Last Updated : 25 Oct, 2024 05:44 PM

 

Published : 25 Oct 2024 05:44 PM
Last Updated : 25 Oct 2024 05:44 PM

ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாக் கனியாக மாறிய தங்கம்!

கோவை: உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கோவையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.60 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது.

கரோனா தொற்று பரவலுக்கு பின் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்தது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.4 ஆயிரம் வரை விலை குறைந்தபோதும் மறுபுறம் உலக சந்தை நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் தங்க ஆபரணங்கள் வாங்கவிரும்பும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது: ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நடைபெற்றுவரும் போர், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது, உலக சந்தையில் தங்கத்தின் அதிக முதலீடுகள் செய்யப்படுவது ஆகிய காரணங்களால் இந்திய சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பால், அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதற்கேற்ப தனிநபர் வருமானம் உயரவில்லை. செலவினங்கள் அதிகம் தொடர்வதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பணத்தை சேமிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கோவையில் அக்டோபர் 24-ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் விலை ரூ.60,600-க்கு (ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் சேர்த்து)விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்திருக்காவிட்டால் இன்று ஒரு சவரன் ரூ.65 ஆயிரமாக உயர்ந்திருக்கும். அரசு சார்பில் செய்யக்கூடிய உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன.

உலக சந்தையில் ஏற்படும் தாக்கத்தால் இந்தியாவில் விலை உயர்வதை கட்டுப்படுத்துவது சிரமம். இந்நிலை தொடர்ந்தால் டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு சவரன் தங்கத்தின் விலை மேலும் ரூ.2 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்கள் போனஸ் பெற்றபோதிலும் பெரும்பாலான ஏழை, நடுத்தர குடும்பங்களில் ஏற்கெனவே வங்கி கடன் மற்றும் நிலுவை வைத்துள்ள மளிகை பாக்கி உள்ளிட்ட கடன்களை அடைப்பதற்கே அந்த தொகை பயன்படுகிறது.

இதனால் போனஸ் பெற்றாலும் துணி, பட்டாசு, இனிப்பு வாங்கவே மக்கள் அவற்றை செலவிடுகின்றனர். இதனால் தங்க நகை வாங்க போனஸ் பயனளிப்பதில்லை. முன்பு 6 மாதங்கள் சேமித்து தங்கம் வாங்கியவர்கள் தற்போது உள்ள விலைவாசி காரணமாக 10 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் சேமிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எதிர்வரும் காலங்களில் அடித்தட்டு மக்களுக்கு தங்கம் வாங்க வேண்டும் என்பது எட்டாக் கனியாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x