Published : 26 Feb 2018 10:28 AM
Last Updated : 26 Feb 2018 10:28 AM
இந்தியாவிலேயே முதன்முறையாக மிதக்கும் சந்தையை உருவாக்கி இருக்கிறது கொல்கத்தா நகர்ப்புற வளர்ச்சிக் கழகம். இது உருவானதன் பின்னணியில் 228 வியாபாரிகளின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கிறது.
வைஷ்ணவ் கட்டா-பட்டூலி புறவழிச்சாலையின் ஓரத்தில் இந்த சந்தை இருந்தது. மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், பழ மார்க்கெட் என மொத்தம் 228 கடைகள். இது 4 வழிச்சாலை. போக்குவரத்து அதிகமாக இருந்ததால், சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்தது மேற்குவங்க மாநில அரசு. அப்படி மாற்றும்போது, கடைகள் இருக்கும் இடத்தில் சாலை வந்துவிடும். கடைகளுக்கு இடமிருக்காது. ஆனால் இதை நம்பி இருக்கும் வியாபாரிகளுக்கு அருகிலேயே வேறு இடத்தில் இடம் கொடுத்தால்தான் காலி செய்ய முடியும் என்ற நிலை. அப்போதுதான், மாநகராட்சி அதிகாரிகளின் கண்ணில் பட்டது பட்டூலி ஏரி.
ஏரியில் மண்ணை நிரப்பி மூடிவிட்டு அங்கு சந்தையை உருவாக்கலாம் என்பதுதான் முதல் யோசனை. ஆனால் அதற்கு அதிகம் செலவாகும். கால தாமதமும் ஆகும். என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான், மிதக்கும் சந்தை ஐடியா உருவானது. தாய்லாந்து, வெனீஸில் இருப்பதுபோல், புதுமையாக ஏதாவது செய்யலாமே என்ற யோசனையின் வெளிப்பாடுதான் இந்த சந்தை.
இதற்காக ஆழம் குறைவான பட்டூலி ஏரியையும் அதன் அருகில் இருந்த மற்றொரு குட்டையையும் இணைத்து ஏரியை பெரிதாக்கினார்கள். 400 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் கொண்ட நீர்ப்பரப்பாக அது விரிந்தது. அதில் படகுகளை உருவாக்கி, ஒரு படகுக்கு 2 கடைகள் வீதம் 228 கடைகளையும் அங்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. ரூ.6 கோடி செலவில் விசேஷ படகுகளும் ஏரியைச் சுற்றி பொதுமக்கள் நடந்து சென்று காய்கறிகள் வாங்க வசதியாக மர நடைபாதையும் உருவானது. அதோடு ஏரியின் குறுக்காகவும் மரப் பாலங்கள் அமைக்கப்பட்டு அங்கும் படகுகளை நிறுத்திவைத்தனர்.
தாய்லாந்தில் இருப்பதுபோல், பல வண்ணங்களில் அலங்காரப் படகு கடைகள் உருவாயின. காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி, பூக்கள் என ஒரு சந்தையில் இருக்கும் அத்தனை கடைகளும் இங்கும் இருக்கின்றன. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மார்க்கெட் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் மரப் பாலத்தில் நின்றவாறே தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம். பேடிஎம் மூலமும் பணம் செலுத்தலாம். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சந்தையை கடந்த மாதம் தொடங்கிவைத்தார்.
கொல்கத்தா வரும் சுற்றுலா பயணிகள் ஹௌரா பாலத்தையும் விக்டோரியா நினைவு இல்லத்தையும் காண ஆர்வமாக இருப்பார்கள். இனிமேல் அவர்கள் இந்த மிதக்கும் சந்தைக்கும் வருவார்கள். இந்தியாவிலேயே இதுதான் முதல் மிதக்கும் சந்தை என்பதால் அதைக் காண வரும் வெளியூர்க்காரர்களாலும் விற்பனை அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் ஏரியா கவுன்சிலர்.
இது உண்மைதான்.. என்கிறார் கடைக்காரர் ஒருவர். ஆரம்பத்தில் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவார்களா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், மிதக்கும் மார்க்கெட் புதுமையாக இருப்பதால், தொலைவில் இருக்கும் வாடிக்கையாளர்களும் சமீப காலமாக இங்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது வியாபாரம் களைகட்ட ஆரம்பித்து விட்டது என்கிறார் இங்கு மீன் கடை வைத்திருக்கும் பெண். மிதக்கும் சந்தை எப்படி இருக்கிறது என பார்க்க வருபவர்கள் கூட காய்கறிகளை வாங்கிச் செல்கிறார்கள். உண்மையிலேயே இது வித்தியாசமான அனுபவம்தான் என்கிறார்கள் அவர்கள்.
ஏரித் தண்ணீருக்குள் காய்கறிக் கழிவுகள், மீன் கழிவுகளைக் கொட்ட வேண்டாம். அப்படிச் செய்தால், துர்நாற்றம் ஏற்பட்டு வாடிக்கையாளர்கள் யாரும் வர மாட்டார்கள். விற்பனை படுத்துவிடும் என மாநகராட்சி அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மிதக்கும் சந்தை திட்டத்துக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்த கடைக்காரர்கள், வழக்கத்தை விட அதிகம் வாடிக்கையாளர்கள் வருவதால், சந்தோஷமாக இருக்கிறார்கள். விற்பனையும் அதிகரித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT