Last Updated : 26 Feb, 2018 10:27 AM

 

Published : 26 Feb 2018 10:27 AM
Last Updated : 26 Feb 2018 10:27 AM

சபாஷ் சாணக்கியா: தலைவன் எவ்வழி...

நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி கதைகளைப் படித்து விட்டு, இப்படிக் கூட ரூ.11,300 கோடி அளவுக்கு வங்கியில் மோசடி நடக்குமா, நடக்க முடியுமா என வியந்து, அசந்து, பயந்து போய் இருக்கின்றீர்களா? இந்தச் சோகக்கதையின் மற்ற பரிமாணங்களைப் பாருங்கள்.

நீரவ் மோடியின் ஃபயர்ஸ்டார் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான, அதாவது நம்பர் 1 பணியாளரான விபுல் அம்பானியைக் கைது செய்து விட்டனர்! அத்துடன் கவிதா மன்கிகர் எனும் பெண் உயரதிகாரியைக் கூடக் கைது செய்துள்ளனர்! சோக்ஸியின் நக்ஷத்திரா நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியான கபில் கண்டேல்வாலும் சிபிஐ-யின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை! உயர் பதவியும், பெரும் சம்பளங்களும் இருந்தென்ன பயன்? இன்று இவர்கள் அனுபவிப்பது சிறைவாசம், அவமானம்!

`ஒரு நாட்டின் அரசன் ஊக்கமாக இருந்தால்தான், குடிமக்களும் ஊக்கத்துடன் இருப்பார்கள். மன்னன் உத்வேகமின்றி இருந்தால், மக்களும் அப்படிதானே இருபார்கள். நாட்டின் செல்வமும் தேய்ந்து போகும்' எனும் சாணக்கியரின் கூற்றைச் சற்றே சிந்தியுங்கள். ஊக்கத்தில் மட்டுமில்லை, ஆக்கத்திலும் அப்படித்தானே! என்ன செய்வது, எப்படிச் செய்வது என எங்கும் எப்பொழுதும் வழிகாட்டுவது தலைமை தானே?

`மன்னன் எவ்வழியோ, மக்களும் அவ்வழியே' என்பது இக்கால வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும்! ரயில் பெட்டிகள் என்ஜினின் பின்னால் தானே போக முடியும்? முதலாளி சரியில்லை எனத் தெரிந்தவுடன் விலகிப் போய் விட வேண்டுமில்லையா?

மோசடியில் உடந்தையாக இருந்த உயரதிகாரிகளை விடுங்கள். இந்தச் சுனாமியில் அப்பாவிப்பணியாளர்களும் அடித்துச் செல்லப் படுகிறார்கள்! நீரவ் தனது ஃபையர்ஸ்டார் இன்டர்நேஷனல் உள்ளிட்ட இரு நிறுவனங்களின் பணியாளர்களிடம், இனி தன்னால் தொழிலை நடத்த முடியாது என்றும், நாடெங்கிலும் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும்,அதனால் பணியாளர்கள் அனைவரும் பிப்ரவரி மாதத்தில் தங்களது பணிமுடிவுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு ,வேறு வேலைகளைத் தேடிக்கொள்ள வேண்டியதுதான் என்றும் சொல்லிவிட்டார்.

ஹைதராபாத்தில் உள்ள மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் பார்க்கில் உள்ள 600 பணியாளர்களும் வேலையின்றித் தவிக்கின்றர். இந்த மோசடி வழக்கில் அங்கிருந்த வைரம் முதலானவற்றைப் அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததால், அந்தத் தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டதாம்.

அந்தப் பணியாளர்கள் மாற்று வேலை கேட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர். முதலாளி தவறு செய்ததால், இல்லை இல்லை, பெருந்தவறு செய்ததால், இவர்களுக்கும் தண்டனை. வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் கடுந்தண்டனை.

அண்ணே, ஒரு முதலாளி சரியில்லை என்றால், அவர் நிறுவனத்தில் பணிபுரியும் துர்பாக்கியவான்களும் பாதிக்கப்படுவது என்பது காலங்காலமாக நடந்து வரும் கொடுமை. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் ராமலிங்க ராஜூ பல ஆண்டுகளுக்கு வருவாயை உயர்த்திக் காண்பித்து ரூ.14,000 கோடி மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைதான பொழுதும், அப்பாவிப் பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.

அந்நிறுவனம் டெக் மஹிந்திராவுடன் இணைந்தது பின்கதை! சஹாரா குழுமத்தின் சுப்ரதா ராயை மறக்க முடியுமா? உரிய கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெறாமல், நிதி திரட்டியதாகக் குற்றச்சாட்டு. மோசடித் தொகை சுமார் ரூ. 39,000 கோடி. அப்புறம் என்ன? சஹாரா ஏர்லைன்ஸ் போலவே, குழுமத்தின் மற்ற நிறுவனங்களும் தரையிறங்கின. பணியாளர்கள் பாடு திண்டாட்டமாயிற்று. கிங்பிஷரின் மல்லையா கதையும் அப்படித்தான். அவர் இந்தியாவை விட்டே ஓடி விட்டார். கிங்பிஷர் ஏர்லைன்ஸின் பைலட்டுக்கள், விமானப் பணிப்பெண்கள் வேலையிழந்து, சம்பளம், மாற்று வேலை கேட்டுப் போராட வேண்டியதாயிற்று.

ஐயா, தப்பு செய்வது முதலாளி, பாதிக்கப்படுவதோ தொழிலாளி! தவ றான கொள்கை கொண்டவரிடம் வேலை செய்வதற்குக் கொடுக்கும் விலைங்க இது. அது சரி, இவற்றிலிரு ந்து மாறுபட்ட, மனதிற்கு இதமளி க்கும் ஒரு செய்தியும் தற்பொழுது முகநூலில் வலம் வந்து கொண்டிருக்கிறது!

சென்னை அடையாறில் `சிகாகோ டீ ஸ்டால்' எனும் ஒரு தேநீர்க் கடையாம்! இதன் முதலாளி சுகுமாரன் கடைக்கு இந்தப் பெயரை வைக்கக் காரணம், `8 மணி நேரத்திற்கே வேலை செய்வோம் ' எனும் தொழிலாளர் போராட்டம் முதலில் அமெரிக்காவின் சிகாகோ நகரில் துவங்கியதன் நினைவாகவாம்.

அவருடைய தொழிலாளர் நலக் கொள்கைகள் வியப்பளிப்பவை. பணியாளர்களுக்கு உணவு, நல்ல சம்பளம், ஒரு மாத போனஸ் போன்றவற்றுடன் ஆண்டுக்கு ரூ.2,000 உடைக்கு, 300 நாட்கள் வேலை செய்தால் 2 கிராம் தங்க நாணயம், மே தினத்தன்று 5 நட்சத்திர ஓட்டலில் மதிய விருந்து என கலக்குகிறாராம். அங்கே பணி செய்பவர்களிடம் உற்சாகம் கொப்பளிக்கும், அது சாப்பிட வருபவர்களிடமும் பிரதிபலிக்கும் என்பதைச் சொல்லவா வேண்டும்? என்ன, தலைமை குறித்த சாணக்கியர் கூற்று சரி தானே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x