Last Updated : 30 Jul, 2018 09:53 AM

 

Published : 30 Jul 2018 09:53 AM
Last Updated : 30 Jul 2018 09:53 AM

சபாஷ் சாணக்கியா: விமர்சனங்களுக்குப் பயந்தால்...

எனது நண்பர் ஒருவர். பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுத் துறை வங்கி ஒன்றில் அதிகாரியாய் சேர்ந்தார். நான்கு ஆண்டுகளில் கிளை மேலாளர் ஆகி விட்டார். மனிதன் மகா சுறுசுறுப்பு.

வேலை செய்ய பயப்படவே மாட்டார். அவரது வேலை பார்க்கும் பாணியே தனி. மற்றவர்கள் செய்யத் தவிர்க்கும், தயங்கும், தள்ளிப்போடும் பணிகளை  இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்.

வங்கிகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரிந்து இருக்கும் வங்கிக் கிளையில் பழைய ரெக்கார்டுகளை குறிப்பிட்ட காலத்திற்குச் சட்டப்படி வைத்திருக்க வேண்டும்.அதற்குப் பிறகு அவற்றை அழித்து விடுவார்கள்.பின்னே என்னங்க?  50,60 வருடத்திற்கு சேர்த்து வைத்துக் கொண்டால், தூசிதான் சேரும், வேண்டியதைத் தேடுவதும் கடினம், அநாவசியமாக இடத்தை அடைத்துக் கொள்ளும்.வாடகையும் வீண்.ஆனால் நடைமுறை உண்மை என்னவென்றால், இதையெல்லாம் யாரும் செய்ய முற்பட மாட்டார்கள். நம்ம நண்பர் அப்படியல்ல.அவருக்கு இந்த மாதிரி ஒழுங்கு செய்வது மிகவும் பிடிக்கும்.

அவரை எந்தக் கிளைக்கு இடமாற்றம் செய்தாலும் அந்தக் கிளைக்குப் புனர் வாழ்வுதான்.தன் பணியை ஓரிரு வாரங்களில் தொடங்கி விடுவார். முதலில் தேவையற்ற வங்கிப் புத்தகங்களை அழிப்பது, அப்புறம் கட்டடத்திற்குச் சுண்ணாம்பு அடிப்பது, கவுண்டர்களை வாடிக்கையாளர்கள் சௌகரியத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைப்பது என ஒவ்வொன்றாய்ச் செய்வார்.

இச்செயல்களை எல்லோரும் பாராட்டி இருப்பார்கள் என நினைக்கின்றீர்களா? அதுதான் இல்லை. எதிலும் குற்றம் கண்டுபிடித்து எதையும் குறை சொல்லும் `என்னத்தைக் கண்ணைய்யாக்கள்’ அங்கும் சிலர் இருந்தார்கள்.

`இதெல்லாம் பண விரயம். இதனால் கிளையின் வர்த்தகம்  கூடி விடுமா? சும்மா ஷோ காட்டுகிறார்’ என்று விமர்சித்தவர் சிலர். வேறு ஒருவரோ, `மற்றவர் செய்யாததை இவர் செய்கிறார் என்றால் காரணம் இல்லாமல் இருக்குமா? சோழியன் குடுமி சும்மா ஆடுமா? இதில் ஏதாவது மறைமுகப் பயன் இருக்கும்.

ஒப்பந்தக்காரர்களிடம் கமிஷன்தான். வேறென்ன?' என வாய்கூசாமல் பழி சுமத்தினார்.

`விமர்சனங்களே கூடாதென்றால், எதுவும் செய்ய முடியாது, எதுவும் பேச முடியாது, ஏன், இருக்கவே கூட முடியாது ' என அமெரிக்க எழுத்தாளர் எல்பர்ட் ஹப்பர்ட் சொல்வது உண்மை தானே? அதே கொள்கை உடையவர் தான் நம்ம நண்பரும்.

வங்கிகள் கணிணி மயமாக்கப்படாத காலம் அது.வங்கிக் கணக்குகளை எழுத்தர்களும் அதிகாரிகளும்தான் கூட்டிப் பார்க்கணும், சரி செய்யணும். Balancing of ledgers என்பது ஒரு  மெனக்கெட வைக்கும், எரிச்சல் மூட்டும் வேலை. நம் நண்பரின் கவனம் அடுத்து இதில் தான் திரும்பும். வங்கியில் மோசடி நடந்திருந்தால் இதன் மூலம் தெரிய வரும்.

உதாரணமாக ஒருவரது சேமிப்புக் கணக்கில் ரூ.5000 இருக்கிறது என்றால் ரூ.40,000 எடுக்க முடியாதில்லையா? மோசடி செய்பவர்கள் ரூ.5,000 க்குப் பதிலாக ரூ.50,000 இருப்பது போலவும், ரூ.40,000 எடுத்தது போக ரூ.10,000 மீதம் இருப்பது போலவும் காட்டி இருப்பார்கள். இது போன்றவை balancingல் வெளிவந்துவிடும்.

எனவே அந்த வேலையை நண்பர் ஆரம்பித்தவுடன் அத்தகைய மோசடிப் பேர்வழிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. `இந்த ஆளுக்கு வேறு வேலை கிடையாதா? கிளையின் வளர்ச்சிக்கு லட்சங்களில் டெபாஸிட் வாங்காமல், ஐயாயிரம் பத்தாயிரத்திற்குப் பழசை நோண்டிக்கிட்டு இருக்கிறார் எனக் கேலி பேசுவார்கள்.

ஆனால் நண்பர் கருமமே கண்ணாக இருப்பார். `நான் எவ்வளவுக்கெவ்வளவு விமர்சிக்கப்படுகிறேனோ அவ்வளவுக்கவ்வளவு வெற்றி கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் என்னுள் அதிகரிக்கிறது. நான் மேலும் கடுமையாக முயற்சிக்கத் துவங்கி விடுகிறேன்’ எனச் சொல்லும் கொரியப் பாடகர் ஜங் ஜிஹூன் வகையைச் சேர்ந்தவராயிற்றே நண்பர்.

அவரது முயற்சிகளுக்கு விரைவில் பலன் கிடைத்தது. பல வருடங்களாகச் சரி செய்யப்படாமல் இருந்த கணக்குப் புத்தகங்கள் சரி செய்யப்பட்டன. பல நாட்களாக நடந்து கொண்டிருந்த ஓரிரு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தன. அதைச் செய்தவர்கள் பிடிபட்டனர். அவர்கள் வேறு யாரும் இல்லை.

நண்பர் செய்வதெல்லாம் தேவையற்றது என்று கூக்குரலிட்டவர்களே தான்.

பழைய கணக்குப் புத்தகங்கள் போனதும் இடம் காலி ஆயிற்று. அங்கே உட்கார்ந்து அரட்டை அடிப்பது நின்று விட்டது. மொத்தத்தில் இடம் சுத்தமானது. மன அழுக்கு உள்ளவர்களுக்கும் அக்கிளையில் இடம் இல்லாமல் போனது. அப்புறம் என்ன? வர்த்தகம் பெருகியது. பிறகு எல்லாம் சுகமே.

`ஒரு அரசன் வலிமை அடைந்து   நாட்டினைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால், திருடர்கள், தீவிரவாதிகள் மற்றும் தேசத் துரோகிகளுக்கு சூழலின் வெப்பம் பிடிக்காது;  சமூகத்தில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது எனப் புகார் கூறுவார்கள்’ எனச் சாணக்கியர் சொல்வது இன்றைய அலுவலகங்களுக்கு பொருந்துகிறதல்லவா?

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x