Published : 25 Jun 2018 10:53 AM
Last Updated : 25 Jun 2018 10:53 AM
`ஆசிரியர், தலைவர், நண்பன், அறிவாளி, முட்டாள் ஆகியோரிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள் ' என்கிறார் சாணக்கியர். ஐயா, நம்மில் பலருக்கு இந்த வாக்குவாதம் மிகவும் பிடித்தமான ஒன்று இல்லையா? எதிரில் இருப்பவர் யாராக இருந்தால் என்ன? சும்மா நமக்குத் தெரிந்ததை எல்லாம் எடுத்து விடுவோம்ல? அதனால் தானோ என்னவோ, நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், தனது இந்தியத் தத்துவ வரலாற்றுக் கட்டுரைகளின் தொகுப்பிற்கு, `வாதிடும் இந்தியன்' ( The argumentative Indian) என்றே பெயர் வைத்து விட்டார்!
`கலந்தாய்வு என்பது அறிவின் பரிமாற்றம்; வாக்குவாதமோ அறிவின்மையின் பரிமாற்றம் ' என்று ராபர்ட் குயில்லென் எனும் அமெரிக்க பத்திரிகையாளர் சொல்வது உண்மைதானே? ஒரு குட்டிக்கதை. அரசன் ஒருவன் சில வித்தைகளைக் கற்றுக் கொள்ள விரும்பினான். அமைச்சரைக் கேட்டதற்கு, `அருகில் உள்ள வனத்தில் வசித்து வரும் ஒரு பழுத்த முனிவரே அதில் கை தேர்ந்தவர் . ஆனால் அவர் இங்கு வரமாட்டார். அவர் இருக்கும் இடத்திற்கு நீங்களே போய்த் தான் கற்க வேண்டியதிருக்கும்' என்றார். அரசன், மறுநாளே தனது சேனை பரிவாரங்களுடன் வனத்திற்குச் சென்றான்.முனிவரைச் சந்தித்து, தனது கோரிக்கையை வைத்தான். ஆனால் முனிவரோ, `நான் செத்த பின்தான் உன்னால் வித்தைகளைக் கற்றுக் கொள்ள முடியும்' என்று சொல்லி விட்டார்.
மன்னனுக்கு ஒரு பக்கம் வருத்தம். மறுபக்கம் குழப்பம். முனிவர் செத்த பின் எவ்வாறு எதையும் தான் கற்றுக் கொள்ள முடியும் எனப் புரியாது தவித்தான். காட்டிலேயே இரவெல்லாம் தங்கி, மறுநாள் மீண்டும் முனிவரைச் சந்தித்துத் தனக்கு அவ்வித்தைகளைக் கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டான். முனிவர் அரசனை ஏற இறங்கப் பார்த்தார். அரசனுடன் வந்திருந்த வீரர்களை ஒவ்வொருவராய் நிதானமாய் நோட்டமிட்டார். லேசாயப் புன்முறுவல் பூத்தார். முனிவர் மீண்டும், `நான் செத்த பின்தான் உங்களால் எதையும் கற்றுக் கொள்ள முடியும்' எனச் சொல்லி மறுத்து விட்டார்.
மிகவும் வருத்தமடைந்த அரசன் நாடு திரும்பி, அமைச்சரிடம், `இதென்ன பைத்தியக்காரத்தனம். முனிவர் செத்த பின் எனக்கு அவரால் எப்படி எதையும் கற்பிக்க முடியும்? ' எனக் கேட்டான். மந்திரி யோசித்தார், பின்னர், `அரசே, தாங்கள் முனிவரிடம் ஒரு மாணவரைப் போல் எளிமையாகச் செல்லாமல், அரச பரிவாரங்களுடன் படாடோபமாகச் சென்றீர்கள். அந்த `நான்' எனும் அகம்பாவம் செத்த பின்தான் உங்களால் கற்க முடியும் என்பதைத் தான் முனிவர் அறிவுறுத்தி உள்ளார்.' என விளக்கினார்.
ஐயா, யாருக்கும் அவருக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டுமில்லையா? ஆளானப்பட்ட சிவபெருமானே, தன் பாலகன் முருகனிடம் , பிரணவத்தின் பொருள் கேட்ட பொழுது, பவ்யமாகக் கேட்டுக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. ஆசிரியரிடம் பேசுகிற பொழுது, நமது மேதாவிலாசத்தைக் காட்டக் கூடாதல்லவா?
அடுத்தது தலைவர். அலுவலக மேலதிகாரியிடம் போய் யாராவது வாக்குவாதம் செய்வார்களா? அவர் சொல்வது தவறாக இருந்தாலும் ,பவ்யமாகச் சொல்லிவிட்டு விலகணுமே தவிர ,அதிகப் பிரசங்கித்தனம் கூடாதில்லையா?
`ஒரு வாக்குவாதத்தின் அதிக பட்சப் பலன் கிடைப்பதற்கான வழி , அதைத் தவிர்த்து விடுவது தான்' என்கிறார் எழுத்தாளர் டேல் கார்னிஜி.
அடுத்தது நண்பர்கள். அண்ணே, நீங்களே சொல்லுங்கள். நட்பு பெரிதா, உங்கள் நண்பரை பேச்சில் வெல்வது பெரிதா? சந்தைப்படுத்துதலில் `வாடிக்கையாளர் சொல்வதுதான் எப்பவுமே சரி' (Customer is always right) என்று ஒரு கோட்பாடு உண்டு. அந்தக் கொள்கை நண்பர்களுக்கும் பொருந்தும். `ஒரு தர்க்கத்தின் நோக்கம் முன்னேற்றமாக இருக்க வேண்டுமே தவிர, எதிராளியை வெற்றி கொள்வதாக இருக்கக் கூடாது ' எனப் பிரெஞ்சுக் கட்டுரையாளர் ஜோஸப் ஜோபர்ட் சொல்வது சரி தானே?
சரி, அறிவாளியிடம் ,மெத்தப் படித்தவனிடம் வாதிட்டு வெல்ல முடியுமா? அவர் மகா கெட்டிக்காரர் என்றால், நாம் சொல்வது எப்படி எடுபடும்? சும்மா வீம்புக்காக மல்லுக்கட்டி நம்ம பெயரைக் கெடுத்துக்கலாமா? '
ஒவ்வொரு வாக்குவாதத்திற்குப் பின்னும் வாதிப்பவரின் அறியாமை இருக்கும்' என அமெரிக்க நீதிபதி லூயிஸ் பிராண்டிஸ் சொல்வது பொருள் பொதிந்தது.
கடைசியில் முட்டாள்களிடமும் வாதாடாதீர்கள் என்கிறார் சாணக்கியர். `அவன் முட்டாள்தானே,வாதிட்டு மடக்கி விடலாம்’ என முட்டாள்தனமாக எண்ணி விடாதீர்கள்! முட்டாளால் என்ன வேண்டுமானாலும் பேச முடியும். உங்களால் முடியுமா? சிறிது நேரம் சென்றால், பார்ப்பவர்களுக்கு யார் முட்டாள் என்ற சந்தேகம் வரும்.
சற்றே சிந்தியுங்கள். சாணக்கியர் இந்த ஐவருடனும் விவாதம் வேண்டாம் என்று வேறு வேறு காரணங்களால் சொல்கிறார். ஆனால் பாதிப்பு ஒரே மாதிரி வாதிடுபவருக்குத்தான் என்கிறார். சாணக்கியர் சொல் மந்திரம் அல்லவா!
-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT