Published : 28 Jan 2019 12:20 PM
Last Updated : 28 Jan 2019 12:20 PM
மத்திய பொதுத் தேர்தல் நடைபெற சில மாதங்கள் இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் 2019–20-ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல் செய்யப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் திரண்டு ஓரணியாக செயல்பட பெரும் முயற்சிகள் எடுத்துவரும் நிலையில், தற்போது தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பாஜகவுக்கும் இது முக்கியமான பட்ஜெட். எனவே, பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
இது இடைக்கால பட்ஜெட்டா அல்லது செலவு அனுமதி கோரிக்கை (Vote on Account) மட்டுமா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகிறது. அத்தோடு இதுவரை 5 பட்ஜெட்களை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இடைக்கால ஏற்பாடாக நிதி அமைச்சக பொறுப்பு பியுஷ் கோயலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் அல்லது செலவு அனுமதி கோரிக்கையை ஜேட்லி தாக்கல் செய்வாரா அல்லது பியுஷ் கோயல் தாக்கல் செய்வாரா என்ற குழப்பமும் நீடிக்கிறது.
தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு செய்த மாற்றங்களில் முக்கியமானவை, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 1-ம் தேதியாக மாற்றியது, இரயில்வே பட்ஜெட்டை மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தது, திட்ட ஆணையத்தை (Planning Commission) கலைத்துவிட்டு நிதி ஆயோக் ஏற்படுத்தியது மற்றும் நலத்திட்டங்கள் நேரிடையாக மக்களுக்கு சென்றடைய முயற்சிகள் எடுத்தது போன்றவற்றைச் சொல்லலாம்.
கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் ஜனவரி – டிசம்பர் நிதியாண்டு மாற்றம் கூடிய விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம். இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
இடைக்கால பட்ஜெட் என்பது தேர்தல் ஆண்டில் முழு ஆண்டிற்காக அல்லாமல், இடைப்பட்ட சில மாதங்களுக்கான வரவு செலவு குறித்த தாக்கல் ஆகும். புதிய அரசு பதவியேற்று புதிய பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை இந்த பட்ஜெட் அமலில் இருக்கும். இடைக்கால பட்ஜெட்டை ஒரு தற்காலிக பட்ஜெட் என்றும் சொல்லலாம்.
தற்போது ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகு செலவு செய்யவும் அதற்கான வரியை வசூலிக்கவும் அதிகாரம் பெறப்படுகிறது. வரும் பட்ஜெட்டில் வரவு செலவு திட்டம் (Outlay), அரசின் சமீபகால செயல்பாடு, எதிர்கால திட்டங்கள், தொலை நோக்குக் கொள்கைகள் ஆகியவை இருக்கும்.
பொருளாதார ஆய்வு (Economic Survey) முழு பட்ஜெட்டோடுதான் சேர்க்கப்படும் என்பதால், இடைக்கால பட்ஜெட்டில் பொருளாதார ஆய்வு விவரங்கள் வராது.
இத்தகைய இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி குறித்து பெரிய மாற்றங்களை முந்தைய அரசுகள் கொண்டுவந்ததில்லை. ஏனென்றால் அதே கட்சி ஆட்சிக்கு வருமா அல்லது வேறு கூட்டணி ஆட்சிக்கு வருமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருப்பதால் பெரும் மாற்றங்களை செய்வதில்லை. தவிர இவ்வாறு இடைக்கால பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படும் வரிவிதிப்பில் மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அடுத்த அரசுக்கு அதை மீண்டும் மாற்றிமைக்க அதிகாரம் உள்ளது.
எனவே, வருமானவரி குறித்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் Code of Conduct என்று சொல்லக்கூடிய தேர்தல் நன்னடத்தை விதிகளை அறிமுகப்படுத்தியபின், மந்திரிகள் தங்களது அதிகாரத்தை பிரயோகப்படுத்த முடியாது. சொல்லப்போனால் அவர்கள் அரசாங்க கார்களை கூட உபயோகிக்கக் கூடாது. பிரதம மந்திரி மட்டும்தான் இடைக்கால பிரதம மந்திரியாக (Interim Prime Minister) செயல்பட அதிகாரம் பெறுவார்.
செலவு அனுமதி கோருதல்
(Vote on account) - இடைக்கால பட்ஜெட் என்ன வேறுபாடு
Vote on account என்பது இரண்டு மாதங்களுக்கு மட்டும் தேவையான செலவுகளை அரசாங்கம் செய்ய பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற அனுமதிக்கும் ஒன்று. இதில் வருமான வரி சம்பந்தப்பட்ட எந்த மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாது. ஏனென்றால் வருமான வரி மாற்றங்களை ஏற்படுத்துவது நிதி மசோதா (Finance Bill) மூலம்தான். ஆனால், இடைக்கால பட்ஜெட் மூலம் வரிவிதிப்பில் மாற்றங்கள் கொண்டு வர முடியும்.
அரசின் முயற்சிகள்
தற்போதைய அரசாங்கம் முனைந்திருக்கும் முயற்சிகளில் கருப்புப்பணம் ஒழிப்பிற்கான நடவடிக்கை, ஊரக விவசாய கட்டமைப்பிற்கான செலவுகளுக்கு அதிக ஒதுக்கீடு செய்திருப்பது, அந்நிய நேரடி முதலீட்டு (Foreign Investment Promotion Board) வாரியத்தை மாற்றியமைத்தது, எளிதாக வியாபாரம் செய்வதற்கான முயற்சிகள் ஆகியவை அடங்கும்.
தற்போதைய அரசாங்கமும் வேலைவாய்ப்புகளை அதிகம் ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறையாகத்தான் உள்ளது. உற்பத்தி துறையின் முதுகெலும்பான சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு (MSME) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வருமான வரி
வருமான வரியை முற்றிலும் விலக்க வேண்டும் என்று ஆளும் கட்சியின் முக்கியத் தலைவர் சுப்ரமணியசுவாமி தொடர்ந்து கூறிவருகிறார். இது நடைமுறையில் சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. 95% வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் வருமான வரி இருந்து வருகிறது. பெட்ரோல் வள நாடுகளிலும், வரி சொர்க்கம் (Tax Haven) என்று கூறப்படுகிற குறைந்த மக்கள் தொகை உள்ள சில நாடுகளிலும்தான் வருமான வரி இல்லாத நிலை இருந்து வருகிறது. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் வருமான வரியை அறவே விலக்குவது என்பது கனவுக்கோட்டை.
ஆனால், வரி வரம்பை உயர்த்துவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. வருமான வரி வரம்பு நான்கிலிருந்து ஐந்து லட்சம் வரை உயர்த்தப்படும் பட்சத்தில் நடுத்தர மக்களுக்கு பலன் அளிக்கும். உலகின் முன்னணி நாடுகளிலும் வரிக்குறைப்பு ஏற்பட்டு வருகிறது. உதாரணமாக அமெரிக்காவில் கம்பெனி வரி 35%-இல் இருந்து 21% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் சேமிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் சேமிப்பு வரம்பு அதிகரிக்கப்படலாம்.
ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் இதுவரை 32 முறை கூடி உடனுக்குடன் முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதால் ஜிஎஸ்டி விதியில் அதிக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. நான்கு அடுக்கு வரிவிதிப்பு முறையை மாற்றி இரண்டு அல்லது மூன்று அடுக்காக மாற்றம் செய்வது அவசியம். இருப்பினும் இந்த பட்ஜெட்டில் இதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
என்ன மாற்றங்கள்
கடந்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அறிமுகம் ஆகிய முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சி குறிப்பாக சிறுதொழில்களின் வளர்ச்சி எதிர்பார்த்த அல்லது சீரிய வளர்ச்சி இல்லாமல் உள்ளது.
இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) உற்பத்தித் துறை 17% மட்டுமே பங்களித்து வருகிறது. விவசாயத் துறையில் உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதில் அரசாங்கமும் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறது.
நீண்டகால கட்டமைப்பு துறையில் தனியார் நிறுவனங்கள் பங்குபெறுதல், விவசாயிகளுக்கான சந்தையை (Market Oriented) உருவாக்குதல், மருத்துவம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல், திறன் மேம்படுத்துதல் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், ஏற்றுமதிக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது, சர்வதேச சந்தையில் அடிக்கடி விலைமாறும் பெட்ரோலிய பொருட்களின் சுமையை பொதுமக்களின் மேலே உடனடியாக சுமத்தாமல் இருக்கும் விதமாக மாற்று ஏற்பாடுகள் செய்தல் போன்றவை காத்திருக்கும் சவால்கள்.
தொழில்நுட்ப கண்டுப்பிடிப்புகள் (Explosion of Technology & Innovation) மற்றும் இணையதள வசதி (Internet) போன்றவை கிராமப்புறங்களுக்கும் சென்றடையும் விதம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம். தொழில்துறையில் வேலை தேடுபவராக இருப்பதைவிட தொழில்முனைவோராக மாறுவதற்கான சாத்தியங்களை ஏற்படுத்தும் ஸ்டார்ட்-அப் கம்பெனிகளுக்கு அதிக அளவு ஊக்கங்கள் கொடுக்கப்படும்.
இதிலும் குறிப்பாக இளம் வயதிலுள்ளவர்களை ஊக்குவித்து தொழில்முனைவோராக்கி அவர்களது புதிய தொழில்நுட்ப கண்டுபிடித்தலின் மூலம் (Explosion of Technology and Innovation) அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கைகள் இருக்கும்.
ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட மோடி மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பலன் முழு அளவில் சென்றடைய முயற்சி செய்வதுடன், ஊரக மருத்துவ பணிகளில் விரிவாக்கத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
புதிய சலுகைகள், நலத்திட்டங்கள்
பொதுவாக எந்த அரசாங்கமாக இருந்தாலும் தேர்தலுக்கு முந்தைய ஆண்டில் பொதுமக்களுக்கான பல புதிய நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவிப்பது சாதாரணமான ஒன்று. தெலுங்கானாவில் சமீபத்தில் ஐந்து ஏக்கர்களுக்கு குறைவாக வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு அரசாங்கம் மானியம் கொடுத்தது. ஆனால், அதற்குமுன் இரண்டு ஆண்டுகளாகவே விவசாயிகளின் விவரங்கள், நில விவரங்கள் ஆகியவை டிஜிட்டல் முறையில் சரி செய்யப்பட்டுவிட்டது.
இதுபோல அனைத்து நலத்திட்டங்களும் பயனாளிகளை உரிய முறையில் சென்றடைய உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அரசின் நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளைச் சென்று சேர்வதில் எந்தவித தவறும் நடக்க வாய்ப்பில்லை. இடைக்கால பட்ஜெட்டில் இந்த அரசு என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்பது பிப்ரவரி 1-ல் தெரிந்துவிடும். தேர்தலுக்கான பட்ஜெட்டா, மக்களுக்கான பட்ஜெட்டா என்பதும் தெரியவரும்.
- karthikeyan.auditor@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT