Published : 23 Apr 2018 10:03 AM
Last Updated : 23 Apr 2018 10:03 AM

புதிய வடிவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

மியூச்சுவல் பண்டில் தொடர்ந்து முதலீடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த துறையில் நடந்திருக்கும் மாற்றங்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். அனைத்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும், தங்கள் வசம் இருக்கும் பண்ட்களை புதிய விதிமுறைகளின் கீழ் கொண்டுவர வேண்டும் என `செபி’ உத்தரவிட்டிருந்தது. அதாவது ஒரே பிரிவில் பல பண்ட்கள் இருப்பது, வெவ்வேறு பெயர்களில் செயல்படுவது போன்றவற்றை ஒழுங்குபடுத்த `செபி’ உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக பண்ட்களின் பெயர்கள், வகைகள், முதலீடு செய்திருக்கும் போர்ட்போலியோ உள்ளிட்ட சில விஷயங்களை மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் மாற்றி இருக்கின்றன. இது தொடர்பாக கடந்த இரு மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு மெயில் மூலம் தகவல் அனுப்பின. தவிர செய்தித்தாள்களில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன. ஒரு வேளை பார்க்காமல் இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இணையதளத்துக்கு செல்வதன் மூலம் பண்ட்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அறிந்துகொள்ளலாம்.

சிறிய மாற்றம்

சில பண்ட்கள் ஏற்கெனவே `செபி’ விதித்துள்ள விதிமுறைகளுடனே செயல்பட்டு வருகின்றன. சில பண்ட்களில் மிகச்சில மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன. உதாரணத்துக்கு குவாண்டம் லாங் டேர்ம் ஈக்விட்டி பண்ட் என்னும் பெயர் குவாண்டம் லாங் டேர்ம் ஈக்விட்டி வேல்யு பண்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பண்டின் அடிப்படை நோக்கத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்னும் பட்சத்தில் அந்த பண்டில் அப்படியே தொடரலாம்.

பெரிய மாற்றம் நடந்தால்?

சில பண்ட்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் நடந்திருக்கிறது. முதலீட்டு நோக்கம் மாறி இருக்கிறது. முதலீடு செய்ய இருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பில் மாற்றம் செய்யப்பட்டிருகிறது. இது போல முதலீட்டு நோக்கம் மாற்றப்பட்டிருந்தால், முதலீட்டாளர்களுக்கு வெளியேறும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என `செபி’ அறிவுறுத்தி இருக்கிறது. வெளியேறும் வாய்ப்பு இருகிறது என்பதற்காக முதலீட்டை வெளியே எடுக்க வேண்டாம். என்ன மாற்றம் நடந்திருக்கிறது என்பதை ஆராய்வது அவசியம்.

உதாரணத்துக்கு ஐசிஐசிஐ புரூ வேல்யூ டிஸ்கவரி பண்ட் என பெயரிடப்பட்டிருக்கும். ஆனால் சமயங்களில் திசைமாறி வேறு பங்குகளில் முதலீடு செய்வதும் நடக்கும். ஆனால் தற்போது, பண்ட் உருவாக்கப்பட்டிருக்கும் நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படும் என நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதேபோல ரிலையன்ஸ் குரோத் பண்ட், ரிலையன்ஸ் மிட்கேப் பண்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் 65 சதவீத முதலீடு மிட்கேப் பண்ட்களில் மட்டுமே இருக்கும். இது போன்ற பண்ட்களில் மாற வேண்டிய தேவையில்லை. என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தில் இந்த பண்ட் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன.

சில பண்ட்கள் எந்த விதிமுறைகளுக்குள்ளும் இருக்கவில்லை. அதனால் அந்த பண்ட்களின் நோக்கம் மாறி இருக்கிறது. உதாரணத்துக்கு ஹெச்டிஎப்சி டாப் 200 பண்ட் பிஎஸ்இ 200 பட்டியலில் இருக்கும் பங்குகளில் முதலீடு செய்து வந்தன. இனி இந்த பண்ட் ஹெச்டிஎப்ச் 100 பண்ட் ஆக மாறும். அதேபோல ரிலையன்ஸ் டாப் 200 பண்ட், ரிலையன்ஸ் லார்ஜ் கேப் பண்டாக மாறும். ஆனால் ஹெச்டிஎப்சி டாப் 200 மற்றும் ரிலையன்ஸ் டாப் 200 பண்ட், இனி சந்தை மதிப்பில் முதல் 100 இடன்களில் இருக்கும் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதனால் அதிக வருமானம் கிடைக்காது என்றாலும், முதலீட்டாளர்களின் ரிஸ்க் குறையும். அதனால் ஒரு ஆண்டுக்கு பிறகு இதே பிரிவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் வருமானத்துடன் ஒப்பிட்ட பிறகு முதலீட்டை தொடரலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்து முடிவெடுக்கலாம்.

ஆனால் சில பண்ட்கள் முற்றிலும் வேறு முதலீட்டு திட்டத்தில் செயல்பட தொடங்கி இருக்கின்றன. உதாரணத்துக்கு எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி பண்ட், எஸ்பிஐ மேக்னம் ஈக்விட்டி இஎஸ்ஜி என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் அரசு துறை பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும் திமேட்டிக் பண்டாக மாறி இருக்கிறது. அடுத்ததாக ஹெச்டிஎப்சி கோர் அண்ட் சேட்டிலைட் பண்ட், `ஹெச்டிஎப்சி போகஸ்டு 30’ ஆக மாறி இருக்கிறது. 80 சதவீதம் பிரபலமான பங்குகளிலும் 20 சதவீதம் பிரபலம் இல்லாத பங்குகளிலும் முதலீடு செய்து வந்தது. ஆனால் இனி குறுகிய எண்ணிக்கையிலான பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யும். இந்த பண்ட்கள் தங்களது முதலீட்டு திட்டத்தை முற்றிலும் மாற்றி அமைத்திருக்கின்றன. இந்த பண்ட்களில் நீங்கள் புதிதாக முதலீடு செய்வீர்களா என்னும் கேள்வியை கேளுங்கள். இந்த முதலீட்டு மாற்றம் உங்களுக்கு ஏற்புடையது இல்லை என்னும் பட்சத்தில் வெளியேறிவிடுங்கள். அதேபோல இரண்டு பண்ட்களை இணைத்திருக்கும் பட்சத்தில் வெளியேறிவிடுங்கள். இரண்டு பண்ட்கள் இணையும் போது முற்றிலும் வேறு பண்டாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x