Published : 02 Sep 2024 06:19 AM
Last Updated : 02 Sep 2024 06:19 AM
ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி 19 | தமிழ்நாட்டில் தற்சமயம் 9,000 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. 2020-ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை வெறும் 2,000. மூன்றே ஆண்டுகளில் 4 மடங்கு உயர்வு என்பது மட்டுமல்ல, இந்திய அளவில் ஸ்டார்ட்அப் சார்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலமாகவும் தற்போது தமிழ்நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது. மிகக்குறுகிய காலகட்டத்தில் இந்த மாற்றத்தை சாத்தியப்படுத்திய காரணிகளில் ஒன்று ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’.
இந்தியாவில் 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, இகாமர்ஸ், ஃபின்டெக், கல்வி, மருத்துவம் என பல தளங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாகத் தொடங்கின. ஆனால், அவை பெரும்பாலும் மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களை மையப்படுத்தி இருந்தன. இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழலை ஏற்படுத்த திட்டமிட்ட திமுக அரசு, 2022-ம் ஆண்டு ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ அமைப்பை உருவாக்கியது.
இந்த அமைப்பை நிர்வகிக்க தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்த நபர் சிவராஜா ராமநாதன். சிவராஜா மதுரையைச் சேர்ந்தவர். தன்னுடைய 21-வது வயதில், நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் கணினி விற்பனையகத்தைத் தொடங்கியவர், படிப்படியாக மொபைல்போன் டீலர்ஷிப், மென்பொருள் உருவாக்கம் என பல தளங்களில் நிறுவனங்கள் தொடங்கி செயல்பட்டுவந்தார்.
தன்னுடைய தொழில் பயணத்தில், பெருநகர தொழில் முனைவோருக்கு கிடைக்கும் வாய்ப்புகள், இரண்டாம், மூன்றாம் கட்ட நகர தொழில் முனைவோர்களுக்கு கிடைப்பதில்லை என்பதை உணர்ந்த அவர், அத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் நோக்கில் 2012-ம் ஆண்டு ‘நேட்டீவ் லீட்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இளைஞர்களிடையே தொழில்முனைவு சிந்தனையை உருவாக்குவது, தொழில்முனைவு ஐடியாவில் இருப்பவர்களுக்கு அடுத்த கட்டம் செல்வதற்கு வழிகாட்டுவது, நிதி திரட்ட களம் ஏற்படுத்தித் தருவது, ஸ்டார்ட்அப் கூட்டங்கள் நடத்துவது என ஒரு அரசு செய்ய வேண்டியதை தன்னுடைய அமைப்பு வழியாக அவர் செய்துவந்தார்.
ஸ்டார்ட்அப் சூழல் உருவாக்கம் சார்ந்து சிவராஜா மேற்கொண்டுவந்த முன்னெடுப்புகளை கவனித்த தமிழ்நாடு அரசு, தான் ஏற்படுத்திய ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ அமைப்புக்கு அவரையே தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்தது. இன்று தமிழ்நாட்டின் ஸ்டார்ட்அப் கட்டமைப்பில் முக்கிய முகமாக சிவராஜா அறியப்படுகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், கணினி விற்பனை வழியே தன் தொழில் செயல்பாட்டை தொடங்கியவர், தமிழ்நாடு அரசின் முக்கியமான அமைப்பின் சிஇஓ-வாக உருவெடுத்த பயணத்துக்கு பின்னால் இருக்கும் கதை என்ன? அவருடன் உரையாடினேன்.
பள்ளிப் பருவத்தில் உங்கள் உலகம் என்னவாக இருந்தது? - என்னுடைய பள்ளிப் பருவம் கலவையான அனுபவங்கள் நிறைந்தது. எங்கள் பூர்வீகம் மதுரை. பிரிட்டிஷ் ஆட்சியின்போது, என்னுடைய தாத்தா மதுரை சுற்றுவட்டப் பகுதியிலிருந்து வேலையாட்களை இலங்கை தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று நிர்வகித்து வந்தார்.
இதன் தொடர்ச்சியாக, என்னுடைய பெற்றோர், இலங்கையில் குடியேறினர். நான் 10-ம் வகுப்பு வரையில் இலங்கையில்தான் படித்தேன். நன்றாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில், திடீரென்று தலைகீழ் மாற்றம் நிகழ்ந்தது. 1983-ல் இலங்கை இனக் கலவரத்தின்போது, தமிழர்கள் என்பதால் எங்கள் சொத்துகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டன.
இனி அங்கு வாழ முடியாது என்ற சூழல் உருவானது. இதைத் தொடர்ந்து எங்கள் குடும்பம் மீண்டும் மதுரைக்கு வந்தது. எனக்கு அப்போது 14 வயது. மதுரையில் எங்களுக்கென்று எதுவும் இல்லை. வாழ்க்கையை முதலிலிருந்து தொடங்க வேண்டியதாக இருந்தது. இந்த மாற்றம் மனரீதியாக என்னுள் ஆழ்ந்ததாக்கத்தை ஏற்படுத்தியது. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.
தொழில்முனைவை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்? - 1990-ல் நான் கல்லூரி படிப்பை முடித்தேன். அந்த சமயத்தில் வேலையின்மை தீவிரமாக நிலவியது. அப்போதுதான் கணினியும் அறிமுகமாகத் தொடங்கியது. கணினி பயின்றால் நல்ல வேலையில் சேர முடியும் என்று சொன்னார்கள். இதனால், நானும் என் நண்பனும் எங்கள் ஊரில் இருந்த கணினி பயிற்சி நிலையத்தில் சேர்ந்தோம். என் அப்பா ஒரு காந்தியவாதி. தீவிர வாசிப்பு பழக்கம் உடையவர்.
அவர் வழியாக எனக்கும் வாசிப்பு அறிமுகமானது. கணினி வகுப்புக்கான நேரம் போக மற்ற நேரங்களில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைப் படிப்பேன். அப்போது எழுத்தாளர் எம்.எஸ். உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’ புத்தகம் எனக்கு அறிமுகமானது. அவரது புத்தகங்கள் இளைஞர்கள் சொந்தமாக தொழில் செய்து சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துபவை.
அவரது புத்தகங்களால் ஈர்க்கப்பட்டுதான் இயக்குநர் கே.பாலச்சந்தர் ‘உன்னால் முடியும் தம்பி’ திரைப்படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் கமல் பெயர் உதயமூர்த்தி. அவரது புத்தகங்கள் என்னுள் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் ஊட்டியதோடு தொழில்முனைவுச் சிந்தனையையும் ஏற்படுத்தியது. அதுவரையில், புலம்பெயர்ந்தவர்களுக்கே உரிய தயக்கத்தில் இருந்துவந்த நான், சொந்தமாக தொழில் தொடங்கும் முடிவுக்கு வந்தேன். என்னுடன் கணினி பயின்ற நண்பர்கள் சிலருடன் கலந்தாலோசித்தேன். அவர்களும் தொழில்முனைவு எண்ணத்தில் இருந்தனர். “இனி கணினி பரவலான பயன்பாட்டுக்கு வரப்போகிறது.
கணினிகளை வாங்கி விற்கலாமே” என்று முடிவு செய்தோம். அப்போது ஒரு கணினியின் விலை, ரூ.1.25 லட்சம். ஆளுக்கு ரூ.25 ஆயிரம் போட்டு ஒரு கணினி வாங்கி நிறுவனத்தை ஆரம்பித்தோம். நல்ல வருமானம் கிடைத்தது. படிப்படியாக, பேக்ஸ் மிஷின், பேஜர் விற்பனையில் இறங்கினோம். மொபைல் டீலர்ஷிப்பும் எடுத்தோம்.புதிய தொழில்நுட்பங்கள் உலகை மாற்றப் போகின்றன என்பதை உணர்ந்திருந்தேன். அதன் அடிப்படையிலேயே எனது அடுத்தடுத்த தொழில் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டேன்.
தொழிலில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நீங்கள், எந்தப் புள்ளியில் ‘நேட்டிவ் லீடு’ அமைப்பை உருவாக்க முடிவு செய்தீர்கள்? - முதல் பத்தாண்டுகள் எங்களுடைய தொழில்கள் அனைத்தும் டீலர்ஷிப்பாகவே இருந்தன. 2000-க்குப் பிறகு மென்பொருள் உருவாக்கத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அப்போதுதான் என்னை சுற்றி இருந்த போதாமைகள் எனக்கு புலப்பட்டன.
பெரும்பாலான மென்பொருள் சார்ந்த நிறுவனச் செயல்பாடுகள் பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களை மையப்படுத்தி இருந்தன. நல்ல ஊழியர்களை வேலைக்கு எடுப்பது முதல் நிதி திரட்டுவது வரையில் பெருநகரங்களுக்கும் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் அவ்வளவு ஏற்றத்தாழ்வு இருந்தது.
இதனால், நான் சில சறுக்கல்களைச் சந்தித்தேன். இன்னொரு பக்கம், வெவ்வேறு தொழில்கள் வழியேநல்ல வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தாலும், என் இலக்கு குறித்து தெளிவு இல்லாமல் ஒருவித வெறுமையை எதிர்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 40. ஒரு மனிதனின் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் இல்லையா அது. அர்த்தப்பூர்வமாக எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. இதனிடையே நண்பர் ஆழிசெந்தில்நாதன் மூலம் அண்ணா, பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அது சமூகம் குறித்த என் பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
என் துறை சார்ந்து சமூகத்தை மேம்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு செயல்பாட்டில் இறங்கலாம் என்ற எண்ணம் உருவானது. இது தொடர்பாக ஆலோசனைப் பெறுவதற்காக என்னுடைய வழிகாட்டி பரத்தை சந்தித்தேன். அவர் சொன்னார், “சிவராஜா, நீங்கள் நிறைய தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், பணம் சேர்ப்பது என்பது உங்களது இலக்காக தெரியவில்லை.
சிறுவயதில் உங்கள் குடும்பம் ஒரே நாளில் மொத்த சொத்தையும் இழந்ததால், பணம் என்பது நிரந்தரமில்லை என்ற எண்ணம் உங்களுக்குள் ஆழப் பதிந்திருக்கலாம். உங்கள் செயல்பாடுகளை பகுத்துப் பார்க்கையில், நீங்கள் சமூகம் சார்ந்த ஸ்டார்ட்அப் செயல்பாட்டில் கவனம் செலுத்துவது உங்கள் மன இயல்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.
மதுரையில் தொழில் தொடங்கிய நாம் நிதித் திரட்ட அவ்வளவு சிரமப்படுகிறோம். நம்மைப் போல் இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களில் இதேபோல் பலர் நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். தொழில்முனைவு குறித்து சரியான வழிகாட்டுதல் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு தீர்வு வழங்கலாமே என்று யோசித்தேன். 2012-ம் ஆண்டு ‘நேட்டிவ் லீடு’ அமைப்பைத் தொடங்கினேன்.
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் சூழலில், நாம் இன்னும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய விஷயம் என்று எதைச் சொல்வீர்கள்? - தமிழ்நாட்டில் துணிகர முதலீட்டாளர்கள் (வென்சர் கேபிடலிஸ்ட்) குறைவாக இருக்கின்றனர். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வளர வெளி முதலீடுகள் அவசியம். இதனால்தான், தமிழ்நாட்டில் சிறப்பான முதலீட்டுச் சூழலை உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அதேபோல், நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொன்று, பிராண்டிங்.
இந்திய இளைஞர்கள் ஜாக்கி உள்ளாடைகளை விரும்பி அணிகின்றனர். அமெரிக்க பிராண்டான ஜாக்கி, திருப்பூரில்தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நம்மால் அப்படி சொந்தமாக ஒரு பிராண்டை உருவாக்க முடியவில்லை. அதற்கு பெரும் நிதி ஆதாரம் தேவை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பிராண்ட் உருவாக்கம் குறித்த சிந்தனையே நம்மிடம் பரவலாக இல்லை என்பதுதான் சிக்கல். பிராண்டிங் சிந்தனையை தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்க வேண்டும்.
ஸ்டார்ட்அப் காலகட்டத்தை எதிர்கொள்ள நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள் என்ன? - ஸ்டார்ட்அப் சிந்தனை என்பது தொழில் சார்ந்த ஒன்று மட்டுமல்ல, எந்த ஒரு விஷயத்திலும் தீர்வு நோக்கி சிந்திக்கும் அணுகுமுறை அது. நம் சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஸ்டார்ட்அப் அணுகுமுறை மூலம் தீர்வு காண முடியும். எனவே, தொழில் முனைவோர் என்றில்லை, மாணவர்கள், ஊழியர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் என ஒவ்வொருவரும் இந்தக் காலகட்டத்தில் ஸ்டார்ட்அப் சிந்தனையை கைகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
தற்போதைய சூழலில், மார்க்கெட்டிங் என்பது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. நம் செயல்பாடுகளை, உருவாக்கங்களை, திறன்களை மிகச் சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். அனைத்துக்கும் மேலாக, வற்றாத தேடல் அவசியம். தேடலே நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும்!
- riyas.ma@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT