Published : 25 Feb 2019 10:55 AM
Last Updated : 25 Feb 2019 10:55 AM
உலக வங்கி அறிக்கை 2019-ன் படி எளிதாக தொழில் தொடங்க வசதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் 77. அதேசமயம் டிஐ இண்டர்நேஷனல்.வெளியிட்ட அறிக்கையின் படி, சர்வதேச அளவில் ஊழல் மலிந்துள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவின் இடம் 78. போகிறப் போக்கைப் பார்த்தால் இவற்றில் எது முந்தப் போகிறது என்பதில்தான் போட்டி அதிகமாக இருக்கும் போலிருக்கிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவது குறித்த பட்டியலில் 100-வது இடத்திலிருந்து 77-வது இடத்துக்கு முன்னேறியது. இதைப் பெருமையாக நினைத்து கொண்டாடிய நாம், லஞ்ச, லாவண்யம் திளைத்திருக்கும் சோமாலியா, சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 180 நாடுகளில் இந்தியாவின் இடம் 78 என்பதை நினைத்து வெட்கி தலைகுனிய வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் ஊழல் செய்திகள், நமக்கு எந்த தலைகுனிவையும் ஏற்படுத்துவதில்லை. அந்த அளவுக்கு ஊழல் ஆழம் வரை ஊறிப்போய் பழகியும்விட்டது.
காக்னிசன்ட் கொடுத்த லஞ்சம்
சமீபத்தில் அமெரிக்காவின் காக்னிசன்ட் நிறுவனம், தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அதற்கு அபராதம் செலுத்தியது. இந்தச் செய்தி பலருக்கு தெரிந்துகூட இருக்காது. பத்தோடு பதினொன்றாக இப்போதெல்லாம் ஊழல் செய்திகளும் சேர்க்கப்பட்டுவிடுகின்றன.
இந்த ஊழல் சம்பவம் நிகழ்ந்தது 2014-ம் ஆண்டில். 2014-ம் ஆண்டு சென்னையில் காக்னிசன்ட் அலுவலகம் கட்டும் பணியை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டது. சென்னையில் சிறுசேரியில் அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி உள்ளிட்டவற்றை அளிப்பதற்கு 20 லட்சம் டாலர் லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.
இதை எல் அண்ட் டி நிறுவனமே அளித்துள்ளது. அதற்கு காக்னிசன்ட் நிறுவனத்தில் அப்போதைய தலைவராயிருந்த கோடன் கோபுர்ன் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர் ஸ்டீவன் ஷெவார்ட்ஸ் ஆகியோர் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த விவரங்கள் அனைத்துமே அமெரிக்காவின் பங்குச் சந்தை அமைப்பு (எஸ்இசி) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சிஎம்டிஏ) சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்டும் அனுமதிக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமக்கு ஏதும் தெரியாது என்று அப்போது சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக இருந்த ஏ. கார்த்திக் ஐஏஎஸ் தெரிவித்துவிட்டார். ஆனால் அப்போது மாநில வீட்டு வசதி மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சராயிருந்தவர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
அதேபோல லஞ்ச பரிவர்த்தனையில் எல் அண்ட் டி ஈடுபட்டபோது அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக எஸ்.என். சுப்ரமணியம் இருந்துள்ளார். 2013-ம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் கட்டிடம் கட்டுவதற்கு அம்மாநில அதிகாரிகளுக்கு 7.7 லட்சம் டாலர் அளித்துள்ளனர்.
சர்வதேச அளவில் வெட்ட வெளிச்சம்
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 45 அலுவலகங்களைக் கொண்டுள்ளது காக்னிசன்ட். இதில் 12 மட்டுமே அந்நிறுவனத்துக்குச் சொந்தமானவை. மற்றவை வாடகைக் கட்டிடங்களாகும். இதில் சென்னை மற்றும் புனேயில் அலுவலகம் கட்டுவதற்குத்தான் காக்னிசன்ட் லஞ்சம் அளித்ததுள்ளது.
ஊழல் தடுப்பு சட்ட விதியின் கீழ் அமெரிக்காவில் நீதித்துறையும், பங்குச் சந்தையும் காக்னிசன்ட் மீது 2016-ல் வழக்கு தொடர்ந்து ஏறக்குறைய 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இப்போதுதான் தீர்ப்பு வந்திருக்கிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் தங்கள் அலுவலகம் கட்டுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக காக்னிசன்ட் ஒப்புக் கொண்டுள்ளது.
லஞ்சம் அளித்த தவறுக்காக லஞ்சம் அளித்த தொகையை விட 10 மடங்கு, அதாவது 2.5 கோடி டாலர் அபராதம் செலுத்தவும் ஒப்புக் கொண்டு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது காக்னிசன்ட். இவையெல்லாம் இன்று சர்வதேச அளவுக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காக்னிசன்ட் நிறுவனமும், எல் அண்ட் டி நிறுவனமும் தங்களின் எதிர்வினைகளை வெளிப்படுத்திவிட்டன. காக்னிசன்ட் தலைமைச் செயல் அதிகாரி டி சௌசா இந்த சம்பவம் நிறுவனத்துக்கு வெளியே சம்பந்தப்பட்டது என்பதால் நிறுவனத்துக்கு மிகப் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இனிமேல் இதுபோன்ற ஒழுக்கக் கேடான செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஊழியர்களுக்கு இ-மெயில் கடிதம் மூலம் எச்சரித்துள்ளார்.
வாய் திறக்காத மாநில அரசுகள்
பணப் பரிவர்த்தனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனமோ, காக்னிசன்ட் நிறுவனம் எந்த அடிப்படையில் தங்கள் நிறுவனம் மூலமாக லஞ்சம் பரிவர்த்தனை ஆனது என்று குறிப்பிடுகிறது, இதை எங்களால் ஏற்க முடியவில்லை என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. மேலும், அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிசன்ட் நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெயரையோ அல்லது எல் அண்ட் டி பணியாளர் குறித்தோ தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், இந்த விஷயம் வெளியானதிலிருந்து, இதுவரையிலும்கூட, இந்த விஷயத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பதைப் போல தமிழகம் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் இருக்கின்றன. லஞ்சம் பெற்ற மாநில ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ கூட இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் (டிவிஏசி) தாங்கள் புகார் மனு தாக்கல் செய்யப்போவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரிக்குமாறு எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யம்
சில வழக்குகளை தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க முடியும். அதைப்போல விசாரணை அமைப்புகளும் வழக்கின் தீவிரம் கருதி விசாரிக்க விதிமுறைகள் அனுமதிக்கின்றன. லஞ்சம் அளித்ததை ஒப்புக் கொண்டு காக்னிசன்ட் நிர்வாகம் அபராதம் செலுத்தியுள்ளது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம்தான் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற உண்மை வெளிவரும். காக்னிசன்ட் வழக்கில் போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்த வழக்கை விசாரிக்க தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதுபோன்ற ஊழல்கள் வெளிவரும்போதெல்லாம், ஊழலும், லஞ்ச லாவண்யமும் தலைவிரித்தாடும் இந்தியா, எப்படி தொழில் செய்ய ஏற்ற நாடாக முன்னேறப் போகிறது என்ற கேள்விதான் இடிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன், கியா மோட்டார்ஸ் தமிழகத்தில் தொழில் தொடங்க திட்டமிட்டு, பிறகு அதிகபட்ச லஞ்சப் பணம் கேட்பதாகக் கூறி தொழில் தொடங்காமல் வெளியேறிவிட்டது. இந்த விஷயம் பகிரங்கமாக வெளியான நிலையிலும் அதுகுறித்து விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. கியா மோட்டார்ஸ் வெளியில் தெரிந்த ஒரு உதாரணம் மட்டுமே.
சமீப மாதங்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடுகள் வெகு விமரிசையாக நடந்து முடிந்திருக்கின்றன. அந்த மாநாடுகளில் தொழில் ஒப்பந்தங்கள் பல லட்சம் கோடிகளுக்குக் கையெழுத்தாகின. ஆனால், திட்டமிட்டபடி முதலீடுகள் வருவதும், வராததும் லஞ்ச ஒப்பந்தங்கள் எத்தனை கோடிகளுக்கு நடக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கும் என்பதுதான் இதிலிருக்கும் கசப்பான உண்மை.
- ramesh.m@thehindutami.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT