Last Updated : 05 Nov, 2018 03:36 PM

 

Published : 05 Nov 2018 03:36 PM
Last Updated : 05 Nov 2018 03:36 PM

கழுகின் பிடியில் சிக்குமா டிராகன்?

உலகம் பொருளாதாரத்தால் கட்டுண்டு இருக்கிறது. இதில் எந்தவொரு நாடும் தனித்து இயங்க முடியாது. அப்படி தனித்து நிற்க ஆரம்பித்தால் அது அழிவை தானே தேடிக்கொள்கிறது என்றுதான் அர்த்தம். அப்படியொரு நிலையை நோக்கி அமெரிக்கா போகிறதோ என்ற சந்தேகம் அமெரிக்கர்களுக்கே எழத்தொடங்கியுள்ளது.

அமெரிக்கா சீனா மீதும், சீனா அமெரிக்கா மீதும் மாறி மாறி நடத்திக்கொண்டிருக்கும் வர்த்தகப் போர் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன.

 வர்த்தகப் போருக்கு என்ன காரணம் இதன் விளைவுகள் என்ன, இதனால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன் இருநாடுகளின் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் வர்த்தகப் போர் ட்ரம்ப் வந்த பிறகு ஆரம்பித்தது அல்ல. கிளிண்டன் காலத்திலிருந்தே இருக்கிறது.

அமெரிக்கா உலகின் தரமான பொருள்கள், தொழில்நுட்பங்களின் மையமாக இருப்பதால் சக்திவாய்ந்த நாடாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் இடத்தை சீனா விரைவில் பிடித்துவிடும் அளவுக்கு அசுர வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது. சீனா இத்தகைய வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்த போதுதான் உலகமயமாக்கல் விஸ்வரூபம் எடுத்தது.

அப்போது சீனாவின் மிகப்பெரிய சந்தை உலக நாடுகளுக்குத் தேவையாக இருந்தது. இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டது சீனா. அனைத்து நாடுகளுடனும் இணைந்து வர்த்தகம் செய்தது. ஆனால், சீனா சந்தையின் கட்டுப்பாட்டை பிறநாடுகளிடம் விட்டுவிடாமல் தன்பிடியில் வைத்திருந்தது. உலகின் மொத்த ஜிடிபியில் சீனா மட்டுமே 32 சதவீதம் பங்கு வகிக்கிறது.

இதற்கு சீனா செய்ததெல்லாம் ஒன்றுதான் உலகின் மிகத்தரமான பொருள்களையும், தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொண்டு அவற்றை தானே  உற்பத்தி செய்து சந்தையில் இறக்கியது. அமெரிக்காதான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது. அமெரிக்க பொருள்கள் விலை உயர்ந்ததாக இருந்த நிலையில் சீனாவின் அச்சு மாறாத தயாரிப்புகள் விலை குறைவாக கிடைத்ததால் அமெரிக்க மக்களே சீனாவின் பொருள்களை வாங்கும் நிலை உருவானது.

அமெரிக்காவின் சாப்ட்வேர்கள் மட்டுமல்ல, ரோலக்ஸ் வாட்சிலிருந்து, நைக்கி ஷு, லூயிஸ் வுட்டன் பேக், ஆப்பிள் ஐபோன் வரை என அனைத்தும். இதனால் அமெரிக்காவுக்கு ஒவ்வொரு வருடமும் பல நூறு பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

இன்றும் உலகம் முழுவதும் அன்றாட பயன்பாடுகளில் உள்ள பொருள்களிலெல்லாம் சீனாவின் பெயர்தான். பொருளாதாரத்தில் எல்லா மட்டத்திலிருப்பவர்களுக்குமான பொருள்களை உற்பத்தி செய்ததால் எந்தவொரு நாடும் நிராகரிக்க முடியாத சந்தையாக சீனா மாறியது. உற்பத்தியில் மட்டுமல்ல சேவைத்துறையிலும் அமெரிக்காவுக்கு நிகராக சீனா மாறிவருகிறது.

சீனாவின் ஜிடிபி கடந்த பதினெட்டாண்டுகளில் பத்துமடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால் அமெரிக்கா இதே காலகட்டத்தில் இரண்டு மடங்கு மட்டுமே வளர்ச்சிகண்டுள்ளது. காரணம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை சந்தையை, வேலைவாய்ப்புகளை, லாபத்தை என அனைத்தையும் சீனா கபளீகரம் செய்துகொண்டது. இதுதான் அமெரிக்கா சீனா மீது வர்த்தகப் போர் தொடுக்க மூலகாரணம்.

2000ல் கிளிண்டன் அதிபராக இருந்தபோதே சீனா அமெரிக்காவின் தயாரிப்புகளை, தொழில்நுட்பங்களைத் திருடுவது குறித்த பேச்சுவார்த்தையை நடத்தினார். அப்போது சீனா சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதாக வாக்களித்தது. ஆனால், எதையும் செய்யவில்லை. கிளிண்டனும் அப்போது சீனப் பொருள்களின் மீது இறக்குமதி வரிகளை உயர்த்தினார்.

ஆனால் சீனாவை கிளிண்டனும், அதற்குப் பிறகு வந்தவர்களும் பெரிய அளவில் எதிர்க்கவில்லை. காரணம், சீனாவால் அமெரிக்க நிறுவனங்கள், தொழிலதிபர்கள், மக்கள் உட்பட அனைவரும் லாபமடைந்தனர். அதுவே அமெரிக்காவுக்குப் பெரிய பிரச்சினையாக மாறும் என்பதை அமெரிக்கா நினைத்து பார்க்கவில்லை.

ஆனால், சீனாவின் வளர்ச்சியை முன்வைத்து பல்வேறு அறிஞர்கள் ஆய்வின் மூலமும் புத்தகங்கள் மூலமும் பல்வேறு காலகட்டங்களில் எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

2016 தேர்தலின்போது ட்ரம்புக்கு முன்னால் அமெரிக்கர்கள் வைத்த பெரும்பாலான கோரிக்கை சீனாவை குறித்ததாகவே இருந்தன. ட்ரம்ப் சீனாவிடம் இழந்ததையெல்லாம் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டுவர உறுதியளித்தார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்று முழங்கினார். எல்லா வகையிலும் சீனாவை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய நிலை ட்ரம்புக்கு ஏற்பட்டது.

விசா விவகாரத்தை கையில் எடுத்தார். ஆனால் அதிலும் பாதிப்பு அமெரிக்காவுக்குதான் இருந்தது. பின்னர், இறக்குமதிகளுக்கு வரி விதித்தார். பதிலுக்கு சீனாவும் வரி விதித்தது. இப்போதும் பாதிக்கப்பட்டது அமெரிக்காதான்.

அமெரிக்கா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதைக் காட்டிலும் அதிகம் இறக்குமதி செய்கிறது. இதனால் பாதிப்பு சீனாவுக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டது அமெரிக்கர்கள். அமெரிக்காவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கவே முடியவில்லை. அப்படி குறைத்ததால் விலை உயர்வும், செலவும் அதிகமானது. சீனாவின் இறக்குமதி வரிகளால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் சீனாவிடம் இல்லாத பெட்ரோலிய பொருள்கள் மீதான நெருக்கடியை உருவாக்க ட்ரம்ப் முடிவு செய்தார். சீனா அமெரிக்காவிடம்தான் கச்சா எண்ணெயை வாங்க வேண்டும் என்று கூறினார். ஆனால், சீனா மறுத்தது.

அமெரிக்கா அதன்பிறகுதான் ஈரான் மீது பொருளாதார தடையை அறிவித்தது. ஈரானிடம் யாரும் வர்த்தகம் செய்யக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் இதை இந்தியா உட்பட எந்த நாடும் கேட்பதாக இல்லை. சீனா உட்பட பல நாடுகள் ஈரானுடன் அமெரிக்க டாலருக்குப் பதிலாக அந்தந்த நாட்டின் செலாவணிகளிலேயே வர்த்தகம் செய்து கொள்ள தயாராகிவிட்டன.

இதுவரை அமெரிக்காவை எதிர்க்காத நாடுகள் எல்லாம் இப்போது ஏதோ ஒருவகையில் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. கிளிண்டன் போல் சீனாவிடமிருந்து வாக்குறுதியை வாங்கிக்கொண்டு இந்த விவகாரத்தை விட்டுவிடக்கூடிய தலைவர் அல்ல, ட்ரம்ப்.  அவருக்கு அமெரிக்காவின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதில் முழு ஆர்வம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதாரத்தில் மேலடுக்கில் உள்ளவர்கள் அனைவரும் குறிப்பிடுவது போல் ‘அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து எதுவும் அவர் அறிந்திருக்கவில்லை’ என்பதுதான் உண்மை. 

ட்ரம்பின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றவர்களும் இதற்கு ஒரு காரணம். அவர்களில் சிலர் உலகமயமாக்கலுக்கு ஆதரவானவர்கள், சிலர் சீனாவுக்கு எதிரானவர்கள். இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் ட்ரம்ப் முரண்பாடான முடிவுகளையே எடுக்க வேண்டியிருக்கிறது. ட்ரம்ப்பின் ஒவ்வொரு முடிவும் அமெரிக்காவை பாதிப்பதாகத்தான் மாறிக் கொண்டிருக்கின்றன. சீனா நாளுக்கு நாள் அசைக்க முடியாத சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது.

- saravanan.j@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x