Published : 05 Feb 2018 11:50 AM
Last Updated : 05 Feb 2018 11:50 AM
டீ
சல் கார்கள் வெளியிடும் நச்சுப் புகை குறித்து ஜெர்மனியின் பிரபல கார் நிறுவனங்கள் நடத்திய சோதனை மிகப் பெரிய கண்டனத்தை சந்தித்து வருகிறது. சோதனைகள் அவ்வப்போது நடப்பது தானே என்பவர்களுக்கு... இந்த சோதனை மனிதர்கள் மற்றும் குரங்குகள் மீது நடந்துள்ளது. அதனால்தான் இவ்வளவு பெரிய கண்டன அலைகள்... சோதனை நடத்திய கார் நிறுவனங்கள் ஃபோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ மற்றும் டெய்ம்லர்.
2014-ம் ஆண்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையின் நோக்கம், புதிய டீசல் கார் தொழில்நுட்பத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை என நிரூபிப்பதுதான். டீசல் புகை காரணமாக ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சினைகள் உருவாவதும் அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. புதிய ஆய்வுகளை நடத்தி அந்த எண்ணத்தை மாற்றுவதுதான் கார் நிறுவனங்களின் நோக்கம். ஆனால் அதற்கு அந்த நிறுவனங்கள் மேற்கொண்ட வழிமுறைகள் இப்போது பிரச்சினையாகி விட்டன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பீட்டில் டீசல் காரில் இருந்து வரும் புகையை தொடர்ந்து 4 மணி நேரம் சுவாசிக்கும் வகையில் ஒரு கூண்டில் குரங்குகள் அடைக்கப்பட்டிருந்தன. மற்றொரு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குரங்குகள் போர்டு நிறுவனத்தின் டீசல் பிக்அப் காரின் புகையை சுவாசித்தன. அதன்பிறகு, அந்த குரங்குகளின் நுரையீரலில் இருந்து திசுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட குரங்குகள் சாகவில்லை. ஆனால் அதன்பிறகு அவற்றுக்கு என்ன ஆனது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த சோதனையை சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துக்கான ஐரோப்பிய ஆய்வுக்குழு (ஈயூஜடி) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. கடந்த ஆண்டில் இந்த அமைப்பு கலைக்கப்பட்டு விட்டது. இதற்கு ஃபோக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ, டெய்ம்லர் மூன்று நிறுவனங்களும் நிதியுதவி செய்துள்ளன.
இதேபோன்ற மற்றொரு சோதனையில் மனிதர்களை நைட்ரஜன் டையாக்ஸைடை சுவாசிக்க வைத்துள்ளனர். இதுதான் வாகனப் புகையில் வெளியேறும் நச்சு வாயு. சிறிது நேரம் இதை சுவாசித்தாலே மோசமான உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது இந்த வாயு. அடர் நைட்ரஜன் டையாக்ஸைடை சுவாசிப்பதால் சுவாச மண்டலத்தில் எரிச்சல் ஏற்படும். சுவாச கோளாறுகளை உருவாக்கும். இருமல், மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக ஆஸ்துமா ஏற்பட வாய்ப்பு அதிகம்.
``மனிதர்கள் மீதான இந்த சோதனை கடந்த 2012 முதல் 2015-ம் ஆண்டு வரை நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனை நடத்தியது கார் நிறுவனங்களுக்குத் தெரியும்'' என இந்த சோதனையில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். டெய்ம்லர், போக்ஸ்வேகன், பிஎம்டபிள்யூ மற்றும் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் போஸ் நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய ஆராய்ச்சி அமைப்புதான் இந்த சோதனைகளை நடத்தியுள்ளது.
இதே நைட்ரஜன் ஆக்ஸைடு பிரச்சினையில்தான் ஃபோஸ்க்வேகன் நிறுவனம் ஏற்கனவே சிக்கி சீரழிந்தது. தனது டீசல் கார் வெளியிடும் புகையில் நச்சுத் தன்மையை குறைத்துக் காட்டும் வகையில் சாப்ட்வேரை பொருத்தி, வாடிக்கையாளர்களையும் அரசுகளையும் பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்தது. உலகம் முழுவதும் 1 கோடி கார்களை விற்றது. அமெரிக்காவில் மட்டும் 5 லட்சம் கார்களை விற்பனை செய்தது. பின்னர் இது கண்டுபிடிக்கப்பட்டு 2,500 கோடி டாலர்கள் வரை அபராதமாக செலுத்தியது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கிவிட்டது.
முதலில் ``தி நியூயார்க் டைம்ஸ்’’ தான் இது தொடர்பான செய்தியை வெளியிட்டது. அதன்பிறகு ``டர்ட்டி மணி” என்ற பெயரில் நெட்பிளிக்ஸில் ஆவணப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து கார் நிறுவனங்களுக்கு எதிரான கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. உலகம் முழுவதும் 6.5 கோடி ஆதரவாளர்களைக் கொண்ட பீட்டா அமைப்பு குரங்குகளை சோதனைக்கு பயன்படுத்தியதைக் கண்டித்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. ``காற்று, சூரிய ஒளி இல்லாத இடத்தில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட நிலையில் சோதனைச் சாலைகளில் நச்சுவாயுவை செலுத்தி குரங்குகளை கொடுப்படுத்தியதை ஏற்கவே முடியாது'' எனக் கூறியுள்ளது.
``இதுபோன்ற சோதனைகளை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இதற்கு நிதியுதவி செய்த நிறுவனங்களின் நேர்மை குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது'' என ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கண்டித்திருக்கிறார்.
ஆனால் இப்படி ஒரு சோதனை நடந்ததே தங்களுக்குத் தெரியாது என மூன்று நிறுவனங்களும் கோரஸாக மறுத்துள்ளன. ``எங்களுக்கே இது அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம்'' என டெய்ம்லர் நிறுவனம் கூறியுள்ளது.
``நாங்கள் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்கவே இல்லை'' என பிஎம்டபிள்யூ மறுத்துள்ளது. ``ஆராய்ச்சியாளர்களையே இப்படியெல்லாமா செய்வார்கள்'' என குறை கூறியுள்ளது ஃபோக்ஸ்வேகன். ``விலங்குகள் மீது சோதனை செய்வது என்பது எங்கள் நிறுவன கொள்கைகளுக்கு விரோதமானது. இருந்தாலும் நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்'' எனக் கூறியுள்ளது இந்நிறுவனம்.
பெரிய நகரங்களில் டீசல் கார்களால் காற்று மாசு அதிகம் ஏற்படுவதால் டீசல் கார்களின் எண்ணிக்கையைக் குறைக்க பல நாடுகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த நிலையில் டீசல் கார்களால் அவ்வளவு அதிகம் பாதிப்பு வராது என்றும் தற்போதைய டீசல் இன்ஜின் தொழில்நுட்பம் முன்னேறியுள்ளதால் மாசு குறைவாகவே ஏற்படும் என்றும் ஆய்வுகள் மூலம் நிரூபிப்பதுதான் இந் நிறுவனங்களின் நோக்கம். அதற்காகத்தான் இதுபோன்ற ஆய்வுகளைச் செய்து வருகின்றன.
மேலும் பிஎம்டபிள்யூ, டெய்ம்லர், ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்களின் சொகுசு கார்கள் அனைத்தையும் டீசல் மாடலாகவே அறிமுகம் செய்துள்ளன. டீசல் விலை குறைவாக இருப்பதால், இந்தக் கார்களின் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என வாடிக்கையாளர்கள் வாங்கி வருகிறார்கள். இதே கார்களை பெட்ரோல் மாடலில் விற்பனை செய்தால் விற்பனை பெருமளவு குறைந்து விடும் என்பதால், டீசல் புகை ஆபத்தில்லை என நடக்கும் ஆய்வுகளுக்கு இந்தக் கார் நிறுவனங்கள் பெருமளவில் நிதியுதவி செய்து வருகின்றன என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT