Published : 29 Oct 2018 11:33 AM
Last Updated : 29 Oct 2018 11:33 AM
என்ன நடக்கிறது என்பதை இப்போதுவரை அறுதியிட்டு கூற முடியாத வகையில் பல சர்ச்சைகளோடு பின்னிக் கிடக்கிறது சிபிஐ விவகாரம். சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் துணை இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கு இடையே நடந்த அதிகார மோதல் என்றுதான் இந்த சர்ச்சை வெளியே வரத் தொடங்கியது. ஆனால்
அதையும்தாண்டி பல விவகாரங்கள் இதில் புதைந்துள்ளன என்று கருதுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
சிபிஐ இயக்குநரும், துணை இயக்குநரும் ஒருவர் மாற்றி ஒருவர் ஊழல் புகார்களை பட்டியலிடுகின்றனர். குறிப்பாக சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்
பட்ட இறைச்சி ஏற்றுமதி தொழிலதிபர் மொயின் குரோஷி, சதீஷ் சானா ஆகியோர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க துணை இயக்குநர் அஸ்தானாவுக்கு ரூ.5 கோடி வரை லஞ்சம்
அளித்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை புகாரை பதிவு செய்ய சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா அனுமதி அளிக்கிறார். பதிலுக்கு அலோக் வர்மா மீது அஸ்தானாவும் ஊழல் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த திங்கள்கிழமையன்று சிபிஐ அலுவலகத்திலேயே சிபிஐ ரெய்டு நடத்திய ‘வரலாறு’ம் நடந்தது. அன்றே சிபிஐ சிறப்பு குழுவின் புலனாய்வு அலுவலரான தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டார். இப்படியாக ஓரிரு நாட்களில் அதிரடி திருப்பங்களுடன், திரை மறைவு விவகாரங்களால் பரபரத்து கிடக்கிறது சிபிஐ அலுவலகம்.
அரசியல் வழக்குகள் தவிர, அதிமுக்கிய பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் இடத்திலும் சிபிஐ உள்ளது. சிபிஐ `எடுப்பார் கைப்பிள்ளையாக’ செயல்படும் அமைப்பு என்கிற விமர்சனம் இருந்தாலும், மக்களின் நம்பிக்கையை தக்கவைத்துள்ள அரசு அமைப்புகளில் முக்கியமானது.
நீதிமன்றங்களில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதும், வழக்குகளை தீர்வுகளை நோக்கி நகர்த்துவதிலும் சிபிஐ பெரும் பங்காற்றுகிறது. தற்போதுவரை பல பொருளாதாரக் குற்ற வழக்குகள் சிபிஐ வசம் உள்ளன. ஆனால் இந்த வழக்கு விசாரணைகளின் உண்மைத் தன்மை என்ன என்பதுதான் மொயின் குரோஷியின் வாக்குமூலத்திலிருந்து புதிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
பரஸ்பர குற்றச்சாட்டு
கடந்த 2016 டிசம்பரில் சிபிஐ தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் அஸ்தானா. 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு, மாட்டுத் தீவன ஊழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தவர். 1979-ம் ஆண்டு அருணாச்சல பிரதேச ஐபிஎஸ் அதிகாரியான அலோக் வர்மா, கடந்த 2017 ஜனவரியில் சிபிஐ இயக்குநராக பெறுப்பேற்றார்.
இவர் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான கூட்டு தேர்வுக் குழுவால் நியமனம் செய்யப்பட்டவர். இவரது நியமனத்துக்கு பின்னர், தற்காலிக இயக்குநரான அஸ்தானா 2-ம் இடத்தில் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதற்கு அலோக் வர்மா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
கருத்து வேறுபாடு இருந்தாலும், அரசியல் ஊழல் வழக்குகளைத் தாண்டி, இந்தியாவின் முக்கிய பொருளாதார வழக்குகளையும் கையாண்டவர்கள் இவர்கள். குறிப்பாக வங்கிகளின் வாராக்கடன், நிதி மோசடிகள், நிறுவனங்களின் திவால் நிதி மோசடி, ஒப்பந்த மீறல்கள், கறுப்பு பண பதுக்கல், அந்நிய செலாவணி மோசடி என பல வழக்குகள் சிபிஐ விசாரணையில் உள்ளன. ஆனால் இயக்குநர்களின் பரஸ்பர ஊழல் புகாரால் கடந்த காலத்தின் வழக்கு விசாரணைகள் சந்தேகத்துக்குரியதாக மாறியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய பொருளாதார குற்றவாளிகளில் தண்டனை பெற்றவர்களைவிட தப்பிச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகம் எனலாம். விஜய் மல்லையா, மெகுல் சோக்ஸி, நீரவ் மோடி, சண்டேசரா சகோதரர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். யுனிடெக் மோசடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி, ஏர்செல் -மேக்ஸிஸ் வழக்கு, மானெசர் நில ஒப்பந்தம், எம்பரர் ஒப்பந்தம் என பல முக்கிய வழக்குகளை கையாண்டுள்ளது சிபிஐ.
பல வழக்குகளில் சிபிஐ தோல்வியை சந்தித்துள்ளது. 2ஜி வழக்கு, ஹிந்துஜா சகோதரர்கள் வழக்கு, பெல்லாரி சகோதரகள் வழக்கு என பலவற்றில் சிபிஐ தனது தரப்பினை சரியாக முன்வைக்கவில்லை என்கிற கடந்த காலவரலாறுகளும் உள்ளன. சட்டவிரோத பணபரிமாற்ற குற்றத்திலிருந்து விடுவிக்க மொயின் குரோஷியிடம் லஞ்சம் வாங்கியதுபோல, இதரவழக்குகளில் உண்மை நிலைகள் சந்தேகத்துக்குரியதாகிறது.
புதிய திருப்பம்
இரண்டு இயக்குநர்களுக்கு கட்டாய விடுப்பு அளித்து, புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டதற்குப் பின்னால் சில அரசியல் காரணங்களும் உள்ளன என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன. பிரான்ஸ் நிறுவனத்துடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன.
இந்த நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழலில் ஈடுபட்டதாக பிரதமர் மோடி மீது உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி ஆகியோர் சிபிஐ இயக்குநரான அலோக் வர்மாவிடன் புகார் அளித்திருந்தனர்.
அலோக் வர்மா இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கான முனைப்பில் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் அலோக் வர்மா மீதான நடவடிக்கையை அரசியல் நோக்கர்கள் கவனிக்கின்றனர். இதன் மூலம் ரஃபேல் விசாரணையை நிறுத்த அரசு திட்டமிடுவதாக சொல்கின்றன.
ஊழல் வழக்குகள் விசாரணை
இயக்குநர்கள் மீதான ஊழல் வழக்குகளை இரண்டு வாரங்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அலோக் வர்மா தனது வாதத்தில் சில முக்கியமான வழக்குகளை விசாரித்த காரணத்தாலேயே தான் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக உணர்கிறேன் எனக் கூறியுள்ளார். பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், விசாரிக்க வேண்டிய அதிகாரியை பிரதமரே நீக்குகிறார் என எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கியுள்ளன.
இரண்டு அதிகாரிகள் மட்டத்திலான அதிகார மோதல், பல ஊழல் வழக்குகளில் திருப்பங்களை கொண்டுவர உள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் வெளிப்படைத் தன்மையை கேட்பது ஒருபக்கம் என்றால், பொருளாதார குற்ற விசாரணைகளின் நம்பத்தன்மையும் கேள்விக்குறியாக நிற்கிறது.
- maheswaran.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT