Published : 14 Apr 2025 07:54 AM
Last Updated : 14 Apr 2025 07:54 AM
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விகிதபட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதற்கு சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதையடுத்து, சீனாவைத் தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். எனினும், பரஸ்பர வரி விதிப்பால் இந்திய வேளாண் துறையில் என்ன தாக்கம் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம்.
இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பு 85.5 பில்லியன் டாலர் (ரூ.7.37 லட்சம் கோடி). அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வது 41.4 பில்லியன் டாலர் (ரூ.3.56 லட்சம் கோடி). இதில் 2024-ம் ஆண்டில் மட்டும் இந்தியா 5.1 பில்லியன் டாலர் (ரூ.44 ஆயிரம் கோடி) மதிப்பிலான வேளாண் பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் இது 11%. அதேநேரம் அமெரிக்கா இந்தியாவுக்கு 1.5 பில்லியன் டாலர் (ரூ.13 ஆயிரம் கோடி) வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஆக கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையே மொத்தம் 6.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் நடந்துள்ளது.
பெரும்பாலும் கடல் உணவுப் பொருட்கள், பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகள் மற்றும் காய்கறிகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் பொருட்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகிறது.
அமெரிக்காவின் வேளாண் பொருட்களுக்கு இந்தியா சராசரியாக 39% வரி விதிக்கிறது. அதில் சமையல் எண்ணெய்க்கு 45%, காபிக்கு 100% வரி விதிக்கப்படுகிறது. அதேநேரம் இந்தியாவின் வேளாண் பொருட்களுக்கு அமெரிக்கா வெறும் 5.3% வரி விதிக்கிறது. இங்குதான் பிரச்சினை ஆரம்பம் ஆகிறது. பரஸ்பர வரி விதிப்பால் அமெரிக்காவில் விலை உயரும். அதனால், மக்கள் அப்பொருள்களை வாங்குவதை குறைத்து அல்லது நிறுத்தி வேறு பொருள்களை தேடிச் செல்வார்கள். இதனால், பிற நாட்டு நிறுவனம் மட்டுமல்லாது அந்த நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படையும். இதனால் உலகப் பொருளாதார மந்தம் ஏற்படும்.
பரஸ்பர வரி விதிப்பால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மீன், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட கடல் உணவு வகைகள் மற்றும் கோதுமை போன்றவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள். கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியான வேளாண் பொருட்களில் மேற்சொன்ன பொருட்களின் பங்கு மட்டும் 46% ஆகும். அதுவே அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான பொருட்களில் பருப்பு வகைகள், காய்கறி எண்ணெய், கோகோ,சணல் மற்றும் பழவகைகளின் பங்கு கிட்டத்தட்ட 82% ஆகும்.
இறால் ஏற்றுமதி பாதிக்கும்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவு வகைகளில் ஒன்று இறால். ஆண்டுக்கு 9 லட்சம் டன் ஏற்றுமதியாகிறது. அதேபோல் ஈக்வடார் நாடும் அதிக அளவில் இறாலை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவுக்கான வரியைக் (27%) காட்டிலும் ஈக்வடாருக்கு குறைவான வரி (10%) விதிக்கப்பட்டுள்ளது. அதிக வரி காரணமாக நமது இறால் ஏற்றுமதியே பாதிக்கக் கூடும்.
அரிசி ஏற்றுமதி அதிகரிக்கும்: அமெரிக்காவுக்கு இந்தியாதான் அதிகளவு அரிசியை ஏற்றுமதி செய்கிறது. அதனைத் தொடர்ந்து முறையே தாய்லாந்து (36%) மற்றும் வியட்நாம் (46%) வருகிறது. நம்மைக் காட்டிலும் இவ்விரு நாடுகளுக்கும் அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதியை அமெரிக்கா அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேளாண் பொருட்களை பொறுத்தவரை இந்தியாதான் அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. அதனால் வர்த்தகத்தில் நாம்தான் மேலோங்கி இருக்கிறோம். எனினும் தற்போதைய வரி விதிப்பின் மூலம் நமது மேலோங்கியநிலைமை பாதிக்கக்கூடும். அதிலும் பாதாம், வால்நட்போன்ற பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஏற்கெனவே அமெரிக்காவின் பார்பான் விஸ்கி வகைக்கான வரியை 150-லிருந்து 100 சதவீதமாக இந்தியா குறைத்தது. வால்நட் மற்றும் சில பழ வகைகளுக்கு வரியை குறைக்க பரிசீலித்து வருகிறது.
அதேநேரம் பால் பொருட்கள், அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றுக்கு வரியை குறைக்க வழியில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது. மேலும் நம் நாட்டு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண் பொருட்களுக்கு பெரும்பாலும் இறக்குமதி வரியை இந்தியா அதிகமாகவே வைத்துள்ளது. பிற நாட்டின் நிர்பந்தத்துக்கு உட்பட்டு இறக்குமதி வரியை குறைத்தால் நமது விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
உலக வர்த்தக அமைப்பின் தரவுகள்படி, பால் பொருட்களுக்கு இந்தியாவின் சராசரி இறக்குமதி வரி 68.8%. ஆனால் அமெரிக்காவில் இது வெறும் 16.1% மட்டுமே. அதுவே பழம் மற்றும் காய்கறிகளுக்கு அமெரிக்கா சராசரியாக 5.4% வரி விதிக்கிறது. ஆனால் இந்தியா 103.4% வரி விதிக்கிறது. இதனால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களின் விலை சற்று அதிகமாக இருக்கிறது.
வேளாண் துறை வளரவில்லை: இருப்பினும் ட்ரம்பின் கோரிக்கைப்படி இந்தியாவால் வரிச் சலுகையை தர முடியாது. இன்னமும் நம் விவசாயம் மலிவான வேளாண் பொருட்கள் இறக்குமதிக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு வளரவில்லை. இதற்கான காரணம் நம் மக்கள் தொகையில் 65% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அதேவேளையில் அமெரிக்காவில் வெறும் 2% மக்கள் மட்டுமே விவசாயத்தை நம்பி உள்ளனர். மேலும் இந்தியாவை பொறுத்தவரையில் பெரும்பாலானவர்கள் சிறு, குறு விவசாயிகள். அத்துடன் வேளாண்மையின் உற்பத்தித் திறனும் குறைவு. இந்தியாவில் விவசாயிகளின் எண்ணிக்கை
அதிகமாக இருந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வேளாண்மையின் பங்கு வெறும் 15%. அதுவே அமெரிக்காவில் சராசரி குடும்பங்களைவிட வேளாண் குடும்பங்களின் வருமானம் அதிகம். எனவே இந்திய விவசாயத்தையும் அமெரிக்க விவசாயத்தையும் ஒரே மாதிரியாக அணுகக் கூடாது.
எனவே, பரஸ்பர வரி விதிப்பை எதிர்கொள்ளும் விதமாக இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் தயார்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். வேண்டுமானால் இரு நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் பொருட்களின் வரிகளை தேவைக்கு தகுந்தவாறு பாதிக்காத வகையில் நிர்ணயம் செய்யலாம் என்பதே தற்போதைக்கு சாத்தியப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment