Published : 12 Feb 2018 11:38 AM
Last Updated : 12 Feb 2018 11:38 AM
`` ஒபாமா கேர் திட்டம் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியடைந்ததா என்பது எனக்குத் தெரியாது ஆனால் ஒருநாள் ``மோடி கேர்’’ திட்டம் வெற்றிகரமான திட்டம் என மக்களே கூறுவர்.’’ பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அருண் ஜேட்லி கூறிய வாசகம்தான் இது.
ஒபாமாகேர் என்னவாயிற்று என்று தெரியவில்லை என்றதன் மூலம் அவர் எந்த அளவுக்கு அதைப்பற்றி அறியாமலிருக்கிறார் என்பது புரிகிறது. ஒபாமாவைத் தொடர்ந்து வந்த அதிபர் இதை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் மருத்துவ காப்பீடாக கொண்டு செல்ல திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான இதற்கு ``நமோ கேர்’’ என்று நாமகரணம் சூட்டியுள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா.
ஒரு குடும்பத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வீதம் 10 கோடி குடும்பங்களுக்கு. அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் (50 கோடி) இந்த மருத்துவக் காப்பீட்டால் பயன் பெறுவர் என்பதுதான் ஜேட்லி பட்ஜெட்டின் சாராம்சம்.
ஒபாமா கேர் எனப்படும் திட்டமே கட்டுபடியாகும் மருத்துவ காப்பீடு ஆகும். இது 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது அனைத்து அமெரிக்கர்களும் வசதி படைத்தவர்களும் நடுத்தர குடும்பத்தினரும், ஏழைக் குடும்பத்தினருக்கும் கட்டுபடியாகும் விலையில் மருத்துவக் காப்பீட்டை அளிப்பதாகும். பொதுமக்களுக்கு சலுகை அடிப்படையில் அதாவது வரிச் சலுகையாக அரசு ஆதரவிலான காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தை மனதில் கொண்டு இந்த ஆண்டு சுகாதாரத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 52,800 கோடியாகும். கடந்த ஆண்டை விட 11.5 சதவீதம் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் ரூ. 47,353 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேசிய சுகாதார திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 30,801 கோடியிலிருந்து ரூ. 30,129 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்தத் திட்டத்தை அறிவித்தபோது அவையிலிருந்த பாஜகவினர் மேஜையைத் தட்டி ஆர்ப்பரித்தனர். ஆனால் இந்த திட்டத்துக்கு ஆரம்ப கட்ட பட்ஜெட் ஒதுக்கீடு வெறும் ரூ. 2 ஆயிரம் கோடி மட்டுமே. மிகவும் உபயோகமான இத்திட்டத்துக்கு உரிய பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாமல் இதை எப்படி அறிவிக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.
பட்ஜெட் வெளியான மாலையே இத்திட்ட உருவாக்கம் இனிதான் என்பது தெரியவந்தது. அரசு அதிகாரிகள் இனிமேல்தான் இதற்கு வடிவம் கொடுக்கப் போகிறார்கள் எனும்போது இத்திட்டம் எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஒபாமாகேர் திட்டத்தின் கீழ் 2.6 கோடி குழு மருத்துவக் காப்பீட்டுக்கு 4,200 கோடி டாலர் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டது. மோடி கேர் திட்டமோ 10 கோடி குடும்பங்களுக்கானது. ஆனால் ஒதுக்கப்பட்ட தொகையோ 30 கோடி டாலர். அமெரிக்காவில் ஆகும் மருத்துவ செலவுடன் ஒப்பிடுகையில் 10-ல் ஒரு பங்குதான் இந்தியாவில் செலவாகும். அப்படியிருக்கும்போது இத்திட்டத்தை செயல்படுத்த 1,500 கோடி டாலர் தேவைப்படும். அதாவது 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். 50 கோடி மக்களுக்கு காப்பீடு என்றால் ஒருவருக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 40 ஆகும். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்காகவும் 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பாக இருக்கும் என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநில அரசின் பங்களிப்போடு நிறைவேற்ற வேண்டிய இந்தத் திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதாக தெரியவில்லை.
தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே அந்தந்த மாநில அரசுகள் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. மோடி கேர் வந்தால் இவை என்னவாகும். ஒரு வேளை மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் இந்த மாநில அரசுகளின் மருத்துவ காப்பீட்டு திட்டம் பாதியில் கைவிடப்படுமா?
இந்தியாவில் சிசு மரணம் அதிகமாக உள்ளது. ஆயிரம் குழந்தைகளில் 50 குழந்தைகள் இறந்துவிடுகின்றன. டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை, காச நோய், மலேரியா, நிமோனியா உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் பெருமளவு முன்னேற்றத்தை எட்டவில்லை.
நாட்டில் 12 கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. 33 சதவீத மக்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கான வசதி உருவாக்கப்படவில்லை.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 68 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்களில் பாதிக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். இவர்கள் அனைவருமே போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்படுபவர்களாவர். மலேரியா, நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுவோரும், புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் இப்பிரிவில் அதிகம்.
இந்தியாவில் மருத்துவத்துக்கான ஒதுக்கீடு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத அளவுக்குத்தான் உள்ளது. ஆனால் அமெரிக்காவில் இத்துறைக்கான ஒதுக்கீடு 5 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டருக்கும் குறைவு (0.62) என்ற விகிதத்தில்தான் டாக்டர்கள் உள்ளனர். நாட்டில் மொத்தம் 10.22 லட்சம் டாக்டர்கள் மட்டுமே பதிவு பெற்று பணியாற்றுவதாக மருத்துவக் கவுன்சில் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் மொத்தம் 479 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒரு ஆண்டுக்கு இங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 67,218 பேர்தான்.
ஜெர்மனியில் மட்டும்தான் ஆயிரம் பேருக்கு 4.12 டாக்டர்கள் உள்ளனர். உலகிலேயே அதிக அளவிலான மருத்துவ வசதி கொண்ட நாடாக ஜெர்மனிதான் திகழ்கிறது. வங்கதேசத்தில் ஆயிரம் பேருக்கு 0.38 என்ற விகிதத்திலும் என்ற விகிதத்திலும் டாக்டர்கள் உள்ளனர்.
ஜெர்மனியைப் பார்த்து வியந்து போவதா, வங்கதேசத்தையும் பார்த்து ஆறுதல் அடைவதா.
மருத்துவக்காப்பீடு பெற வேண்டும் என்றால் மருத்துவமனையில் 24 மணி நேரம் தங்கி சிகிச்சை பெற்றிருக்க வேண்டும். கிளைம் பெறுவதற்கு மருத்துவமனைகளுக்கு சில அடிப்படை தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அந்த வகையிலான மருத்துவமனைகள் அனைத்து பகுதிகளிலும் அனைத்து மக்களும் சென்றடையும் வகையில் உள்ளனவா?
போதிய அளவுக்கு மருத்துவ மனைகள் இல்லாத நிலையில் காப்பீடு மட்டும் மக்களின் கைகளில் இருந்து என்ன பயன்?
நோயாளிகளைக் காப்பாற்றுமா மோடிகேர்?
- ramesh.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT