Published : 13 Aug 2018 11:15 AM
Last Updated : 13 Aug 2018 11:15 AM

சரியான மியூச்சுவல் பண்டை தேர்ந்தெடுப்பது மட்டும் போதுமா?

சரியான மியூச்சுவல் பண்டினை தேர்ந்தெடுத்தால் மட்டுமே நிர்ணயம் செய்த இலக்கினை அடைய முடியும் என முதலீட்டாளர்கள் நினைக்கிறார்கள். X,Y,Z பண்ட்களில் முதலீடு செய்தால் இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடியை எட்ட முடியுமா என்பது பல முதலீட்டாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

சரியான பண்டினை தேர்ந்தெடுத்துவிட்டால் மட்டுமே நாம் நிர்ணயம் செய்த வெற்றியை அடைந்து விட முடியாது. மேலும் சில விஷயங்கள் உள்ளன. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு முதலீடு செய்யும் பட்சத்தில் இலக்குகளை சரியாக எட்ட முடியும்.

எப்போது தொடங்குவது?

பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்வதில் ஆர்வமாக இருந்தாலும், முதலீடு குறித்த முடிவை சரியான நேரத்தில் எடுப்பதில்லை. முதலீட்டுக்கான முடிவை தொடர்ந்து தள்ளி வைத்துக்கொண்டே இருக்கின்றனர். புதிய முதலீட்டாளர்கள் சந்தையில் இருக்கும் பலவிதமான முதலீட்டு திட்டங்களைக் குழப்பி கொள்வதால் தவறான முடிவினை எடுக்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் முதலீடே செய்வதில்லை. மியூச்சுவல் பண்ட் முதலீட்டினை பொறுத்தவரை, முதலீட்டு முடிவினை சீக்கிரம் எடுக்க வேண்டும். அப்போதுதான் கணிசமான தொகையை பெற முடியும். விரைவாக தொடங்க வேண்டும் என்பதற்காக அர்த்தத்தை, உதாரணத்துடன் சொன்னால் புரியும்.

டாப் 50 லார்ஜ் கேப் பண்ட்களில் 30-வது இடத்தில் இருக்கும் ஒரு பண்டில் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறார் (முதலீட்டாளர் ஏ) என வைத்துக்கொண்டால் அந்த முதலீட்டின் தற்போதைய மதிப்பு ரூ.24.8 லட்சமாக இருக்கும்.

ஆனால் இரு ஆண்டு யோசனைக்கு பிறகு 2010-ம் ஆண்டு சிறந்த மியூச்சுவல் பண்டினை ஒருவர்  தேர்ந்தெடுக்கிறார். முதல் சில இடங்களுக்குள் இருக்கும் இந்த பண்டில்  2010-ம் ஆண்டு முதல் மாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறார் என வைத்துக்கொண்டால் ரூ.18 லட்சம்  மட்டுமே இவருக்கு கிடைக்கும்.

இவருக்கு ஆண்டுக்கு 15 சதவீத வருமானம் கிடைக்கும்.  முன்கூட்டியே தொடங்கியவருக்கு 13.7 சதவீத வருமானம் கிடைத்தாலும், முன்கூட்டியே தொடங்கியவர் வசம் கூடுதல் தொகை இருக்கும்.  இத்தனைக்கும் இவர் சிறப்பாக செயல்படும் பண்டில் முதலீடு செய்யாமல், சராசரியான பண்டில் முதலீடு செய்திருக்கிறார்.

எந்த பண்டினை தேர்ந்தெடுப்பது என்னும் குழப்பம் இருந்தால், நிப்டி 50 இண்டெக்ஸ் பண்ட்களில் முதலீட்டினை தொடங்கலாம். அதனை தொடர்ந்து சரியான பண்டுக்கு மாறிக்கொள்ளலாம்.

பல முதலீட்டாளர்கள், முதலீடு செய்ய இருக்கும் தொகையை எவ்வாறு பிரித்து முதலீடு செய்வது என்பதில் கவனம் செலுத்தாமல், பண்டின் தரமதிப்பீட்டில் கவனம் செலுத்துகிறார்கள். மொத்த முதலீட்டையும் பங்குச்சந்தை சார்ந்த பண்ட்களில் அல்லாமல் கடன் சார்ந்த பண்ட்களில் கூட முதலீடு செய்யலாம். முதலீட்டை பிரித்து முதலீடு செய்வதை போல, எந்த பிரிவில் முதலீடு செய்வது என்பதும் முக்கியம். அதிக வருமானம் உங்களது குறிக்கோள் என்னும் பட்சத்தில் மிட்கேப் பண்ட்களில் முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும்.

போதுமான அளவு முதலீடு?

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தாலும், சிலர் மிக குறைவான தொகையை, அதாவது அவர்களால் முடிந்த தொகையை விட குறைவாக முதலீடு செய்வார்கள்.இதனால் பெரிய அளவிலான தொகையை சேர்த்துவிட முடியாது. அதனால் உங்களது இலக்குகளை அடைய வேண்டும் என்றால் போதுமான தொகையை முதலீடு செய்வது நல்லது.

உங்கள் மாதத் தொகையில் 15 சதவீதத்தை முதலீடு செய்வது நல்லது. அதேபோல உங்களது வருமானம் உயர உயர உங்கள் முதலீடு உயர வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

தற்போது வேலைக்கு சேர்ந்திருக்கும் ஒருவர் மாதம் 5,000 ரூபாயை 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் 12 சதவீத வருமானம் என வைத்துக்கொண்டால் கூட 45 லட்ச ரூபாய் கிடைக்கும். அதே சமயத்தில் அவருடைய எஸ்ஐபி தொகையை ஆண்டுக்கு ரூ.500 உயர்த்தினால் மாதம் 20 ஆண்டு முடிவில் ரூ.73 லட்சம் கிடைக்கும்.  இந்தியாவில் 5 சதவீத ஊதிய உயர்வு என்பது தற்போதைய நிலையாக இருக்கிறது. இந்த கூடுதல் தொகையை முதலீடு செய்தால் கூட 20 ஆண்டு முடிவில் கணிசமான தொகை கிடைக்கும்.

தொடர்ச்சியான முதலீடு

சிலர் முதலீட்டை தொடங்கும்போது உற்சாகமாக தொடங்குவார்கள். ஆனால் அந்த உற்சாகத்தை, கடினமான சூழல் வரும் போது இழந்துவிடுவார்கள். சரியான பண்டினை தேர்ந்தெடுப்பதை விட, நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது அவசியம்.

- aarati.k@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x