Published : 24 Dec 2018 11:36 AM
Last Updated : 24 Dec 2018 11:36 AM
ரியல் எஸ்டேட் துறைக்கு 2018ம் ஆண்டு சற்று சுவாரஸ்யமாகவே அமைந்தது எனலாம். பல டெவலப்பர்கள், கடன் வழங்குநர்களுக்கு இந்த ஆண்டு சற்று வருத்தத்துக்குரியதாக அமைந்தது. ஆனால், வீடு வாங்குபவர்களுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத வருடமாக அமைந்தது.
ஆனாலும், வட்டி விகிதம் போன்ற சில விஷயங்களில் நம்பிக்கையை அதிகரிக்கும் வகையிலான உடனடி மாற்றங்கள், அதிசயக்கத்தக்க வகையில் நடக்கவில்லை. ஆனாலும், 2018 நுகர்வோருக்கான சந்தையாக மாறியது என்பதில் சந்தேகமே இல்லை.
கடந்த சில ஆண்டுகளாக வீடு வாங்குபவர்கள் பலரும் பெரிதும் வெறுத்துப் போயிருந்த சமயத்தில் ரெரா சட்ட நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் மூலம் ஓரளவுக்கு ரியல் எஸ்டேட் சந்தையின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. நுகர்வோர்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்ததோடு மட்டுமல்லாமல், ரெரா சட்டம் அவர்களுக்கான நீதியையும் தந்திருக்கிறது என்று சொல்லலாம்.
ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள நவம்பர் 2018 புள்ளிவிவரங்கள் நிலவரப்படி, 4900 புகார்கள் மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன. அதில் 3060 புகார்களுக்கு சரியான நீதி கிடைக்க இந்தச் சட்டம் வழி செய்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் (நொய்டா உட்பட) 8 ஆயிரம் புகார்கள் பதிவாகின.
ரெரா சட்டம் நடைமுறையில் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறையவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உதாரணத்துக்கு, உத்தரப்பிரதேசத்தில் பதிவான புகார்களில் நான்கில் ஒரு பங்கு புகார்கள்தான் கவனிக்கப்பட்டுள்ளன. கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இன்னும் புகார்களைத் தெரிவிக்க இணையதளங்களே அறிமுகப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் சுமாரான எண்ணிக்கையில்தான் திட்டங்களும், ஏஜென்டுகளும் பதிவு செய்துள்ளன. ஆனால், கிடைக்கக்கூடிய தரவுகள் ஏற்படுத்தும் தாக்கம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தீவிரமாக உள்ள நுகர்வோர்கள் மாநில ரெரா இணையதளத்தில் தங்களுக்குத் தேவையான தகவல்களைத் தேடி தெரிந்துகொள்கின்றனர். உதாரணமாக, ரெரா இணையதளத்தில் கட்டுமான திட்டங்களின் நிறைவு தேதி, டெவலப்பர் விவரங்கள் மற்றும் அரசு அமைப்புகள் வழங்கிய உரிமங்கள், அனுமதிகள் போன்ற தகவல்களையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும்.
ரெரா சட்டத்துக்கு முன்பு இந்த தகவல்களெல்லாம் வேண்டிய நேரத்தில் கிடைக்காது. இந்த விவரங்களைப் பெறுவதற்கு வீடு வாங்வோர் படாத பாடு பட வேண்டியிருக்கும். ஆனால், இப்போது வீடு வாங்குவோர் உடனடியாக ஆன்லைனில் தேவையான விவரங்களை பெற்றுவிட முடியும்.
மேலும், ரெரா சட்டத்தின் கீழ் பதிவான புகார்களின் விவரங்கள்- புகார்களின் மீதான விவாதங்கள், தீர்ப்புகள் ஆகியவையும் இணையதளத்தில் பார்க்கமுடியும். இவை வீடு வாங்குவோருக்கு ஒரு தெளிவையும் புரிதலையும் தரும். நிராகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள், அதில் உள்ள சிக்கல்கள், ஆகியவற்றை தெரிந்துகொள்ளும்போது, அது போன்ற திட்டங்களையும் சம்பந்தப்பட்ட டெவலப்பர்களையும் தவிர்க்க நமக்கு உதவியாக இருக்கின்றன.
ரெரா சட்டம் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது. டெவலப்பர்கள் திவால் ஆகும்போது அவர்கள் குறித்த விவரங்களை வீடு வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது. வீடு வாங்குவோர் பாதிப்புக்குள்ளாவது தடுக்கப்படுகிறது.
இந்த சட்ட நடைமுறைகள் இப்போது தான் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. இது ஆரம்பக்கட்டம்தான். இந்தச் சட்டம் எல்லா பிரச்சினைகளையும் சரிசெய்துவிடும் என்பது மாயையாக இருந்தாலும், இந்தச் சட்டம், டெவலப்பர் திவாலாகும்போது திவால் சட்டத்தின் மூலமாக நுகர்வோருக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
திவால் சட்டத்தின் மூலம், திவாலான பில்டரை கடன் கொடுத்த வங்கிகளைப் போலவே, வழக்கு மூலம் நீதிமன்றத்துக்கு இழுத்து நீதி பெற நுகர்வோருக்கும் உரிமை உண்டு. 2018ல் வீட்டு விலைகள் குறையும் என்று நுகர்வோர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
ஆனால், முக்கிய நகரங்களில் வீடுகளின் விலைகள் எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை. லாயாசஸ் போராஸ் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் புள்ளிவிவரங்கள் படி, அகமதாபாத், டெல்லி, மும்பை, புணே, பெங்களுரூ, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வீடுகளின் சராசரி விலை மாறாமல் ஒரே நிலையில்தான் உள்ளது.
வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால்தான் விலை எதிர்பார்த்த அளவிற்கு குறையவில்லை. செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் விற்பனை ஆகாமல் உள்ள வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேசமயத்தில் வீடுகளின் விற்பனையும் 9 சதவீதம் உயர்ந்துள்ளது.
வீடுகளின் விலை குறைந்திருந்தால், வீடுகள் அதிகளவில் விற்பனையாகிருக்கவும் வாய்ப்புள்ளது. விலையில் தொடர்ந்து காணப்படும் இந்த நிலைத்தன்மைதான் சொத்துகளை நீண்டகாலத்திற்கு வைத்திருக்கலாம் என்ற போக்கை உருவாக்கி விலையில் மாற்றம் உண்டாகாமல் பார்த்துக்கொள்கிறது.
சென்னையில் செப்டம்பர் 2017 நிலவரப்படி 63940 வீடுகள் விற்பனைக்கு இருந்தன. ஆனால், 2018 செப்டம்பரில் 73,685 ஆக உயர்ந்துள்ளது. 2017ல் முடிக்கப்பட்ட வீடுகளை விற்று தீர்ப்பதற்கே 71 மாதங்கள் வரை ஆகலாம் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், 2018ல் முடிக்கப்பட்ட வீடுகளை விற்க 68 மாதங்கள் ஆகலாம் என கணிக்கப்பட்டது. காரணம், வீடு வாங்குவோர் அதிகமானதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT