Last Updated : 14 May, 2018 11:12 AM

 

Published : 14 May 2018 11:12 AM
Last Updated : 14 May 2018 11:12 AM

ஆன்லைன் சந்தையில் வெற்றி யாருக்கு?

ஊருக்கே தெரிந்த ரகசியம் கடந்த புதன்கிழமை முறையாக அறிவிக்கப்பட்டது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை வாங்குவதாக அமெரிக்காவை சேர்ந்த வால்மார்ட் அறிவித்தது. கடந்த சில மாதங்களாகவே இது தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. வழக்கம் போல சந்தையின் யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்தன.

ஆனால், வால்மார்ட் தலைமைச் செயல் அதிகாரி டாக் மேக்மில்லன், செவ்வாய்க்கிழமை பெங்களூருவில் இருக்கிறார் என்னும் அளவுக்கு துல்லியமான தகவல்கள் வந்தன. புதன் கிழமை அறிவிப்பு வெளியாகும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதற்கு முன்பே சாப்ட்பேங்க் நிறுவனத்தின் தலைவர் மசாயோஷி சன், பிளிப்கார்ட் நிறுவனத்தில் வால்மார்ட் முதலீடு செய்கிறது. எங்களுடைய பங்குகளை விற்கி திட்டமிட்டுள்ளோம் என அறிவித்தார். இந்த டீலின் முறையான முதல் அறிவிப்பை வெளியிட்டது சாப்ட்பேங்க்தான்.

இந்த டீல் எப்படி நடந்தது, நடப்பதற்கு யார் காரணம், இதனால் வெற்றி யாருக்கு, வால்மார்ட்டுக்கு என்ன கிடைக்கும் என்பது குறித்து பார்ப்பதற்கு முன்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் வரலாற்றையும், இந்த இணைப்பின் சில முக்கியமான தகவல்களையும் பார்த்துவிடலாம்.

பிளிப்கார்ட் வரலாறு

சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இரு நண்பர்கள் 2007-ம் ஆண்டு தொடங்கிய நிறுவனம் இது. இருவரும் ஐஐடியில் படித்தவர்கள். அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அந்த வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்து தொடங்கிய நிறுவனம்தான் பிளிப்கார்ட். இரு படுக்கையறை கொண்ட வீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. முதலில் புத்தகங்களை மட்டும் ஆன்லைனில் விற்றனர்.

ஏன் புத்தகங்கள் என்று கேட்டதற்கு, புத்தகங்கள் குறைந்த விலையில் இருக்கும், அனுப்புவதில் எந்த சிக்கலும் இருக்காது. வாடிக்கையாளர்கள் புதிய நிறுவனத்தை நம்புவதற்கு புத்தகங்கள்தான் சிறந்த வழி என இவர்கள் தெரிவித்திருந்தனர். ஆரம்ப கட்டத்தில் இவர்கள் மட்டுமே நிறுவனத்தை நடத்தி வந்தனர். 2008-ம் ஆண்டு ஆஷிஷ் குப்தா என்பவரிடம் இருந்து சிறிதளவு முதலீட்டை பெற்றனர். 2009-ம் ஆண்டு ஆக்செல் பார்ட்னர் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம் டாலர் நிதியை திரட்டினர். அடுத்த ஆண்டு நியூயார்க்கைச் சேர்ந்த டைகர் குளோபல் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி டாலர் நிதியை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பல கையகப்படுத்துதல், பல கோடி டாலர் முதலீடு என நிறுவனம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. 2016-ம் ஆண்டு முக்கிய சிக்கல் வந்தது.

தலைமை மாற்றம்

இதுவரை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சச்சின் பன்சால் குழும நிறுவனங்களின் தலைவராக உயர்ந்தார். இணை நிறுவனர் பின்னி பன்சால் பிளிப்கார்ட் தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார். சில மாதங்களுக்கு பிறகு டைகர் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி பிளிப்கார்ட் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

பின்னி பன்சால் குழும தலைமைச் செயல் அதிகாரியாகவும், சச்சின் பன்சால் குழும தலைவராகவும் இருந்தனர். (குழும தலைவர் என்பது தினசரி அலுவல் அல்லாத உத்தி சார்ந்த பணிகளை மட்டுமே கவனிப்பது)

நிறுவனத்தின் சந்தை மதிப்பை முதலீட்டாளர்களில் ஒருவரான மார்கன் ஸ்டான்லி பல முறை குறைத்தது. சுமார் 1,000 நபர்கள் வெளியேற்றப்பட்டனர். கைவசம் இருந்த தொகையும் குறைந்தது. இந்த நிச்சயமற்ற சூழலில்தான் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் பிளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் ஆகிய இரு நிறுவனங்களிலும் முதலீடு செய்திருந்த சாப்ட்பேங்க், இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் சிறு முதலீட்டாளர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த இணைப்பு நிறுத்தப்பட்டது.

2014-ம் ஆண்டு முதல் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சாப்ட்பேங்க் முதலீடு செய்து வருகிறது. பேடிஎம், ஓலா, ஸ்நாப்டீல் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு இன்னும் இருக்கிறது. ஆனால் பிளிப்கார்ட் நிறுவனத்தில் செய்திருந்த மொத்த முதலீட்டையும் வெளியே எடுக்க திட்டமிட்டது. இந்த முதலீடு குறித்த தகவலை சாப்ட்பேங்க் முன்கூட்டியே வெளியிட்டது தற்செயல் நிகழ்வா என்பதும் தெரியவில்லை.

ஸ்நாப்டீல் இணைப்பு கைவிடப்பட்டதை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையை டைகர் குளோபல் நிறுவனத்தின் பங்குதாரர் லீ பிக்ஸல் தொடங்கினார். 2016-ம் ஆண்டே பிளிப்கார்ட்டில் முதலீடு செய்ய வால்மார்ட் திட்டமிட்டது. ஆனால் பிளிப்கார்ட் உயரதிகாரிகள், வால்மார்ட் மீது அப்போது நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

ஸ்நாப்டீல் வாய்ப்பு கைவிட்டு போனதை அடுத்து வால்மார்ட் திட்டத்தை பரிசீலனை செய்யத் தொடங்கினர். கடந்த டிசம்பரில் வால்மார்ட் குழு இந்தியா வந்தது. பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு பிளிப்கார்ட் நிறுவனத்தில் 77 சதவீத பங்குகளை 1,600 கோடி டாலரில் வாங்க வால்மார்ட் ஒப்புக்கொண்டது.

சில வாரங்களுக்கு முன்பு வரை இந்த பேச்சு வார்த்தையில் சச்சின் பன்சால் ஈடுபட்டுவந்தார். நிறுவனத்தில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை, மாறாக கூடுதல் பங்குகளை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் ஒரே ஒரு நிறுவனர் மட்டுமே இருக்க வேண்டும் என வால்மார்ட் விரும்பியது. அதனால் தன்வசம் உள்ள பங்குகளை விற்றுவிட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார். ( ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பது நல்ல விஷயமாக இருந்தாலும், கூடுதல் நிதி கிடைக்க, கிடைக்க நிறுவனர்களுக்கு உள்ள பிணைப்பு/கட்டுப்பாடு குறையும்)

வால்மார்ட் ஏன் வாங்க வேண்டும்?

சர்வதேச அளவில் சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனமாக வால்மார்ட் இருந்தாலும் ஆன்லைன் வர்த்தகத்தில் பெரிய அளவில் சாதிக்க முடிவில்லை. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் இ-காமர்ஸில் அமேசான் முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் இ-காமர்ஸ் சந்தையில் அமேசான் பங்கு 43 சதவீதமாக இருக்கிறது. வால்மார்டின் பங்கு 3.6 சதவீதமாக இருக்கிறது.

அமெரிக்காவுக்கு அடுத்த பெரிய வாய்ப்பு இந்தியாவிலும் சீனாவிலும் இருக்கிறது. ஆனால் சீனாவிலும் வால்மார்ட் பெரிய வெற்றியை அடையவில்லை. சீனாவில் அலிபாபா முக்கிய நிறுவனமாக இருக்கிறது. அங்கு கையகப்படுத்திய நிறுவனமும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. அந்த நிறுவனத்தை வால்மார்ட் விற்றுவிட்டது. தவிர இந்திய ரீடெய்ல் துறையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தடம் பதித்திருந்தாலும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக மொத்த விற்பனையாளராகவே இருக்கிறது.

அமெரிக்காவில் அமேசான் இருக்கிறது. சீனாவில் அலிபாபா இருக்கிறது. இந்தியாவிலும் பிளிப்கார்ட்டுக்கு அடுத்த இடத்தில் அமேசான் இருக்கிறது. தவிர பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட சந்தைகளிலும் சிக்கல் இருக்கிறது. அதனால் குறைந்தபட்சம் இந்திய சந்தையைக் கைப்பற்றியாக வேண்டிய நெருக்கடியில் வால்மார்ட் இருந்தது. தவிர பிளிப்கார்ட்டை கையகப்படுத்தும் போட்டியில் அமேசானும் இருந்ததால் வால்மார்டுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்தது. கடைசியாக 77 சதவீத பங்குகளை 1,600 கோடி டாலருக்கு வாங்கி இருக்கிறது. தவிர 200 கோடி டாலர் அளவுக்கு நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

வால்மார்ட்டுக்கு பயன் இருக்கிறதா?

பிளிப்கார்ட்டை வாங்குவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் வால்மார்ட் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. புதன்கிழமை வர்த்தகத்தில் வால்மார்ட் பங்கு 4 சதவீதம் அளவுக்கு சரிந்தது. மிக அதிக தொகை செலவழிக்கப்பட்டதாக முதலீட்டாளர்கள் கருதுகின்றனர். தவிர இந்த முதலீட்டால் பெரிய பயன் இருக்காது என பல முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். தவிர எஸ் அண்ட் பி நிறுவனம் வால்மார்ட்டுக்கான தர மதிப்பீட்டை குறைத்திருக்கிறது.

இதே கருத்தை "Failing to Succeed புத்தகத்தை எழுதியவரும் இந்திய இ-காமர்ஸ் துறையின் முன்னோடிகளில் ஒருவரான கே.வைத்தீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து நாம் அவரிடம் உரையாடியதில் இருந்து.., 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் இ-காமர்ஸ் முறையில் பொருட்கள் விற்கப்பட்டு வந்தாலும், இன்னும் ஒற்றை இலக்க அளவிலேயே சந்தை இருக்கிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால் மொத்த ரீடெய்ல் சந்தையில் ஒரு சதவீத அளவுக்குதான் இ-காமர்ஸ் இருக்கிறது.

இந்தியாவில் எவ்வளவு வேகமான வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஒற்றை இலக்க அளவில்தான் சந்தை இருக்கப்போகிறது. இந்த ஒற்றை இலக்க சந்தையில் 25 சதவீத அளவுக்கு கைப்பற்ற 1,600 கோடி டாலர் என்பது மிக மிக அதிகமான தொகை. தவிர அமேசான் 2013-ம் ஆண்டில்தான் இந்தியாவுக்கு வந்தது.

இதுவரை 400 கோடி டாலர் முதலீடு செய்து இந்திய -காமர்ஸில் 30 சதவீத சந்தையை வைத்திருக்கிறது. ஆனால் 1600 கோடி டாலர் வால்மார்ட் செலவு செய்திருக்கிறது. இவ்வளவு தொகை கொடுத்து கைப்பற்றுவதை விட புதிய நிறுவனமே தொடங்கி இருக்கலாம்.

மளிகை பொருட்கள் பிரிவில் வால்மார்ட் பலமான நிறுவனமாக இருந்தாலும், பிளிப்கார்ட் வசம் இதுபோன்ற நிறுவனம் ஏதும் இல்லை. அதனால் புதிதாக தொடங்கத்தான் வேண்டும். அதனால் மொத்தமாக புதிதாகவே களம் இறங்கி இருக்கலாம். இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆன்லைன் சந்தை ஒற்றை இலக்கத்தில் இருக்கும் போது வால்மார்ட்டின் அவசரம் புரிந்து கொள்ள முடியாதது என்று கூறினார். மேலும் நிறுவனம் லாபம் ஈட்டவில்லை என்றாலும், சந்தையில் வாங்குவதற்கு பெரிய நிறுவனங்கள் இருக்கிறார்கள் என்னும் தவறான தோற்றமும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது என்று வைத்தீஸ்வரன் நம்மிடம் கூறினார்.

இந்திய இ-காமர்ஸ் துறை அமேசான், அலிபாபா (பேடிஎம் மால்) மற்றும் வால்மார்ட் என்னும் மும்முனை போட்டிக்கு தயாராகிவிட்டது. இ-காமர்ஸ் துறையில் winners take it all என்று சொல்லுவார்கள். மொத்தத்தையும் யார் கைப்பற்ற போகிறார்கள்?

பிளிப்கார்ட் கோடீஸ்வரர்கள்

வால்மார்ட் நிறுவனம் வாங்கியதால் பெங்களூருவில் பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிளிப்கார்ட் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் பணியாளர்கள் சுமார் 3,000 நபர்கள் வசம் பிளிப்கார்ட் பங்குகள் இருக்கின்றன. பணியாளர் வசம் உள்ள பங்குகளை வாங்க இருப்பதாக பின்னி பன்சால் அறிவித்திருக்கிறார். இவை படிப்படியாக வாங்கப்படும் என தெரிகிறது. தகவல்களின் படி ஒரு பங்கு 150 டாலர் என தெரிகிறது. பணியாளர்கள் வசம் உள்ள பங்குகளை திரும்ப வாங்குவதற்கு மட்டும் ரூ.3,363 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதில் 100 பணியாளர்களுக்கு மேல் 10 லட்சம் டாலர் அளவிலான (ரூ.6.7 கோடி) பங்குகளை வைத்திருக்கிறார்கள்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x