Last Updated : 09 Jul, 2018 12:28 PM

 

Published : 09 Jul 2018 12:28 PM
Last Updated : 09 Jul 2018 12:28 PM

சபாஷ் சாணக்கியா: காரணம் ஆயிரம்...

`எதற்கெடுத்தாலும் காரணம் தேடிக் கொண்டிருப்பவன் என்றுமே தலைவன் ஆக முடியாது’ என்கிறார் சாணக்கியர். அதாவது இது இயலுமா, முடியுமா என்றெல்லாம் தயங்கிக் கொண்டும், பயந்து கொண்டும் இருக்காமல், முனைப்புடன் வேலையில் இறங்கி விடுபவனுக்கே வெற்றி என்கிறார்.

நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவம். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு நம் தமிழ்நாட்டில் காமராஜர் எனும் கர்ம வீரர் முதல் அமைச்சராக மக்கள் பணியாற்றிய காலம். சென்னையில் சில நெருக்கடி மிகுந்த முக்கியச் சாலைகளில் சுரங்கப் பாதை அமைக்க எண்ணினாராம். அதற்குரிய அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடைபெற்றதாம்.

அப்பொழுது சில அதிகாரிகள் சுரங்கப் பாதை கட்டினால், மண் சரியும், தண்ணீர் தேங்கும் என்று வரிசையாகப் பல தடங்கல்கள் சொன்னார்களாம். பொறுமை இழந்த காமராசர், `என்னங்கரேன், சுரங்கப் பாதை கட்ட வழி சொல்லுங்கண்ணா, நீங்க பாட்டுக்கு கட்டாம இருக்கிறதுக்கு காரணம் காரணமாகச் சொல்லிக்கிட்டே போறீங்களே’ என்று கோபித்துக் கொண்டாராம்.

அவரா இதற்கெல்லாம் குழம்புபவர்? `ஆகட்டும் பார்த்துக்கலாம்’ ஆளாயிற்றே அவர்? சுரங்கப் பாதைகள் அமைக்கப் பெற்று மக்கள் பலன் பெற்றது பின்கதை.

இது போல எந்தக் காரியத்தைச் செய்யணும் என்றாலும் அது ஏன் முடியாது என்று சொல்லிவிட்டு, ஏதோ பெரிதாய்ச் சாதித்து விட்டதைப் போல மகிழ்பவர்கள் பலரை நீங்களும் பார்த்து இருப்பீர்கள். இந்த `அனுகூல சத்ருக்களை’ கூட வைத்துக் கொண்டால், அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தால் எதுவும் நடந்த மாதிரிதான்.

`தோல்வி அடைபவர்களில் 99% பேர், நொண்டிச் சாக்குகள் சொல்லும் வழக்கம் உடையவர்களாகவே இருப்பார்கள்’ என்கிறார் பல வேளாண் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியான வாஷிங்டன் கார்வர் .

காமராஜர் கை காட்டியவர்களே நம் பிரதம மந்திரி ஆகிய காலகட்டம் அது. அவரைப் பற்றிய இன்னுமொரு செய்தியும் சொல்வார்கள். தமிழ் நாட்டைத் தொழில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும், வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்திருக்கிறார் அந்தப் பெருந்தலைவர்.

BHEL நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை ஒன்றைத் தமிழ் நாட்டில் அமைக்க வேண்டுமென்றும் அதற்குப் பொருத்தமான ஊரைச் சொல்லுங்கள் என்றும் அதிகாரிகளைக் கேட்டிருக்கிறார். அவர்களோ தமிழ் நாட்டின் நகரங்களை ஒன்று ஒன்றாய்ச் சொல்லி அங்கெல்லாம் என்ன என்னப் பிரச்சினைகள் எனப் பட்டியலிட்டார்களாம்.மேலும் அவ்வளவு பெரிய புதுத் தொழிற்சாலை இங்கு அமையத் தோதான இடம் இல்லை எனும் எண்ணம் உருவாக்கப்பட்டதாம். ஆனால், பின்னர் காமராஜரே நம் மாநிலத்தின் நடுவில் அமைந்திருக்கும் திருச்சி அதற்கு பல்வேறு வகைகளில் பொருத்தமாக இருப்பதை எடுத்துச் சொன்னாராம். அதனால் அந்நிறுவனம் திருச்சி அருகில் 1964ல் துவங்கப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வருவது வரலாறு.

`உங்கள் சக்திகளைக் காரணம் தேடுவதில் வீணடிக்காமல் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடுவதில் செலவழியுங்களேன்’ என வில்லியம் ஆர்தர் வார்ட் எனும் எழுத்தாளர் சொல்வதைச் சிந்தியுங்கள். எனது உறவினர் ஒருவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெங்களூருவில் பணிபுரிகிறார். சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இந்தியா என 18 நாட்டு அலுவலகங்களின் நிதிப் பொறுப்புகள் அவரிடம். அவரது அனுபவங்களைக் கேட்டால் நல்ல படிப்பினையாக இருக்கும்.

காணொளிக் கருத்தரங்கு இந்திய நேரம் பகல் 11 மணிக்கு என்றால் 11.01க்குத் தொடங்கினால் கூட ஜப்பானியர்கள் தவறு என்பார்களாம். மின்னஞ்சல் மதியம் 12 மணிக்கு அனுப்புகிறோம் என்று சொல்லியிருந்தால், 15 நொடிகள் தாமதித்தாலும் விளக்கம் கேட்பார்களாம். சும்மா தாமதமாகிவிட்டது எனச் சொல்லி நழுவ முடியாதாம். ஏன், எப்படி, என எல்லா விபரங்களும் சொல்லணுமாம்.வேலையில், நேரத்தைக் கடைப்பிடிப்பதில் அப்படி ஓர் ஒழுங்குமுறை.

`சாக்குச் சொல்வதில் பெரிய கெட்டிக்காரனாய் இருப்பவன், வேறு எதிலும் கெட்டிக்காரனாய் இருக்க மாட்டான்’ என அமெரிக்கத் தேசியத் தலைவர் பெஞ்சமின் பிராங்க்ளின் சொல்வது உண்மை தானே?

நான் வங்கியில் பணிபுரிந்த பொழுது பல `if and but’ குமார்களை பார்த்து இருக்கிறேன். அதாங்க, நாம் எந்த வேலையைக் கொடுத்தாலும், அதை முடிப்பதற்கு, அவர்கள் நமக்கே நிபந்தனைகளைப் போடுவார்கள்.

`வாராக்கடனை வசூலித்து விட்டு வாப்பா’ என்றால், `எனக்கு நல்ல ஆளா 4 பேர் கொடுத்திங்கன்னா முடிச்சிடுவேன்’ என்பார்கள். ஆனால் நம்மால் அப்படிக் கொடுக்க முடியாதே. இருக்கிற நல்ல ஆளையெல்லாம் அவரோடு அனுப்பி விட்டால் மற்ற வேலைகளை யார் பார்ப்பார்கள்? மொத்தத்தில் அவரால் அந்த வேலை முடியாது.

சாணக்கியர் சொல்வது போல, சாக்குப் போக்குச் சொல்பவனால் ஒன்றும் சாதிக்க முடியாதில்லையா?

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x