Published : 14 May 2018 11:10 AM
Last Updated : 14 May 2018 11:10 AM
நீங்கள் கூகுள் அஸிஸ்டெண்ட் செயலியைப் பதிவிறக்கம் செய்திருப்பீர்களே? ‘ஹௌ ஆர் யூ?’ என்றால், ‘கடமை உணர்ச்சியுடன் இருக்கிறேன்’ (dutiful) என்று பதில் சொல்கிறதா?
கூகுளின் சுந்தர் பிச்சை, அந்நிறுவனத்தின் அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் பற்றிப் பேசும் காணொளி ஒன்று, சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இனி அச்செயலியே, சிகை அலங்காரக் கடையில் பேசி, நமக்கு நேரம் கேட்டு வாங்கிக் கொடுக்குமாம்! உணவு விடுதியைத் தொடர்பு கொண்டு, நமக்குத் தேவைப்படும் நேரத்திற்கு , மேஜை முன்பதிவைக் கூடச் செய்து கொடுக்குமாம்.
ஆமாம், இதையெல்லாம் உயிருள்ள மனிதர்கள் செய்வது போலவே, ‘கூகுள் டூப்லெக்ஸ்’ எனும் அந்த செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள (Artificial intelligence) செயலியே அக்கடைக்காரர்களுடன் பேசிச் செய்து விடுமாம்.
`கூகுள் அஸிஸ்டெண்ட்’ கடைக்காரர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசும் அக்காணொளியைக் கேளுங்கள்.முதலில் ஒரு பெண்குரல். நடுநடுவில் நாமெல்லாம் பேசுவது போலவே, ‘ம்ம்’ என நடுநடுவே சத்தம் கொடுக்கிறது. அடுத்த முன்பதிவிற்கு ஓர் ஆண்குரல் . அதுவும் நாம் சகஜமாகப் பேசுவது போலக் குரலை ஏற்றி இறக்கி ‘ஓ’ என்றெல்லாம் சொல்கிறது. அதாவது, மறுமுனையில் இருப்பவர் ஒரு பதிவு செய்யப்பட்ட குரலைக் கேட்பதாகவே நினைக்க மாட்டார்!
நம்ம சுந்தர் பிச்சை சொல்வதைக் கேளுங்கள். தொலைபேசியின் மறுமுனையில் அந்தக் கடையில் இருப்பவர்க்கு, ஆசாபாசங்கள் உள்ள ஒரு சாதாரண மனிதருடன் பேசுகிற மாதிரி அவ்வளவு இயற்கையாக இருக்குமாறு ஆராய்ச்சி செய்து அமைத்து வருகிறார்களாம்.
இல்லையா பின்னே? அருகில் இருந்தாலும், வெகு தொலைவில் இருந்தாலும் இந்தப் பேச்சை வைத்து, சொற்களை வைத்து மனிதர்களை மகிழ்விக்கலாம், நிம்மதியடையச் செய்யலாம், அல்லது எரிச்சலூட்டலாம், கோபப்படவும் வைக்கலாம். தம்பி, வார்த்தைகளில் அல்லவா இருக்குது மந்திரம், தந்திரம் எல்லாம்? ஒரு வகையில் பார்த்தால் ஆவதும் அழிவதும் வார்த்தைகளால் தானே?
எழுத்தாளர் திருமதி கிளேடிஸ் சொல்வதைப் பாருங்கள். `ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு நிறம் உண்டு என்றே சொல்லலாம். ரோஜா நிற வார்த்தை ஒன்றை ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள். அதைக் கேட்டு அவர் கண்கள் ஒளிவிடும் பொழுது, அவ்வார்த்தை அவருக்கும் ரோஜா வண்ணம் எனத் தெரிந்து கொள்வீர்கள். அப்போது நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு இணையேது?’ என்கிறார் அவர்.
அண்ணே, சிலரைப் பார்த்து இருப்பீர்கள். எப்பவுமே மெதுவாகத்தான் பேசுவார்கள். முக்கியமாகக் கைபேசியில். அந்தப் பேச்சின் தன்மையில், தொனியில் அவர்களது பண்பாடு தெரியும். அத்துடன் எங்கு பேசினாலும், யாருடன் பேசினாலும் ஒரு கனிவு இருக்கும். பூக்கடையில், டீக்கடையில், துணிக்கடையில், நகைக்கடையில் ஒரு புன்முறுவல், ஒரு நட்பான பார்வை, எங்கும் அதே அணுகுமுறைதான். தோல்வியில் துவண்ட நிலையில் இருப்பவரிடம் அவர்கள் பேசினால், துக்கம் தூரப் போகும், சோர்வு நீங்கும், புத்துணர்ச்சி பிறக்கும். வார்த்தைகளாலேயே வருடிக் கொடுக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்.
சொல்கிற வார்த்தைகளுக்கு மட்டுமல்ல, எழுதுகின்ற வார்த்தைகளுக்கும் இது பொருந்தும். இந்த வாட்ஸ்அப்பையே எடுத்துக் கொள்ளுங்கள்.அதில் பலர் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்திருக்க மாட்டார்கள்.இருந்தும், எவ்வளவு பேர் கோபம் காட்டுகிறார்கள். திட்டிக் கொள்கிறார்கள். சண்டை போடுகிறார்கள்!
வள்ளுவர் சொல்வது போல, இனிய சொற்களை விட்டு விட்டு, கடுஞ் சொற்களைப் பேசுவது, கனிந்த பழங்கள் இருக்கும் பொழுது, காய்களை எடுப்பது போலத்தானே?
யாருக்குத் தானுங்க சிடுசிடுன்னு கடுமையாகப் பேசுகிறவர்களைப் பிடிக்கும்? அன்பாகப் பேசுகிறவர்களுடன், ஆதரவாகப் பேசுகிறவர்களுடன் நேரம் செலவிடுவதைத் தானே நாம் அலுவலகத்திலும், வீட்டிலும் விரும்புகிறோம்! ‘இந்த உலகம் ஓர் அழகான மரம் எனலாம். அது எப்பொழுதும் சுவையான பழங்களைக் கொடுக்கும். அழகான, மிருதுவான பேச்சு, நல்வர்களுடைய சேர்க்கை என்பவை தான் அவை’ என்கிறார் சாணக்கியர்.உண்மை தானே? நல்ல வார்த்தைகளைப் போலவே மனதிற்கு இதமளிப்பது நல்லவர்களின் சேர்க்கை அல்லவா?
`உங்கள் எண்ண ஓட்டத்தையும், உங்கள் சூழலையும் எப்போதும் உங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டுவிடுவது அவசியம்.அதாவது உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறவர்களாகவோ, உங்களுக்குக் கெடுதல் நினைப்பவர்களாகவோ இருக்கக் கூடாது ' என்கிறார் ஜெர்மானிய நடிகையும் தொழில் அதிபருமான ஹைடி க்ளம்!
ஐயா, நமக்கு அருகில் இருப்பவர்கள், நாம் அறிந்தோ, அறியாமலோ நமது வாழ்வின் திசையை ,போக்கை மாற்றக் கூடியவர்கள்.ஆங்கிலத்தில் நண்பன், குரு, வழிகாட்டி ( friend,philosopher, guide) என்பது போல! எனவே நாம் நெருங்கிப் பழகும் நண்பர்கள், உறவினர்கள், சாணக்கியர் சொல்வது போல, நமது நலம் விரும்பிகளாக, நமது முன்னேற்றத்திற்கு,மகிழ்ச்சிக்கு, உதவுபவர்களாக இருந்து விட்டால், வாழ்வே இனிமை தானே?
-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT