Last Updated : 02 Jul, 2018 10:58 AM

 

Published : 02 Jul 2018 10:58 AM
Last Updated : 02 Jul 2018 10:58 AM

ஆன்லைன் மோசடி...அலறும் வாடிக்கையாளர்கள்

உலகிலேயே ஆன்லைன் மோசடிகளால் அதிகம் ஏமாறுபவர்கள் இந்தியர்கள்தான். நம்மில் பெரும்பாலானோருக்கு நமது டெபிட் கார்டின் நம்பர், பின் நம்பர் கேட்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி போன் வந்திருக்கும். விவரமானவர்கள் தப்பியிருப்போம். அந்த விவரம் இல்லாதவர்களில் பலர் பல ஆயிரங்களையும் சிலர் சில லட்சங்களையும் கூட இழந்திருப்பார்கள்.

சொன்னா வெக்கக்கேடு... சொல்லாட்டி மானக்கேடு.. என புலம்பியபடியே, இனியாவது சுதாரிப்பாக இருப்போம் என மனதை தேற்றிக் கொள்பர்கள்தான் பலர். ஏமாற்றுபவர்கள் பல அடுக்குகளை ஏற்படுத்தி இருப்பார்கள் என்பதால், அவர்களை நெருங்கவே முடியாது. நெருங்கினாலும் பணத்தை திரும்ப வாங்க முடியாது. புகாரை விசாரிக்கும் போலீஸாருக்கு அந்த அளவுக்கு டெக்னிக்கல் அறிவும் கிடையாது அதனால் போன பணம் போனதுதான்.

வங்கி பணப் பரிமாற்றம், பொருட்கள் வாங்குவது, போன், டி.வி. போன்றவற்றுக்கு ரீசார்ஜ் செய்வது என பல விஷயங்களை நாம் ஆன்லைன் மூலமே செய்து கொள்கிறோம். ஆசிய - பசிபிக் நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஸ்மார்ட் போன் மூலம் ஆன்லைன் பரிமாற்றங்களை அதிகம் செய்வதில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

அதேபோல் ஆன்லைன் மோசடிக்கு பலியாகி ஏமாறுவதிலும் அவர்கள்தான் முதலிடம். ஏறக்குறைய 24 சதவீத இந்தியர்கள் ஆன்லைன் மோசடியால் ஏமாற்றப்பட்டுள்ளதாக எஸ்பீரியன் அண்ட் ஐடிசி என்ற அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. டெலிகாம் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் ஆன்லைன் ரீடெய்லர்கள் தொடர்பாகத்தான் பெரும்பாலான மோசடிகள் நடக்கின்றன.

இந்த அமைப்பு ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், நியூஸிலாந்து, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில்தான் இணையதள மோசடிகளில் இந்தியர்கள் அதிகம் ஏமாறுவது தெரிய வந்துள்ளது.

இணையதளங்களில் ஏறக்குறைய 51 சதவீத இந்தியர்கள் தங்களைப் பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள கொஞ்சம் கூடத் தயங்குவதில்லையாம். பேரு, ஊரு, வயசு, சம்பளம், ஆணா, பெண்ணா, போன் நம்பர், கார் இருக்கா, பைக்கா, சொந்த வீடு இருக்கா, வாடகை வீடா, கல்யாணம் ஆச்சா, சிங்கிளா என ஒன்றுவிடாமல் அனைத்து விவரங்களையும் சொல்லி விடுகிறார்களாம்.

இப்படி ஒளிவுமறைவு இல்லாமல் வெள்ளந்தியாக இருப்பதால், நான்கில் ஒரு வாடிக்கையாளர் ஏதாவது ஒரு விதத்தில் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கிறது அந்த ஆய்வு. வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே தங்களைப் பற்றிய விவரங்களை தேவையில்லாமல் யாருக்கும் தெரிவிப்பது இல்லையாம்.

சமீபத்தில் நடந்த 2 சம்பவங்களைப் பார்ப்போம். ஒன்று மும்பையிலும், மற்றொன்று நம் சென்னையிலும் நடந்தது. மும்பையை சேர்ந்த பெண் மோடக். அரசு வங்கியொன்றில் இவர் கணக்கில் ரூ.7.20 லட்சம் இருந்துள்ளது. சில தொழில்நுட்ப காரணங்களுக்காக உங்கள் டெபிட் கார்டு முடக்கப்பட்டு விட்டதாகவும், அதை சரிசெய்ய டெபிட் கார்டு விவரங்களைத் தெரிவிக்கும்படியும் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஒரு மோசடிப் பேர்வழி கேட்டிருக்கிறார். 16 டிஜிட் கார்டு நம்பர், கார்டில் இருந்த தன்னுடைய பெயர், பின்பக்கம் இருக்கும் 3 டிஜிட் சிவிவி நம்பர் என ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அத்தனை தகவல்களையும் மோசடி பேர்வழியிடம் கூறியிருக்கிறார்.

போனில் வரும் ஒன்டைம் பாஸ்வேர்டை (ஓடிபி) தனக்குத்தெரிவிக்கும்படி அவர் கேட்டிருக்கிறார். அவரும் கூறியிருக்கிறார். இப்படி ஒரு நாளல்ல. ஒரு வாரத்துக்கு... ஒருமுறை அல்ல, 28 முறை. அந்தப் பெண்ணுக்கு ஆன்லைன் பரிமாற்றம் பற்றிய விவரம் எதுவுமே தெரியவில்லை. கடந்த மே 17-ம் தேதி ஆரம்பித்த மோசடி, ஒரு வாரம் தொடர்ந்திருக்கிறது. ஒரு வார முடிவில் அந்த பெண்ணின் கணக்கில் இருந்து 6 லட்சத்து 98 ஆயிரத்து 973 ரூபாய் மோசடி செய்யப்பட்டு விட்டது. 3 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த மோசடி நடந்திருப்பதாக போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் பணப் பரிமாற்றம் மும்பை, நொய்டா, குருகிராம், கோல்கத்தா, பெங்களூரு என பல இடங்களில் நடந்துள்ளது. மே 29-ம் தேதி அந்த பெண் போலீஸில் புகார் செய்துள்ளார். இதுவரை யாரும் பிடிபடவில்லை.

இரண்டாவது சம்பவம் நடந்திருப்பது சென்னையில்.. சென்னையை சேர்ந்தவர் ரஞ்சிதா. அவருக்கு ஒரு இமெயில் வந்திருக்கிறது. அதில் அமெரிக்காவில் உள்ள கோடீஸ்வரருக்கு கிட்னி தேவைப்படுவதாகவும் அதைக் கொடுத்தால் ரூ.1.5 கோடி பணம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. ரஞ்சிதாவுக்கு கொஞ்சம் பணக் கஷ்டம். அதோடு ரூ.1.5 கோடி என்பது பெரிய தொகை என்பதால் கிட்னி டீலுக்கு சம்மதித்திருக்கிறார்.

மறுநாளே, நகரின் மிகப் பெரிய மருத்துவமனையின் பெயரில் ஒரு இமெயில் வருகிறது. கிட்னி மாற்று சிகிச்சைக்கு ரஞ்சிதா சம்மதம் தெரிவித்திருப்பது உண்மைதானா என்றும் உண்மையாக இருந்தால் சிகிச்சைக்கான ஏற்பாடு விரைவில் நடக்கும் என்றும் அந்த மெயிலில் கூறப்பட்டிருந்தது. ரஞ்சிதாவுக்கு நம்பிக்கை வந்தது.

பெரிய தொகை என்பதால் மொத்தமாகத் தர மாட்டோம். முதலில் ரூ.75 லட்சமும் அதன்பிறகு ரூ.75 லட்சமும் இரண்டு தவணையாகத்தான் பணம் தருவோம் என்றும் மோசடிக்காரன் கூறியிருக்கிறான். கணவரிடமோ, நண்பர்களிடமோ இது பற்றி கூற வேண்டாம் என்றும் அவன் சொன்னதை நம்பிய ரஞ்சிதா, யாரிடமும் இதை சொல்லவில்லை. அதை உறுதி செய்து கொண்ட அவன், வீடியோ காலில் கூப்பிட்டு, பிராசஸிங் கட்டணமாக முதலில் ரூ.50 ஆயிரம் கட்ட வேண்டும் எனக் கூறியிருக்கிறான்.

அதை உண்மை என நம்பிய ரஞ்சிதா, கடன் வாங்கி அதைக் கட்டியிருக்கிறார். பின்னர் கோர்ட் செலவு எனக் கூறி ரூ.1 லட்சம் கேட்டிருக்கிறான். இப்படியே பல்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.5.5 லட்சம் செலுத்தியிருக்கிறார் ரஞ்சிதா. எப்படியும் ரூ.1.5 கோடி வந்துவிடும். அத்தனை கடனையும் தீர்த்து விடலாம் என உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கிடையில் ரிசர்வ் வங்கியிடம் இருந்தும் அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் இருந்தும் வருவது போல் மெயில் வருகிறது ரஞ்சிதாவுக்கு.

ஒரு கட்டத்தில் அவருக்கு சந்தேகம் வருகிறது. கிட்னி டீல் வேண்டாம் என்றும் தனது பணத்தை திருப்பி அளிக்கும்படியும் கேட்கிறார் ரஞ்சிதா. `உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் பரவாயில்லை.. இதோடு டீலை முடித்துக் கொள்வோம்... நாங்கள் வேறு யாரையாவது பார்த்துக் கொள்கிறோம்..’ எனக் கூறிய மோசடிக்காரன், ஆனால், `நீங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றால் டீலை ரத்து செய்யக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 ஆயிரத்தை அனுப்புங்கள்..’ எனக் கூலாக கூறியிருக்கிறான். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரிகிறது அவருக்கு. சைபர் கிரைம் செல்லில் புகார் கூறியிருக்கிறார். போலீஸார் குற்றவாளிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்குத் தெரிந்தவரையில் இதுபோன்ற மோசடிகள் நாள்தோறும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்பாவி பொதுமக்கள் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். வங்கிகளும் டெலிகாம் நிறுவனங்களும் எவ்வளவோ விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்தபோதிலும் அதற்கு பலனில்லை என்பதற்கு இதுபோன்ற சம்பவங்களே உதாரணம்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x