தானாகவே பதவி விலகவில்லை, பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறதாம்! 2009 ஏப்ரல் முதல் அவருக்களித்த போனஸ் தொகையைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். அவருக்குத் தராமல் நிறுத்திவைக்கப் பட்டுள்ள பணப் பலன்களை முழு தாக ரத்துசெய்ய அறிவுறுத்தப் பட்டிருக்கிறதாம். அத்துடன் வங்கியின் பங்குகளை வாங்கிக்கொள்ள அவருக் கிருந்த உரிமைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளனவாம்!

ஐயா, புகழின் உச்சாணிக் கொம்பிற்குச் சென்றவர் தலைகுப்புற விழக் காரணம் என்ன? அவருக்கென்ன சம்பளம் குறைவாகவா கொடுத்தார்கள்? பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பதவிக்குத் தரும் சம்பளத்தைப் போலப் பன்மடங்கு வாங்கியவர் இப்படிச் செய்ய என்ன காரணம்?

‘வெற்றி பெறுபவர்களையும் தோல்வி காண்பவர்களையும் பிரிப்பது என்ன? சுயக்கட்டுப்பாடுதான்' என அமெரிக்கத் தொழிலதிபர் தாமஸ் பெட்டர்ஃபி சொல்வது நாம் அனுபவத் தில் தினம்தினம் பார்ப்பது தானே?

சிங் சகோதரர்களின் தவறான நடவடிக்கைகளால் ஃபோர்டிஸ் ஹாஸ் பிடல்ஸ் கை நழுவியது, காக்னிசன்ட் இந்தியாவில் லஞ்சம் கொடுத்து அமெரிக்காவில் மாட்டிக் கொண்டது என இந்த மாதிரி சுயக்கட்டுப்பாடு இழந்த கதைகள் தொடர்கதைகளாகி விட்டன!

பேராசை, கோபம், அகந்தை, வெறி, பெண்ணாசை, அசட்டுத் தைரியம் போன்றவை சுயக் கட்டுப்பாட்டின் எதிரிகள் அல்லவா? அண்ணே, சுயக் கட்டுப்பாடு இருந்தால் இப்படி யெல்லாம் தவறு நடக்குமா? ஆசையை அடக்காவிட்டால், அது பேராசையாகத் தானே வளரும், தொடரும்?

‘வாழ்வின் வெற்றிக்கு அவசி யம் சுயக்கட்டுப்பாடு' என்கிறார் சாணக் கியர்! எவரும் என்றும் எங்கும் மறக் கக் கூடாத உண்மையல்லவா இது?

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x