Last Updated : 26 Nov, 2018 11:42 AM

 

Published : 26 Nov 2018 11:42 AM
Last Updated : 26 Nov 2018 11:42 AM

சபாஷ் சாணக்கியா: சேவலிடமும் கற்றுக் கொள்ளலாம்..!

நீங்கள் காலையில் சீக்கிரம் எழுபவரா, அல்லது ஏழு, எட்டு மணி வரை தூங்குவது தான் உலகமகா சுகம் என எண்ணுபவரா? அதிகாலையில் கோழி கூவும் சத்தத்தை சிறு வயதிலாவது கேட்டு இருக்கிறீர்களா? சிங்கத்தின் கம்பீர நடையைத் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள். சேவலின் மிடுக்கான நடையை நேரில் பார்த்து ரசித்தது உண்டா ?

மனிதர்கள்  சேவலிடமிருந்து நான்கு குணங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் சாணக்கியர். ‘நேரத்தில் எழுதல், உழைத்து உணவைத் தேடிக்கொள்ளுதல், தைரியமாக முடிவெடுத்தல், தனக்குரிய பங்கிற்காகப் போராடுதல் ஆகியவற்றை நாம் சேவலிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ' என்கிறார் அவர்!

பின்னே என்னங்க? குப்பையைக் கிளரி புழு பூச்சிகளைத் தேடி இரையாய் உண்ணும் சேவல் , அதற்கு தாமதித்துச் சென்றால் ஒன்றும் கிடைக்காதே! நம்ம கதையும் அப்படித் தானே? காலையில் அதிக நேரம் தூங்கினால், அதற்குப் பின் அரக்கப் பறக்க காலைக் கடன்களை முடிக்கணும், அவசரம் அவசரமாக அலுவலகத்திற்கு ஓடணும்.

அங்கு  என்னென்ன  நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கும், அன்று என்னவெல்லாம் செய்ய வேண்டுமென திட்டமிடுவதற்கும் நேரம் இருக்காது. அந்தக் குழப்பம்  மேன்மேலும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கும். ‘காலையில் ஒரு மணி நேரத்தைத் தவற விட்டீர்கள் என்றால், அதைத் தான் அந்த நாள் முழுவதும்  தேடிக் கொண்டிருப்பீர்கள் ' என்கிறார் ரிச்சர்ட் வேட்லை எனும் ஆங்கிலேயப் பொருளாதார நிபுணர்!

உண்மை தானே? உலகெங்கும் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் காலையில் சீக்கிரம் எழுந்து, தங்கள் அலுவலகத்திற்கு முன்னதாகச் செல்பவர்களாம்.பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவராக இருந்த நம்ம ஊர் இந்திரா நூயி காலை 4 மணிக்கு எழுந்து விடுவாராம், 7 மணிக்கு அலுவலகத்திற்கே வந்து விடுவாராம். ஆப்பிள் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டிம் குக் அதிகாலையில் 4 மணிக்கு முன்பே எழுந்து விடுவாராம். எழுந்த பின் முதல் வேலையாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் தன் நிறுவனத்தின் சேவைகள் பற்றிய  மின்னஞ்சல்களைத் தான் பார்ப்பாராம்.

‘காலை 7 மணி வரை தூங்காமல், 5 மணிக்கே எழுந்து விடுவதென்பது, இரவு தூங்கச் செல்லும் நேரத்தில் மாற்றமில்லாத பட்சத்தில், 40 ஆண்டுகளில்,உங்கள் வாழ்க்கையில் 10 ஆண்டுகளைக் அதிகரிப்பதற்குச் சமம் ஆகும்' என்கிறார் பிலிப் டாட்ரிட்ஜ் எனும் ஆங்கிலேயக் கல்வியாளர் . இது நாம் சிந்திக்க வேண்டியது, செயல்படுத்திப் பயன் பெற வேண்டியது!

அப்புறம் இந்தப் பறவைகள் , விலங்கினங்கள் பலவும் தம் உணவைத் தாமே தான் தினம் தினம்  தேடிக் கொள்ளணும். இருந்த இடத்திலேயே இருந்தால் அன்று பட்டினி தான்.சேவல் எவ்வளவு தைரியமானது, ஆக்ரோஷமானது என்பதை அது சண்டையிடும் பொழுது பார்த்து இருப்பீர்கள். நான்காவதாக சாணக்கியர் சொல்வது தன் உரிமைக்காகப் போராடும் சேவலின்  குணம். நம்மில் பலருக்கு இல்லாத, ஆனால் இருக்க வேண்டிய குணமல்லவா இது?

ஒரு நாள் எனது நண்பர் ஒருவருடன் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் சென்று இருந்தேன். சூப்புடன் காளிபிளவர் மஞ்சூரியனும், பன்னீர் டிக்காவும் ஆர்டர் செய்தோம். பன்னீர் எனும் அந்த பாலாடைக்கட்டி பழசு போலும். இருவரும் இரண்டு துண்டுகள் எடுத்து நான்கு பகுதிகளாக்கி மெதுவாகச் சாப்பிட்டுப் பார்த்தோம். மிருதுவாக இல்லாமல், கட்டியாக ஒரு மாதிரி வாடையுடன் இருந்தது.

சர்வரிடம் இதைச் சொன்னோம். அது புதிது தான் என்றார். மேலாளரிடம் முறையிட்டோம். அவர் நீங்கள் முதலிலேயே சொல்லி இருக்கணும். இரண்டு துண்டு சாப்பிட்டு விட்டீர்களே என்றார். வாக்குவாதம் தொடர்ந்தது. நண்பர் சண்டை வேண்டாமே என்றார். எனக்கோ ஏமாற்றப்பட்டது போன்ற எண்ணம். வேறு நல்ல பன்னீர் இருந்தால் கொடுங்கள், அல்லது அதற்கான தொகையைக் கழித்து விடுங்கள் எனச் சொல்லிப் பார்த்தேன். நண்பர் 100 ரூபாய் தானே ,விட்டு விடுவோம் என்றார்.

ஐயா,  நண்பர் எப்பவுமே அப்படித் தான். பல சமயங்களில் தன் பங்கை விட்டுக் கொடுத்து விடுவார். இவரை மாதிரி ஆட்களுக்குத் தாங்கள் ஏதோ தியாகம் செய்வதுபோல நினைப்பு.விட்டுக் கொடுக்கலாம். ஆனால் பயன் பெறுபவர் தகுதியானவராகவும், காரணம் நியாயமானதாகவும் இருக்க வேண்டுமல்லவா? மற்றவர் நலன் பேணும் நீங்கள் உங்கள் நலனையும் பார்த்துக் கொள்ள வேண்டாமா?

மேலும், நாம் ஏமாற்றப்பட்டோம் எனும் எண்ணம் வரக்  கூடாதல்லவா? ‘இரவு  படுக்கச்  செல்லும் பொழுது பைத்தியம் மாதிரி மனதைக் குழப்பிக் கொள்ளக் கூடாது, பகலிலேயே பலமாகப் போராடி விடணும் ' என்கிறார் ஃபிலிஸ் டில்லர் எனும் அமெரிக்கச் சிரிப்பு  நடிகை!

என்ன சாணக்கியர் சொல்வது போல சேவலிடம் நாம் இந்த நான்கு நல்ல  குணங்களையும் கற்றுக் கொள்ளணும் இல்லையா?

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x