Published : 23 Feb 2018 08:38 AM
Last Updated : 23 Feb 2018 08:38 AM
அ
திக பணத்தை சேமிக்க விரும்புகிறீர்களா? அல்லது சிறந்த நிர்வாகியாக ஆகவேண்டுமா? அல்லது நல்ல உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள விருப்பமா?. இவை மட்டுமல்ல, நாம் நினைக்கும் எதை வேண்டுமானாலும் எளிதில் நம்மால் நிறைவேற்றிக்கொள்ள முடியும். அதிகம் சிரமப்படாமல் சில எளிய வழிகளின் மூலமாக நமது இலக்குகளை அடைவதற்கான யுக்திகளைச் சொல்கிறது “ஒவைன் சர்வீஸ்” மற்றும் “ரோரி கல்லஹெர்” ஆகிய நூலாசிரியர்களால் எழுதப்பட்ட “திங் ஸ்மால்” என்னும் இந்தப் புத்தகம்.
இலக்கு!
நம்முள்ளே ஆழ்மனதில் புதைந்துள்ள நம்முடைய இலக்கினை மிகச்சரியாக வெளிக்கொண்டு வருவதே எச்செயலுக்குமான முதற்படி. இலக்கினை தீர்மானிக்காமல் நம்மால் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளும் வீணானதே. மேலும் நம்மால் தீர்மானிக்கப்பட்ட இலக்கானது, தெளிவான ஒற்றை இலக்காக இருக்கவேண்டியது அவசியம். இலக்கினை எளிதில் செயல்படுத்தக்கூடிய வகையில் சிறு சிறு பகுதிகளாக பிரித்துக்கொண்டு, அதனை அடைவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
உதாரணம்: உங்களது ஆரோக்கியம் மற்றும் உடல்திறனை மேம்படுத்திக்கொண்டு, இன்னும் ஐந்து மாதத்திற்கு பிறகு நடக்கப்போகும் மாரத்தான் போட்டியில் பங்கு பெறுவதை உங்களுக்கான தெளிவான ஒற்றை இலக்காக வைத்துள்ளீர்கள். ஐந்து மாத காலக்கெடுவுடன் உங்களுக்கான பயிற்சியை வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் என பிரித்துக்கொண்டு செயல்படத் தொடங்குகிறீர்கள்.
திட்டம்!
திட்டங்களை தயாரித்தல் என்பது நமது இலக்குகளை அடைவதற்கான முக்கிய மூலப்பொருள் என்பதை மறந்துவிடக்கூடாது. நம்மால் உருவாக்கப்படும் திட்டமானது எளிமையானதாக இருக்க வேண்டியது அவசியம். மேலும் திட்டத்தோடு சேர்ந்து அதற்கான செயல்பாட்டு முறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும். அதாவது எங்கு, எப்போது, எப் படி செயல்படுத்தப்போகிறோம் என் பது தெளிவாக இருக்க வேண்டும். அடுத்ததாக திட்டங்களை பழக்கங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
உதாரணம்: உங்களது மாரத்தான் போட்டிக்கான பயிற்சியை வாரத்திற்கு நான்கு முறை என்று திட்டமிடுகிறீர்கள். அதாவது, திங்கள்கிழமை வாக்கிங், புதன்கிழமை ரன்னிங், சனிக்கிழமை சைக்கிளிங் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஸ்விம்மிங் என்று பிரித்துக்கொள்கிறீர்கள். இதற்காக எளிதான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், சரியான நேரத்திற்கான அலாரம் என உங்கள் திட்டத்தை பழக்கமாக மாற்றுகிறீர்கள்.
அர்பணிப்பு!
நமது செயல்பாட்டில் நமக்கு இருக்கும் அர்பணிப்புக்கான உறுதிமொழியை மேற்கொள்ள வேண்டும். மேலும் இது முதன்மையான நமது இலக்குடன் பிணைக்கப்பட்டதாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அடுத்ததாக நமது நம்பிக்கையை பெற்ற ஒருவரை நமது செயல்களின் மீதான ஆய்விற்கான மத்தியஸ்தராக நியமனம் செய்துகொள்ள வேண்டும். இவர் பாராட்டுகளோடு நமது தவறுகளை சுட்டிக்காட்டுபவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.
உதாரணம்: உங்களது இலக்கு, திட்டம் மற்றும் பயிற்சி முறைகளைப் பற்றியும், அதன் மீதான அர்பணிப்பு பற்றியும் உங்களது குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவியுங்கள். அவர்களில் ஒருவரை உங்களுக்கான மத்தியஸ்தராக, உங்களது ஒவ்வொரு வார பயிற்சிகளையும் கண்காணிப்பவராக அமர்த்திக்கொண்டு, அவரது ஆலோசனைகளையும் கேட்டு செயல்படுங்கள்.
எந்தவொரு செயலுக்கும் உந்துசக்தி நிச்சயம் தேவை அல்லவா!. நமது இலக்குடன் சேர்த்து, அதற் கான வெகுமதியையும் முன்னரே தீர்மானம் செய்துகொள்ளுங்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள். இந்த பணியை முடித்தபின் இது எனக்கு கிடைக்கும் என்று முடிவுசெய்து பணியாற்ற வேண்டும். இவ்வாறான சிறு சிறு வெகுமதிகள் நமக்குநாமே கொடுத்துக்கொள்ளும் மாபெரும் ஊக்கங்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.
உதாரணம்: ஐந்து மாதங்களுக்குப் பிறகு அதாவது உங்களது இலக் கான மராத்தான் வெற்றிக்குப் பிறகு, நீண்ட சுற்றுலா செல்லும் வகையில் ஒரு திட்டத்தை வடிவமைத்துக்கொள்கிறீர்கள். வெற்றிபெற்றால் மட்டுமே அந்த சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இதை உங்களது பயிற்சிக்கான சிறந்த ஊக்கமாகவும் தூண்டுதலாகவும் பயன்படுத்துகிறீர்கள்.
பங்கி(கீ)டு!
நாம் மற்றவர்களைப்பற்றி என்ன நினைக்கிறோம் மற்றும் மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் தாக்கம் நம்மிடையே உண்டு. மற்றவர்களின் உதவியை நமது செயல்பாடுகளுக்கு கேட்டுப்பெறுதல் அவசியமான ஒன்று. இது நமது செயல்பாட்டை விரைவாக்குவதோடு, நம்மை ஆச்சரியப்படுத்தவும், அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளவும் உதவலாம். நமது செயல்பாடுகளுடன் ஒத்துப்போகிற மற்றும் அதே செயல்பாடுகளைக் கொண்டிருக்கிற மற்ற நபர்கள் மற்றும் குழுக்களுடன் நமது பணியை பங்கீடு செய்துக்கொள்வது அதிக பயனளிக்கும் செயல்.
உதாரணம்: மராத்தான் பயிற்சிக்கான உதவியாக சில விஷயங்களை உங்களது குடும்ப உறுபினர்களிடமும் நண்பர்களிடமும் கேட்டுப்பெறுகிறீர்கள். அதாவது சரியான நேரத்திற்கு உணவு தயாரித்தல், பயிற்சியினால் ஏற்படும் பணி பாதிப்பை சரிகட்டுதல், பயிற்சிக்கு அவர்களை துணைக்கு அழைத்தல் போன்றவை. மேலும், அதே போட்டியில் பங்குபெறும் மற்றவர்கள் மற் றும் குழுக்களுடன் இணைந்து உங்களது பயிற்சியை மேம்படுத்திக் கொள்கிறீர்கள்.
மதிப்பீடு!
மதிப்பீடானது தொடர்ச்சியான செயல்பாட்டிற்கான ஒரு பயனுள்ள கருவியாக பார்க்கப்படுகிறது. எந்தளவிற்கு நமது பணியில் நாம் திறம்பட செயலாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. குறிப்பிட்ட இடைவெளியில் தேவையான மதிப்பீடுகளை மேற்கொண்டு, அதன்மூலம் நமது செய லில் தேவையான மாற்றங்களைச் செய்துக்கொள்வது சிறந்தது. மற்றவர்களின் செயல்பாடுகளோடு நமது செயல்பாட்டினையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதும் நமக்கான மதிப்பீட்டின் ஒரு பகுதியே.
உதாரணம்: குறிப்பிட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை உங்களால் கடக்க முடிகிறதா, பயிற்சியின்போது ஏதேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறதா, தினசரி பணி மற்றும் பயிற்சிக்கு இடையேயான நேர மேலாண்மை சரியாக இருக்கிறதா போன்ற விஷயங்களை அவ்வப்போது மதிப்பிட்டுக்கொள்கிறீர்கள். அதுபோல உங்களது பயிற்சி திட்டம் மற்றும் பயிற்சி முறைகள் எவ்வாறு மற்றவர்களின் பயிற்சி திட்டங்களோடு ஒத்துப்போகிறது அல் லது வேறுபடுகிறது என்பதையெல் லாம் மதிப்பிடுகிறீர்கள்.
பற்று(தல்)!
நமது இலக்கின் மீது நமக்குள்ள அதீத பற்றே நம்மை வெற்றியடைச் செய்யும். ஆம், நமது செயல்பாட்டின் ஊடே நமது பணியை மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். நமது செயல்திறனை அதிகரிக்கும் வகை யில் சிறு சிறு புதிய பரிசோதனைகளைச் செய்துபார்க்க வேண்டும். அதன்மூலம் எதை அதிகரித்துக்கொள்ள வேண்டும், எதை குறைத்துக்கொள்ள வேண்டும், எதை முழுவதுமாக நீக்க வேண்டும் என்பதையெல்லாம் அறிந்துக்கொள்ள முடியும். இதனோடு நம்மால் செய்து முடிக்கப்படும் சிறிய வெற்றியையும் கொண்டாடி மகிழவேண்டும்.
உதாரணம்: மராத்தான் ஓட்டத்திற்கான பயிற்சியின் இடையே உங்களது ஆற்றலையும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திக்கொள்கிறீர்கள். அதுபோல பல்வேறு வகையான மாறுபட்ட பயிற்சிகளையும், அதற்கான உபகரணங்களையும் பயன்படுத்திப் பார்க்கிறீர்கள். அதன் மூலமாக தேவையற்றவைகளை நீக்கி, சிறந்தவற்றை போட்டியின் போது பயன்படுத்துகிறீர்கள். அதனோடு ஒவ்வொரு வெற்றிகரமான பயிற்சி முடிவினையும் கொண்டாடு கிறீர்கள்.
புதிய திட்டங்களை செயல்படுத்த நினைப்பவர்களுக்கும், தனது தற்போதைய நிலையை இன்னும் அதிக பயனுள்ளதாகவும் சிறந்ததாகவும் மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக் கும் நல்லதொரு வழிகாட்டி இப்புத்த கம்.
p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT