Published : 24 Mar 2025 06:17 AM
Last Updated : 24 Mar 2025 06:17 AM
இந்தியாவில் தங்கம் என்பது ஒரு உலோகம் என்பதைவிட, இது செல்வம், பாரம்பரியம் மற்றும் நிதி பாதுகாப்பு ஆகியவற்றை ஒன்றாக இணைக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 2 மடங்கு உயர்ந்திருந்தாலும், கலாச்சார நடைமுறை மற்றும் முதலீடு என்ற வகையில் அதற்கான தேவை வலுவாக உள்ளது.
அதேநேரம், இந்தியாவில் தங்க நகை வணிகம் ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. பாரம்பரியமாக ஒரு சில குடும்பத்தினரால் நடத்தப்படும் கடைகளில் நகைகளை வாங்கி வந்த நுகர்வோர், இப்போது வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் தரப்படுத்தப்பட்ட விலையை வழங்கும் அமைப்பு சார்ந்த சங்கிலி தொடர் நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர்.
இதில் டைட்டனின் தனிஷ்க் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்றவை பிரீமியம் விலை, வலுவான பிராண்டிங் மற்றும் அதிக லாபம் வைத்து விற்பனை செய்தல் ஆகியவற்றின் மூலம் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தங்கமயில் ஜுவல்லரி வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.
அதிக எண்ணிக்கையில் விற்பனை, குறைவான லாபம் என்ற மாதிரியில் செயல்படும் தங்கமயில், நகைகளை விரைவாக விற்பனை செய்வது, செலவு குறைவான இடங்களில் கடைகளை அமைத்தல் மற்றும் போட்டி விலை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இது தமிழ்நாட்டின் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் தனது கடைகளை நிறுவி உள்ளது. அங்கு நகைகளுக்கான தேவை அதிகமாக உள்ளது. ஆனால் அங்குள்ள நுகர்வோர் அதிக விலையில் வாங்கத் தயங்குவார்கள். எனவே, நிர்வாக செலவுகளை குறைத்துக் கொண்டு, குறைவான லாபத்தில் நகைகளை விற்பனை செய்து வருகிறது. அதேநேரம் போட்டியாளர்களைவிட நகைகளை விரைவாக விற்பனை செய்வதன் மூலம் தங்கமயில் நிறுவனம் லாபம் ஈட்டி வருகிறது.
தங்கமயில் ஜுவல்லரி குறைவான லாபத்தில் இயங்கி வந்தாலும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு இப்போது 58 கிளைகளுடன் இயங்கி வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக சுமார் 30 கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. பிராண்ட் உணர்வு அதிகம் உள்ள நுகர்வோரைக் கொண்ட மெட்ரோ நகர சந்தையில் வெற்றி பெற முடியுமா என்பதை பரிசோதிக்கும் முயற்சியாக தங்கமயில் ஜுவல்லரி முதன்முறையாக சென்னை மாநகரில் தனது கடையை திறந்துள்ளது.
ஒரு வெற்றிகரமான நகை கடையை நடத்துவதற்கான மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று நகை கையிருப்பு மேலாண்மை ஆகும். தங்கம் என்பது ஒரு உள்ளீட்டு செலவு அடிப்படையிலானது மட்டுமல்ல, இது அவ்வப்போது விலை உயரக்கூடிய சொத்து ஆகும். நகை விற்பனை குறைவாக இருந்தால் மூலதனம் முடங்கவும், கடன் சுமை அதிகரிக்கவும் வழிவகுக்கும். மேலும் கணிக்க முடியாத விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாக நேரிடும்.
பல நகைக் கடைக்காரர்கள், குறிப்பாக கோடீஸ்வரர்களுக்கான நகை (பிரீமியம்) விற்பனையில் ஈடுபடுகிறவர்கள், நீண்ட காலத்துக்கு நகைகளை இருப்பு வைத்திருக்கிறார்கள். திருமணங்கள் மற்றும் பண்டிகைகள் உள்ளிட்ட பருவகால தேவை அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்து இப்படி செய்கிறார்கள்.
இருப்பினும், இந்த உத்தியானது, மூலதனத்தை முடக்குவதுடன் விலை ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிடுகிறது. ஆனால் தங்கமயில் வித்தியாசமான அணுகுமுறையை கடைபிடிக்கிறது. அதாவது பருவகால தேவைகள் மற்றும் பிரீமியம் பிரிவினரை நம்புவதற்கு பதிலாக, விரைவாக தங்க நகைகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் அதிக அளவில் நகைகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு மூலதனத்தை முடக்குவதைவிட, விரிவாக்கம் மற்றும் மறுமுதலீட்டில் தங்கமயில் கவனம் செலுத்துகிறது. கையிருப்பு நகைகளை திறமையாக நிர்வாகம் செய்வதால் மூலதன செலவு குறைகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைவான செய்கூலியில் போட்டி விலையில் நகையை வழங்க முடிகிறது.
தமிழகத்தின் பங்கு 40% - இந்தியாவின் மிகப்பெரிய நகைச் சந்தைகளில் ஒன்றான தமிழ்நாடு, நாட்டின் மொத்த தங்கத் தேவையில் கிட்டத்தட்ட 40% பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்தத் தேவையின் பெரும்பகுதி அமைப்புசாரா கடைகள் மற்றும் பாரம்பரிய நகைக் கடைக்காரர்களால் பூர்த்தி செய்யப்படுகிறது.
அவர்கள் நம்பிக்கை மற்றும் நீண்டகால வாடிக்கையாளர் உறவின் அடிப்படையில் பல தசாப்தங்களாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கு நடுவே, ஹால்மார்க் சான்றிதழ், வெளிப்படையான விலை மற்றும் சிறந்த மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றை விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருவதால் தங்கமயில் போன்ற அமைப்புசார் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன.
தேசிய அளவிலான சில பிராண்டுகள் மெட்ரோ நகரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆனால், தங்கமயில் 2 மற்றும் 3-ம் நிலை சிறிய நகரங்களில் தங்கள் கடையை அதிக அளவில் நிறுவி வருகின்றன. இத்தகைய நகரங்களில் தேவை அதிகமாக இருந்தபோதிலும், அமைப்புசார்ந்த நகைக் கடைகள் குறைவாகவே உள்ளன. மெட்ரோ நகரங்கள் லாபகரமானவை என்றாலும், அங்கு பிரீமியம் பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்துவதால் போட்டி கடுமையாக இருக்கும்.
அதேநேரம், சிறிய நகரங்களில் செயல்பாட்டு செலவு குறைவாக இருப்பதுடன், தங்க நகை நுகர்வு அதிகமாக இருக்கும். இதுதவிர, பிரீமியம் பிராண்ட்களின் போட்டி குறைவாக இருக்கும். எனவேதான் சிறிய நகங்களில் தங்கமயில் கவனம் செலுத்துகிறது.
இத்தகைய சந்தைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், தங்கமயில் ஒரு வலுவான உள்ளூர் பிராண்ட் அடையாளம் மற்றும் வாடிக்கையாளர் விசுவாசத்தை உருவாக்கியுள்ளது.
சிறிய நகரங்களில் விளம்பரம், கட்டிடங்களுக்கான செலவு குறைவு என்பதால் கடைகளை வேகமாக விரிவாக்கம் செய்ய முடிகிறது. இது காலப்போக்கில் ஒவ்வொரு கடையையும் அதிக லாபகரமானதாக மாற்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment