Published : 31 Dec 2018 11:40 AM
Last Updated : 31 Dec 2018 11:40 AM
புதுவருடம் பிறக்கும்போது எடுக்கும் உறுதிமொழிகள் பெரும்பாலும் மீறப்பட்டுவிடும். ஆனால், இந்த எளிய 5 உறுதிமொழிகளை மறக்காமல் பின்பற்றிவந்தால் உங்களுடைய நிதி எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
மறு ஆய்வு செய்யுங்கள்
2018- ல் உங்களுடைய போர்ட்ஃபோலியோ இறக்கத்தில் இருந்தால், நீண்டகால முதலீடாகக் கருதி, அதை மீண்டும் மீண்டும் பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், அவற்றில் பெரிய தவறுகளைச் செய்திருந்தால், அதை சரிசெய்ய முயற்சி செய்யுங்கள். ஏனெனில் காலம் எப்போதுமே காயத்தை ஆற்றும் மருந்தாக இருப்பதில்லை.
டிசம்பர் 2008-ல் உட்கட்டமைப்பு, கமாடிட்டி அல்லது பவர் ஆகியத் துறை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தவர்கள், அவற்றை அப்படியே வைத்திருந்தால், இந்த 10 வருடங்களில் பெரிதாக ஒன்றுமே கிடைத்திருக்காது. ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் பவர் மற்றும் ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் - ஆகியவை 65-90 சதவீத நஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. பல உட்கட்டமைப்பு சார்ந்த ஃபண்டுகள் 10 வருடங்களில் ஓரிலக்க வருமானத்தையே தந்திருக்கிறது.
பெருமளவிலான முதலீட்டை பங்குகளில் போடுவது, ஸ்மால்கேப் பங்குகளில் அதிக முதலீடு, கடந்த 3 அல்லது 5 வருடங்களில் உச்சத்தில் உள்ள துறைகளின் ஃபண்டுகளை வாங்குவது இவையெல்லாம் முதலீட்டாளர்கள் செய்த பெரிய தவறுகள். இந்தப் புத்தாண்டில் முதலில் நம்முடைய முதலீட்டுத் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றை திருத்திக் கொள்ளவேண்டும். ஈக்விட்டி முதலீடுகளை சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும், ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடுகளைக் குறைக்க வேண்டும், துறை சார்ந்த ஃபண்டுகளில் உள்ள முதலீட்டை நிஃப்டி நெக்ஸ்ட் 50 ஃபண்டுக்கு மாற்றவும்.
பணத்தைப் பூட்டி வைக்காதீர்கள்
நம்மில் பெரும்பாலானோர், நம்முடைய சம்பாத்யத்தை அதிகப்படுத்திக்கொள்ள அதிக முயற்சி காட்டுகிறோமே தவிர, முதலீடு செய்வதில் காட்டுவதில்லை. இப்போதுள்ள அழுத்தமான பணிச்சூழல், நம்மிடமுள்ள பணத்தை வங்கிக் கணக்கில் பத்திரமாக வைத்திருக்கவும், முதலீடுகளைத் தள்ளிப்போடவுமே சொல்லும். உங்களுடைய பணத்தை சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதால், அது எந்த இழப்புக்கும் உள்ளாகாமல் 4 சதவீத வட்டி தரும்.
ஆனால், எஸ்ஐபி மூலம் லிக்விட் அல்லது குறுகிய கால கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதிகபட்ச வருமானம் கிடைப்பதோடு, வரிச்சலுகையும் கிடைக்கும். இன்ஷூரன்ஸ் பிரீமியம் உட்பட எதிலெல்லாம் வரி சேமிப்புக்கான வாய்ப்பு இருக்கிறதோ, அவற்றின் மூலம் வருமானத்தை அதிகரித்து, அதை மீண்டும் முதலீடு செய்யலாம்.
தொடர்ச்சியான முதலீடு
கடந்த ஐந்து வருடங்களில் எஸ்ஐபி முதலீடுகள் 15 சதவீதம் வரை வருமானம் தந்திருக்கிறது. ஆனால், அதன் மூலம் உங்களுடைய முதலீடு எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று பாருங்கள். குறைவாக இருக்கிறது என்றால், எஸ்ஐபி முதலீடு மிகக் குறைவு என்று அர்த்தம். பெரும்பாலும் எஸ்ஐபி முதலீடுகளை ரூ. 1000 முதல் ரூ. 5000 என்ற அளவில்தான் தொடங்குகிறோம்.
ஆனால், அதைத் தொடர்ந்து உயர்த்த வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம். நம்முடைய வருமானம் அதிகரிக்கும் போது, எஸ்ஐபி முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும். நாம் தொடர்ந்து அதிகரிக்கும் சிறு தொகை நம்முடைய முதலீட்டின் மீதான வருமான வளர்ச்சியில் பெரிய வித்தியாசங்களைத் தரும்.
சரியான இன்ஷூரன்ஸ் திட்டம்
நீங்கள் ஏற்கெனவே ஏஜெண்டின் தொல்லை தாங்காமல் இன்ஷூரன்ஸ் திட்டத்தை வாங்கியிருப்பீர்கள் - அது ரூ.25 லட்சத்துக்கு உத்தரவாதம் தரும் எண்டோவ்மென்ட் திட்டமாகக்கூட இருக்கலாம். ஆனால், நீங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் திட்டம், மாறும் உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப மாறக்கூடியதா? ஆயுள் காப்பீடு திட்டம் என்பது, நீங்கள் இறக்கும்பட்சத்தில், அதுவரை உங்களுடைய வருமானத்தை மட்டுமே நம்பியிருந்தவர்களின் எதிர்கால நிதித் தேவைக்கானது மட்டுமல்ல.
உங்களுடைய கடன்கள், நிதி சார்ந்த கடமைகள் என நீங்கள் விட்டுச் செல்லும் அனைத்தையும் பார்த்துக்கொள்ளகூடியதாகவும் இன்ஷூரன்ஸ் திட்டம் இருக்க வேண்டும். எனவே, உங்களுடைய ஆயுள் காப்பீடு என்பது, உங்களுடைய வருமானம் மற்றும் வாழ்க்கை முறைக்கேற்ப அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு ரூ. 1 கோடிக்கான டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம் சரியானதாக இருக்கும்.
உங்கள் நாமினி யார் நம்முடைய நிதிசார் இலக்குகளை வெற்றிகரமாக அடைய, பல்வேறு முதலீடுகளைத் திட்டமிடுகிறோம். ஆனால், ஒருவேளை நம்மால் நம் முதலீடுகளைக் கண்காணிக்கவோ அல்லது முதலீட்டை எடுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டால் என்ன ஆகும்? முதலில் உங்கள் முதலீடுகளுக்கு நாமினியை பதிவு செய்யுங்கள்.
நீங்கள் நாமினியாகப் பதிவு செய்பவர், உங்கள் மரணத்துக்குப் பிறகு, உங்களுடைய முதலீடுகளையும், சொத்துகளையும் கவனித்துக்கொள்வார். இல்லையெனில் நம்முடைய மரணத்துக்குப் பிறகு நம் முதலீடுகள் அனைத்தும் வீணாக யாரோ ஒருவருக்குச் சென்றுவிடும். நாமினியைப் பதிவு செய்வதோடு நிறுத்திவிடாமல் முதலீடுகள் குறித்தும், இமெயில், வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றையும் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.
- aarati.k@thehindu.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT