Published : 28 May 2018 11:40 AM
Last Updated : 28 May 2018 11:40 AM

புதிய தொலைத்தொடர்பு கொள்கை யாருக்கு ஆதாயம்

தேசிய தொலைத் தொடர்பு கொள்கை 2018-க்கான முன்வரைவினை மே1-ம் தேதி அன்று இந்திய தொலைத் தொடர்புத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த முன்வரைவில் முக்கிய இயற்கை வளங்களில் ஒன்றான அலைக் கற்றையை இந்தியா பொதுமக்களுக்கு சாதகமாக பயன்படுத்தியது குறித்தும், அதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டியதையும் பெருமையாக பட்டியலிட்டுள்ளது.

குறிப்பாக தொலைத் தொடர்பு தொழில்நுட்பங்கள் மேம்பட்டுள்ளதையும், மக்களுக்கு தேவையான நேரத்தில் எளிதாக கிடைப்பது மற்றும் உகந்த விலை போன்றவை மேம்பட்டுள்ளன என்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கூறியுள்ளது. இது தவிர எதிர்கால தொழில் நுட்பங்களுக்கான அனுமதிகளை வழங்கும் திட்டங்கள், வயர்லெஸ் ஒருங்கிணைப்பு (WPC) ரேடியோ அலைவரிசை ஒதுக்கீடு போன்றவற்றை ஆக்கபூர்வமாக ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளதாக முன்வரைவு குறிப்பிடுகிறது.

அலைவரிசை சேவையை வழங்கவும் ரத்து செய்யவும் எளிய நடைமுறைகள், அலைவரிசையை பிற நிறுவனங்களுடன் இணைந்து பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, இரண்டாம் நபருக்கு கைமாற்றுவது, பயன்படுத்திக் கொள்வதை அனுமதிப்பது, தொலைத் தொடர்பு வல்லுநர்கள் அடங்கிய ஸ்பெக்ட்ரம் குழுவினருடன் ஆலோசனைகளை மேற்கொள்வது என பல அறிவிப்புகள் அந்த முன்வரைவில் இடம் பெற்றுள்ளன.

தவிர 5 ஜி சேவைக்கான புதிய அலைவரிசையை அடையாளம் கண்டு அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக எதிர்கால அகண்ட் அலைவரிசை நிர்வாகத்தை சிறப்பாக பயன்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

புதிய தொலைத் தொடர்பு கொள்கை ஏன் ?

அடுத்த தலைமுறை தொழில்நுட்பமான 5 ஜி சேவைக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டத்தில் இந்திய தொலைத் தொடர்பு சேவை உள்ளது. அந்த அடிப்படையிலிருந்துதான் டிராய் இந்த முன்வரைவினை கொண்டுவந்துள்ளது. புதிய வரைவில் அலைவரிசையை பயன்படுத்தும் நடைமுறை தாராளமாக்கப்பட்டுள்ளது. அனுமதிகள், வர்த்தக பரிமாற்றங்கள் எளிதாக்கப்பட்டுள்ளன. இலவச ரேடியோ அலைவரிசையை அனுமதிப்பது, திருத்தி அமைப்பது போன்றவற்றிலும் தாராளம் காட்டப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் அனைவருக்கும் அகண்ட அலைவரிசை சேவையை அளிக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. மின்னணு தொலைத் தொடர்பு துறையில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இந்த துறையில் புதிதாக 40 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஜிடிபியில் 8 சதவீத பங்களிப்பை செலுத்தவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. குறிப்பாக இந்தியா சர்வதேச மின்னணு வலைப் பின்னலில் குறிப்பிடத்தக்க சந்தையை பிடிக்க வேண்டுமெனில் இந்த முன் தயாரிப்புகள் அவசியமாகிறது. இந்த புதிய தொலைத் தொடர்பு கொள்கை குறித்து சேவை நிறுவனங்களும், பொதுமக்களும் நேரடியாக கருத்துகளை சொல்லலாம் என டிராய் கூறியுள்ளது.

யாருக்கு ஆதாயம்?

புதிய தொலைத் தொடர்பு கொள்கையால் மக்களுக்கு கிடைக்கும் ஆதாயம் சேவை மேம்படுவதுதான். அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் பயனர்களுக்கு எளிதாக சென்று சேரும். அதேநேரத்தில் இதற்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. சேவை வழங்கும் நிறுவனங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதே வேளையில் தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் சிக்கல்களுக்கு தீர்வுகள் எதுவும் முன்வரைவில் இல்லை என்கின்றன சேவை நிறுவனங்கள். குறிப்பாக சேவை நிறுவனங்களுக்கான நெருக்கடிகளைக் குறைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பை புதிய கொள்கை பூர்த்தி செய்யவில்லை.

தற்போதைய நிலவரப்படி இந்திய தொலைத்தொடர்பு துறை மிக மோசமான வளர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாராக்கடன் கடந்த ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சம் கோடியை தொட்டுள்ளது. ஆண்டு வளர்ச்சி 7 சதவீதம் என்கிற அளவில்தான் உள்ளது. அதிகரித்து வரும் போட்டி, அகண்ட் அலைவரிசைக்கான முறையற்ற கட்டணங்கள், வருமான சரிவு போன்றவற்றால் இந்திய தொலைத் தொடர்பு துறையில் சீரான வளர்ச்சி இல்லை. முதலீட்டாளர்கள், வங்கிகள் இதன் காரணமாக மிகப் பெரிய இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.

புதிய தொழில்நுட்ப உருவாக்கங்கள் பழைய வாடிக்கையாளர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் பாதிப்பினை உருவாக்கியுள்ளன. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் இணைப்பு, கையகப்படுத்தல், சந்தையிலிருந்து வெளியேறுவது என பல உத்திகளை நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

டேட்டா போட்டி

தொலைத் தொடர்பு துறையில் நிகழ்ந்து வரும் டேட்டா போட்டியும் நிறுவனங்களின் வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கத்தினை உருவாக்கியுள்ளது. புதிதாக சந்தைக்கு வந்த ரிலையன்ஸ் ஜியோ குறைந்த விலையில் டேட்டா சேவைகளை வழங்கியதால் இதர சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2016-ம் ஆண்டில் இலவச குரல் வழி சேவை என ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் இறங்கியது.

தற்போதுவரை 16 கோடி வாடிக்கையாளர்களை தனது சேவைக்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னர் சந்தையில் ஆதிக்கம் செலுத்திய பார்தி ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிக்க தங்களது டேட்டா சேவைக்கான விலைகளை குறைத்தன. இதனால் பழைய நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது.

தவிர நிறுவனங்களின் இணைப்பு மற்றும் சந்தையிலிருந்து வெளியேறுவதால் வேலை இழப்பையும் இந்தியா சந்தித்து வருகிறது. தற்போது மறைமுகமாகவும், நேரடியாகவும் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் துறையில் வேலை இழப்பினை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

அலைவரிசைக் கட்டணம்

இது ஒரு பக்கம் இருந்தாலும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது ஒரு ரூபாய் வருமானத்தில் 30 பைசா வரை அலைவரிசைக் கட்டணம் மற்றும் வரியாக அரசுக்கு செலுத்தி வருகின்றன. இதன் காரணமாகவே தொலைத் தொடர்பு துறையின் வாராக்கடன் ரூ.7.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அலைவரிசைக்கான கட்டணங்கள் மற்றும் வரியை குறைக்க வேண்டும் என நிறுவனங்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றன. புதிய தொலைத்தொடர்பு கொள்கையில் நிறுவனங்களுக்கு இந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அனைவருக்கும் தொலைத் தொடர்பு சேவை, தொழிலை எளிதாக்குவது, 5ஜி மற்றும் ஐஓடி சேவைகளுக்கு ஏற்ப கட்டமைப்பு மாற்றங்கள் போன்றவற்றை மட்டுமே புதிய தொலைத் தொடர்பு கொள்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே நீடித்து வரும் சிக்கல்கள் அடையாளம் காணப்படவில்லை.

எதிர்பார்ப்பு

நிறுவனங்களின் கடன் சுமை குறைய வேண்டுமானால் அலைவரிசை ஏலக் கட்டணங்களை நிறுவனங்கள் அளிப்பதில் சில பரிந்துரைகளை அமைச்சரவை இடையிலான குழு அளித்திருந்தது. அதில் ஏலத் தொகையை கட்ட 12 ஆண்டு அவகாசத்துக்கு பதிலாக 16 ஆண்டுகளாக நீட்டிக்கலாம் என்றும், அபராதங்களுக்கான வட்டியை குறைக்கலாம் என்கிற யோசனைகளையும் தெரிவித்திருந்தது. ஆனால் புதிய தொலைத்தொடர்பு கொள்கையில் இந்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை என்றே தெரிகிறது. இதனால் தொலைதொடர்பு நிறுவனங்களின் தற்போதைய அழுத்தங்கள் குறையும் வாய்ப்புகள் இல்லை.

எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேச தரத்துக்கு இணையாக இந்திய தொலைத் தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொலைத்தொடர்பு கொள்கை இருக்கும் என டிராய் கூறியுள்ளது. மக்களும், நிறுவனங்களும் தெரிவிக்கும் கருத்துக்கு ட்ராய் என்ன முடிவு எடுக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x