Published : 29 Oct 2018 11:33 AM
Last Updated : 29 Oct 2018 11:33 AM
சேரமான் கணைக்கால் இரும்பொறை எனும் அரசனின் கதையைப் பள்ளியில் படித்து இருப்பீர்கள். இவர் சேர நாட்டைச் சேர்ந்தவர். ஒரு முறை இவர் சோழன் செங்கணன் என்பவரோடு போரிட்டு அவரால் பிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டாராம்.
வாடிய அவர், தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால், அதனைக் குடிக்க மறுத்து விட்டாராம். மேலும், தனது நிலைக்கு இரங்கி ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்து இறந்ததாக வரலாறு! தன் நிலையை நொந்து அவர் பேசுவது ‘குழவி இறப்பினும்...' எனத் தொடங்கும் புறநானூற்றின் 74வது பாடலாக அமைந்துள்ளது.
பண்டைக் காலத்தில், பிறந்த குழந்தை இறந்துவிட்டாலும், பிறக்கும் போதே சதைப் பிண்டமாகப் பிறந்துவிட்டாலும், அந்தக் குழந்தையை வாளால் காயப்படுத்திய பின்னரே புதைப்பார்களாம்! இதைச் சொல்லித் தொடங்கும் இப்பாடலில், அவர் , தொடர்ந்து, ‘இப்போது நான் காயமில்லாமல் வஞ்சகத்தால் பிடிபட்டுக் கிடக்கிறேனே, நான் ஆண்மகன் ஆவேனா?அன்றியும் என் வயிற்றுத் தீயைத் தணித்துக் கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். இதனை உண்ணவும் வேண்டுமா?' என்று வருந்துகிறார்.
ஐயா, யாருக்கும் கர்வம், அகம்பாவம் கூடாது, அடக்கம் தான் நல்லது என்பது உண்மையே. ஆனால் அதே சமயம், யாரும் தன்மானம் இல்லாமல் இருக்கலாமா? மற்றவர்களை மதிக்கும் நாம், நம்மையும் மதிக்கத் தானே வேண்டும்? இதைத் தான் சாணக்கியரும் சொல்கிறார்.
‘உங்கள் தகுதிக்குக் குறைவானது எதையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அப்படிச் செய்வது கர்வமல்ல, சுயமரியாதையே ஆகும் ' என்கிறார் அவர்.
மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி அதில் இன்பம் காண்பவர்களை நீங்களும் பார்த்து இருப்பீர்கள்.சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் வங்கியில் கோட்ட மேலாளராகப் பணியாற்றிய பொழுது, எங்கள் வங்கியின் விவசாயப் பயிற்சிக் கல்லூரி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அது சிறப்பாகவே நடைபெற்று வந்தது.
இருப்பினும் மற்ற வங்கிகளின் பயிற்சிக் கல்லூரியின் செயல்பாட்டு முறைகளைப் பார்த்து, அதில் உபயோகமான நடைமுறைகள் இருந்தால் நாமும் பின்பற்றலாமே எனும் எண்ணத்துடன் அவ்வூரில் இருந்த வேறு ஒரு பயிற்சிக் கல்லூரிக்கு நானும் எங்கள் கல்லூரியின் முதல்வரும் சென்றோம்.
அங்கே எங்களை வேண்டா வெறுப்பாக வரவேற்றார் அக்கல்லூரியின் முதல்வர். எங்களுக்குத் தேநீர் வந்த பொழுது, அவருக்கு அழகான பீங்கான் கோப்பையிலும், எங்கள் இருவருக்கும் பழைய, சிறிய சில்வர் டம்ளரிலும் கொடுக்கப்பட்டது. எரிச்சலடைந்த, கோபம் கொண்ட நாங்கள் அதைக் குடிக்க மறுத்து விட்டோம்.
‘தன்மானம் உள்ளவன் மற்றவர்களை மகிழ்விப்பதற்காகத் தான் தவறென்று நினைப்பதை ஒருபோதும் செய்யமாட்டான். அவர்கள் வருத்தப்பட்டாலும் பரவாயில்லையென்று தனக்குச் சரியென்று பட்டதையே செய்வான்' என்கிறார் அமெரிக்கப் பேச்சாளர் வில்லியம் போட்கர்.இதைத்தான் நம் ஔவைப் பாட்டியும் ‘மதியாதார் வாசல் மிதியாதே' என்று சொல்லி விட்டார்.
பின்னர் விசாரித்ததில், அவர் எந்த அலுவலகத்திற்குச் சென்றாலும் இதே முறையைப் பின்பற்றுவார் எனத் தெரிந்து கொண்டோம். ஒரே மாதிரியான கோப்பைகள் போதிய அளவு இருந்தாலும், தனக்கும் தன்னைப் பார்க்க வருபவர்கள் எவ்வளவு உயர் நிலையில் இருந்தாலும், தனக்குத் தான் அதிக மரியாதை காட்ட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்!
சரி, protocol எனும் ஆங்கில வார்த்தை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அரசாங்க விழாக்களில், இராணுவ சம்பிரதாயங்களில் கண்டிப்புடன் கடை பிடிக்கப்படும் நெறிமுறைகளைத்தான் சொல்கிறேன். குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்படும் மதிப்பைப் பார்த்துப் பெருமைப் பட்டு இருப்பீர்கள். அவரைக் குடியரசுத் தலைவர் ஆக்கியவரே அவருக்கு அளிக்கும் மரியாதையைக் கவனித்து இருப்பீர்கள். அண்ணே, எங்குமே அந்தப் பதவிக்கு, அந்த நாற்காலிக்கு உள்ள முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும் இல்லையா?
சமீபத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இறந்த பொழுது நமது பிரதமர் இறுதி ஊர்வலம் நெடுக நடந்து சென்றதைப் பார்த்தோம்.அவ்வாறு கண்ணியமாக மரியாதை கொடுக்கும் பொழுது, மரியாதை கொடுப்பவரின் மரியாதையும் உயருகிறதல்லவா?
இவ்வளவு ஏன்? தூக்கிலப்படப் போகும் கைதியைக் கூடக் கண்ணியமாக நடத்துவது தான் இன்றும் நடைமுறையில் இருக்கும் பண்பாடு. அதிகாலையில் வெந்நீர் கொடுத்து குளிக்கச் சொல்லி, விரும்பிய உணவளித்து, வேண்டிய மத நூல்களைப் படிக்கக் கொடுத்து, உடல் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து, அதன் பின்னரே தூக்கிலிடுவார்களாம். முகச்சவரம் செய்து கொள்ளக் கூட அனுமதிப்பார்களாம்!
இப்படி அங்கங்கு கண்ணியம் காக்கும் நாம்,சாணக்கியர் சொல்வது போல் நமது சுய கௌரவத்தையும் எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாதல்லவா?
- somaiah.veerappan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT