Last Updated : 02 Apr, 2018 10:51 AM

 

Published : 02 Apr 2018 10:51 AM
Last Updated : 02 Apr 2018 10:51 AM

பிரெக்ஸிட் எதிரொலி: ஐரோப்பிய யூனியன் இல்லையேல் காமன்வெல்த்

2016- ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி பிரிட்டனில் பொது வாக்கெடுப்பு நடந்த நாள். ஏறக்குறைய 3 கோடியே 35 லட்சம் பேர் பங்கேற்றனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த வாக்கெடுப்பில் 1 கோடியே 74 லட்சம் பேர் ஆதரவாகவும், 1 கோடியே 16 லட்சம் பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். எதற்காக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிவதற்காக நடத்தப்பட்டதுதான் இந்த வாக்கெடுப்பு. பிரிந்து விடலாம் என வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான். இளம் வயதினர் (18 முதல் 24) ஐரோப்பிய யூனியனில் தொடரலாம் என்றே வாக்களித்திருந்தனர்.

ஐரோப்பிய யூனியனிலேயே தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டிருந்த பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஐரோப்பிய யூனியனிலேயே தொடரலாம் என பிரசாரம் செய்த அணியில் இருந்த உள்துறை அமைச்சர் தெரசா மே அடுத்த பிரதமரானார். மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கையால் பிறந்த வார்த்தைதான் பிரெக்ஸிட் (Britan Exit). சர்வதேச அளவில் பிரபலமாகி விட்டது.

அடுத்து ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக குறிக்கப்பட்ட கெடு மார்ச் 29, 2019 வெள்ளிக்கிழமை இரவு 11 மணி.

28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது என்ற முடிவை எடுத்து அதை செயல்படுத்த ஏறக்குறைய 3 ஆண்டுகளாகிறது.

வர்த்தகத்தை மேம்படுத்தவும், மனித உரிமைகளைக் காக்கவும், சுற்றுச் சூழல் இன்ன பிறவற்றைக் காக்கவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் ஐரோப்பிய யூனியன். இரண்டாம் உலகப் போரில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் அதிகமாக பாதிக்கப்பட்டவை ஐரோப்பிய நாடுகள்தான். இனி வரும் காலங்களில் வர்த்தகத்துக்காக சண்டையிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு 28 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியதுதான் ஐரோப்பிய யூனியன்.

இப்பிராந்திய நாடுகளிடையே தாராள வர்த்தக பரிவர்த்தனை, மக்கள் இடையூறின்றி ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்றது, அங்கேயே தங்கி பணி புரிந்தது அனைத்துமே இதனால் சாத்தியமானது. இத்தனை விஷயங்களையும் ஒருங்கே, அரசியல் மாச்சரியங்கள், எல்லை பாகுபாடுகளைக் கடந்த ஒன்றாக கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுந்துகொண்டேதானிருந்தது. அது சாத்தியமல்ல என்பது 2016 மக்கள் கணிப்பு நிரூபித்துவிட்டது.

1973-ல் ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு உருவான பிறகு அதில் இணைவதற்கு பிரிட்டன் 16 ஆண்டுகள் காத்திருந்தது. 1993-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் உருவாவதற்கு மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அப்போதைய பிரதமர் ஜான் மேஜருக்கு அடுத்து வந்த தேர்தலில் பலத்த அடி. 1999-ல் ஒற்றை கரன்சி அதாவது யூரோ கொண்டு வரப்பட்டது. ஆனாலும் யூனியனில் இடம்பெற்ற இங்கிலாந்து மட்டும் தனது கரன்சியான பவுன்ட் ஸ்டெர்லிங்கை தொடர்வதென முடிவு செய்யப்பட்டது.

இதற்கு காரணம் இல்லாமலில்லை. யூரோ கரன்சிக்கு இணையாக பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்பை நிலை நிறுத்த 600 கோடி பவுண்ட் ஸ்டெர்லிங் வரை இங்கிலாந்து செலவிட்டது. ஆனாலும் அது கரன்சி மதிப்பை ஸ்திரப்படுத்தாததால் 2 ஆண்டுகளில் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

பிரிவு ஏன்?

ஐரோப்பாவின் பிற நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுவோரது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. 1991-ம் ஆண்டு இருந்த பிற ஐரோப்பியர்களின் எண்ணிக்கை 2011-ல் 13 மடங்கு உயர்ந்தது. இது பிரிட்டன் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இவைதான் பிரிவுக்கு முக்கியக் காரணமானது.பிரிவு தவிர்க்க முடியாததுதான், இதன் விளைவுகளும் பொருளாதார தாக்கமும் பெருமளவு இருக்கவே செய்யும்.

பிற ஐரோப்பிய நாடுகளிடையிலான தாராள வர்த்தகம் இனி பிரிட்டனுக்கு சாத்தியமாகாது. அதேபோல பிற ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் 12 லட்சம் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் கதி என்னவாகும் என்பது இனிமேல்தான் தெரியும். அதேபோல இங்கிலாந்தில் வசிக்கும் பிற ஐரோப்பிய நாட்டவர்களை திருப்பி அனுப்பும் பணியை இங்கிலாந்து அடுத்த ஆண்டிலிருந்து தொடங்கக் கூடும்.

இதை உணர்ந்தே பிரிட்டன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் காமன்வெல்த் நாடுகளுடனான தனது வர்த்தக உறவை வலுப்படுத்திக் கொள்வதாகும்.

சாதக அம்சங்கள்

53 நாடுகளைக் கொண்ட காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராக இங்கிலாந்து ராணிதான் உள்ளார். உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை ஏற்கெனவே இங்கிலாந்து ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றவை. இவற்றில் 16 நாடுகளின் தலைவராக மகா ராணிதான் உள்ளார். சர்வதேச வர்த்தகத்தில் காமன்வெல்த் நாடுகளின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையிலான இங்கிலாந்தின் வர்த்தகப் பங்களிப்பு 50 சதவீதத்துக்கும் அதிகம். அதேசமயம் காமன்வெல்த் நாடுகளிடையிலான இங்கிலாந்தின் வர்த்தக பரிவர்த்தனை 10 சதவீதமே. 2015 வரை இருந்துவந்த நிலையை மாற்ற இங்கிலாந்து முனைந்துள்ளது.

2015-ம் ஆண்டில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான வர்த்தக பரிவர்த்தனை 52,500 கோடி டாலராகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி டாலராக உயர்த்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியன் அல்லாத பிற நாடுகளில்தான் 90 சதவீத வர்த்தக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ளதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) கணித்துள்ளது.

இதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் பிரிட்டன் தீவிரமாக உள்ளது. குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து இடையிலான வர்த்தக வாய்ப்புகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தில் இதுவரை பிரச்சினை இருந்ததில்லை. ஆனால் காமன்வெல்த் நாடுகளிடையிலான வர்த்தகத்துக்கு அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை, போக்குவரத்து வசதிகளை உருவாக்கவேண்டிய கட்டாயமும் பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியதால் பிற நாடுகளுடனான வர்த்தக உறவை ஏற்படுத்த உலக வர்த்தக ஒப்பந்தத்தில் (டபிள்யூடிஓ) இங்கிலாந்து சேர வேண்டியிருக்கும். அதன் பிறகு அந்த சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டியிருக்கும்.

ஏற்கெனவே தாராளமயமாக்கல் கொள்கை தங்களுக்கு பாதகமாக இருப்பதாக கருதி அமெரிக்கா உட்பட பல நாடுகளும் தற்காப்புக் கொள்கையை பின்பற்றத் தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் ஒரு காலத்தில் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த நாடுகளிடையே வர்த்தக வாய்ப்புகளை மேற்கொள்ள இங்கிலாந்து ஆர்வம் காட்டுவது, கிழக்கிந்திய கம்பெனியாக இந்தியாவில் நுழைந்ததையே நினைவுபடுத்துகிறது.

வர்த்தகத்தை பெருக்கவும், எல்லை தாண்டிய வர்த்தகத்தை மேம்படுத்துவதும் அவசியம்தான். ஆனால் அது நாடுகளின் சுதந்திரத்தை பறிப்பதாக அமைந்துவிடக்கூடாது. இந்த விஷயத்தில் இந்தியா உள்ளிட்ட காமன்வெல்த் நாடுகள் இங்கிலாந்தின் அணுகுமுறையை எச்சரிக்கையுடனே எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x